
உதகை / கோவை: நீலகிரி மாவட்டத்தில் விதி மீறி நடைபெறும் கட்டுமான பணிகளை தடுக்க வேண்டும் என்று, உதகையில் அன்புமணி ராமதாஸ் தெரிவித்தார்.
நீலகிரி மாவட்டம் உதகை காபி ஹவுஸ் பகுதியில் பாமக கொடியேற்று விழா நடைபெற்றது. மாவட்ட செயலாளர் குணசேகரன் தலைமை வகித்தார். அமைப்பு செயலாளர் ஜான்லியோ, மாவட்ட தலைவர் அம்ஷா, நகரச் செயலாளர் பசுமை சதிஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
பின்னர் கட்சிக் கொடியை ஏற்றி வைத்து பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் பேசியதாவது, “தமிழகத்தில் கடந்த 55 ஆண்டுகளாக திமுக, அதிமுக ஆகிய இரு கட்சிகள் மாறி மாறி ஆட்சி நடத்தி வருகின்றன.எங்களுக்கு ஒரு வாய்ப்பு கொடுங்கள். பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி காட்டுகிறோம். 50 ஆண்டுகளில் இல்லாத வளர்ச்சியை 5 ஆண்டுகளில் செய்து காட்டுகிறோம். நீலகிரி மாவட்டத்தில் பசுந்தேயிலைக்கு போதிய விலை கிடைக்காததால், விவசாயிகள் பாதித்துள்ளனர். பசுந்தேயிலை கிலோ ஒன்று ரூ.30 விலை கிடைக்கமத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.
இதை தொடர்ந்து செய்தியாளர்களிடம் அவர் கூறும்போது, ” நீலகிரி மாவட்டத்தில் விதிமுறைகளை மீறி கட்டுமான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. எங்கு பார்த்தாலும், சாலைகள், கட்டுமான பணிகள் மேற்கொள்ளப்படுவதால் நிலச் சரிவு அபாயம் ஏற்பட்டுள்ளது. விதிமுறைகள் மீறி நடக்கும் கட்டுமான பணிகளை தடுக்க,1993-ம் ஆண்டு ஜெயலலிதா கொண்டு வந்த மாஸ்டர் பிளான் சட்டம் போன்று, தற்போது உள்ள அரசும் ஒரு சட்டத்தை கொண்டு வந்து நீலகிரியை காப்பாற்ற வேண்டும்.
ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் குழு அமைத்து, விதிமுறைகளை மீறி கட்டுமான பணிகள் மேற்கொள்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்கும் வகையில், கூடலூர் பகுதியில் இயங்கும் தார் கலவை தயாரிக்கும் தொழிற்சாலையை மூட நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழக ஆளுநரும், முதல்வரும் இணைந்து செயல்பட வேண்டும். குறிப்பாக, ஆளுநர் நடுநிலையாக செயல்பட வேண்டும். ஆளுநர் அரசியல் ஆதாயம் தேடக்கூடாது.
அரசியல் கருத்துகளை முன்வைக்கக் கூடாது. குடியரசு தலைவர் என்ன நிலையில்உள்ளாரோ, அதேபோல ஆளுநர்செயல்பட வேண்டும். மக்களவை தேர்தலுக்கு நான்கு மாதங்கள்உள்ளதால், பாமக-வின் நிலைப்பாடு பின்னர் அறிவிக்கப்படும். நீலகிரி மாவட்டத்தில் யானைகள் உயிரிழப்புகளை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
முன்னதாக, கோவை வந்த அவர் விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் கூறும்போது, “கோவை மாநகரில் சீரான முறையில் குடிநீர் விநியோகிக்கப்படுவதில்லை. 10 முதல் 15 நாட்களுக்கு ஒரு முறை மட்டுமே குடிநீர் விநியோகிக்கப்படுகிறது. சாலைகள் தரமற்ற முறையில் போடப்பட்டுள்ளன.
கோவை மீது முதல்வர் தனி கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும். தடாகம் பகுதியில் இயற்கை வளங்கள் சூறையாடப்படுவது தொடர்கிறது. ஜனவரி 7,8-ம் தேதி சென்னையில் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டை நடத்த தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. அதற்கு முன் தொழில் நிறுவனங்களை தக்க வைக்க வேண்டும்.
தமிழகம் முழுவதும் மின் கட்டண உயர்வு, ஜிஎஸ்டி உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் 50 சதவீத எம்எஸ்எம்இ தொழில் நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. உரிய நடவடிக்கைகளை எடுத்து தொழில் நிறுவனங்களை காப்பாற்ற வேண்டும். தொழிற்சாலைகள் அமைக்க விளை நிலங்களை கையகப்படுத்தமாட்டோம் என முதல்வர் அறிவிக்க வேண்டும்” என்றார்.