
மஞ்சூர்: நீலகிரி மாவட்டம் மஞ்சூருக்கு அருகில் உள்ள எமரால்டு பகுதியில் உள்ள நீரோடையில் மர்மமான முறையில் உயிரிழந்த இரண்டு புலிகள் விஷத்தால் உயிரிழந்தது கண்டுபிடிப்பு. இது தொடர்பாக விவசாயியை வனத்துறையினர் கைது செய்தனர்.
நீலகிரி வனக்கோட்டம், எமரால்டு ஊருக்கு அருகில் அவிலாஞ்சி அணை உபரி நீர் வெளியேறும் கால்வாயில் மற்றும் அதன் கரையில் இரண்டு புலிகள் மர்மமான முறையில் உயிரிழந்ததை கண்ட மக்கள் வனத்துறையினருக்கு தகவல் அளித்தனர். தகவலின் பேரில் நீலகிரி வன அலுவலர் கவுதம் மற்றும் வனத்துறையினர் புலிகளின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனை செய்து புலிகளின் உடல்களை எரியூட்டனர்.
பிரேத பரிசோதனையின் இடைக்கால அறிக்கையின் அடிப்படையில் உயிரிழந்த புலிகளில் ஒன்று சுமார் 8 வயதுடைய ஆண் புலி. இந்த புலிக்கு வெளிப்புற காயங்கள் இல்லை. அனைத்து உடல் பாகங்களும், கோரை பற்கள் மற்றும் நகங்கள் உட்பட அப்படியே இருந்தன. வயிற்றில் திரவத்துடன் கூடிய முடி இருந்தது.
இரண்டாவது ஆண் புலிக்கு சுமார் 3 வயதிருக்கும். உடற்கூராய்வில் இந்த புலிக்கு முதுகெலும்பு நெடுவரிசையின் எலும்பு முறிவுடன் முதுகு மற்றும் கழுத்தில் வெளிப்புற காயங்கள் காணப்பட்டன. காயங்கள் மற்றொரு புலியுடன் ஏற்பட்ட சண்டையின் காரணமாக இருக்கலாம். அனைத்து உடல் பாகங்களும் முழுமையாக இருந்தன. வயிற்றில் முள்ளம்பன்றி முட்கள், முடி மற்றும் இரை இனத்தின் இறைச்சி ஆகியவை இருந்தன.
தடயவியல் மற்றும் நச்சுயியல் பகுப்பாய்வுக்காக மாதிரிகள் சேகரிக்கப்பட்டன. புலிகள் இறந்த இடத்தின் அருகில் ஒரு மாட்டின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டது. இதனால், புலிகள் விஷத்தால் கொல்லப்பட்டனவா என்ற கோணத்தில் வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.
உதவி வனப்பாதுகாவலர் தேவராஜ் தலைமையில் 20 பேர் கொண்ட சிறப்புக்குழு மோப்ப நாயுடன் அப்பகுதி மற்றும் அருகில் இருந்த குடியிருப்பு பகுதிகளில் விசாரணை மேற்கொண்டனர்.

நீலகிரி வன அலுவலர் கவுதம் கூறியதாவது: இரு புலிகள் இறந்த பகுதியின் அருகில் இறந்த மாட்டின் உடல் கைப்பற்றி பிரேத பரிசோதனை செய்து அதிலிருந்து மாதிரிகள் சேகரிக்கப்பட்டது. மாதிரிகளை கோவை சாக்கான், ஆனைகட்டி மற்றும் தடவியல் ஆய்வுக்காக அனுப்பி வைக்கப்பட்டு இருக்கிறது.
இறந்த புலிகள் தொடர்பாக குழு அமைத்து அருகில் உள்ள கிராமங்களில் மாடு ஏதாவது காணாமல் போயிருக்கிறதா என்ற கோணத்தில் விசாரணை மேற்கொண்டனர். விசாரனையின் போது எமரால்டு பகுதியை சேர்ந்த சேகர் என்பவருடைய மாடு கடந்த 10 தினங்களுக்கு முன்பு காணாமல் போயிருந்ததாக சிலர் தெரிவித்தனர்.
அதன் அடிப்படையில் சேகரிடம் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டது. விசாரணையில் அவருடைய மாடு பத்து தினங்களுக்கு முன்பு காணாமல் போனதை தெரிவித்தார். பின்னர் மாடு காணவில்லை என்று தேடி சென்ற போது, மாடு அவிலாஞ்சி அணை உபரி நீர் வெளியேறும் கால்வாய் அருகே மர்ம விலங்கால் கடித்து கொல்லப்பட்டது தெரிய வந்துள்ளது. இதனால், ஆத்திரம் அடைந்த அவர், மாட்டின் உடலில் பூச்சிக்காக பயன்படுத்தப்படும் மருந்தை வைத்து விட்டு வந்ததாக தெரிவித்தார்.
அவருடைய வாக்குமூலத்தின் அடிப்படையில் சேகர் கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இவ்வாறு அவர் தெரிவித்தார்.