
தேனி: தேனி மாவட்டத்தில் மழை குறைந்ததால் வைகை அணைக்கான நீர்வரத்தும் வெகுவாய் குறைந்தது. இதனால் கடந்த 4 நாட்களாக வெளியேற்றப்பட்டு வந்த உபரிநீர் நிறுத்தப்பட்டு, பாசனம் மற்றும் குடிநீர் திட்டங்களுக்கு மட்டுமே தண்ணீர் திறக்கப்பட்டுள்ளன.
வைகை அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீர், பூங்காவில் உள்ள தரைப்பாலம், ஆண்டிபட்டி சாலையில் உள்ள பெரியபாலத்தை கடந்து செல்கிறது. பின்பு இந்த நீர் முதலக்கம்பட்டி ஊராட்சியில் உள்ள வைகைப்புதூர் எனும் இடத்தில் உள்ள பிக்அணையில் தேக்கப்படுகிறது. இதற்காக ஆற்றின் குறுக்கே இருகரைகளுக்கு இடையில் நீளமான தடுப்பணை கட்டப்பட்டுள்ளது.
இங்கிருந்து திண்டுக்கல், மதுரை மாவட்ட பாசனத்துக்கு கால்வாய் மூலமும், ஆற்றின் வழியாகவும் இருபகுதிகளாக தண்ணீர் பிரித்து அனுப்பப்படுகிறது. இது தவிர, பிக்அப் அணையில் தேக்கப்பட்ட தண்ணீர் பம்பிங் செய்யப்பட்டு பல்வேறு குடிநீர் திட்டங்களுக்காகவும் பயன்படுத்தப்படுகிறது. இந்நிலையில் கடந்த சில வாரங்களாக வடகிழக்கு பருவமழை தொடர்ந்ததால் அணைக்கான நீர்வரத்து அதிகரித்தது. இதனால் கடந்த 11-ம் தேதி நீர்மட்டம் 70.5அடியாக (மொத்த அடி 71அடி) உயர்ந்தது.
இதனைத் தொடர்ந்து திண்டுக்கல், மதுரை மாவட்ட முதல்போக பாசனத்துக்காக விநாடிக்கு 900 கனஅடிநீர் திறக்கப்பட்டது. இந்நிலையில் மாவட்டத்தில் மழை வெகுவாய் குறையத் தொடங்கியது. அதிகபட்ச அளவாக மஞ்சளாறு அணையில் 3மி.மீ., ஆண்டிபட்டியில் 2.6மி.மீ, பெரியகுளத்தில் 2.4 மி.மீ சோத்துப்பாறையில் 1 செ.மீ. மழை மட்டுமே பதிவாகியுள்ளது.
மழைமானி அமைக்கப்பட்ட 13 இடங்களில் இந்த 4 இடங்களில் மட்டுமே மழை பெய்துள்ளது குறிப்பிடத்தக்கது. மழை குறைந்ததாலும், பெரியாறு அணையில் இருந்து விநாடிக்கு 105 கனஅடி நீரே திறக்கப்படுவதாலும், வைகை அணைக்கான நீர்வரத்து வெகுவாய் குறைந்து வருகிறது. கடந்த வாரம் விநாடிக்கு 3ஆயிரம் கனஅடிநீர் வந்தநிலையில் படிப்படியாக குறைந்து 748 அடியாக மாறியது. நீர்வரத்து குறைந்ததால் கடந்த 4 நாட்களாக வெளியேற்றப்பட்டு வந்த உபரிநீர் நிறுத்தப்பட்டது.
பாசனதுக்காக வாய்க்கால் வழியே 900 கனஅடியும், குடிநீர் திட்டங்களுக்காக 69 கனஅடிநீரும் தற்போது திறக்கப்பட்டுள்ளது. பிக்அப் அணையில் இருந்து ஆற்றுப்பகுதிக்கு தண்ணீர் திறக்கப்படவில்லை. இதனால் ஆற்றுப்பகுதி நீரோட்டமின்றி உள்ளது. பெரியாறு அணையைப் பொறுத்தளவில் நீர்மட்டம் 131 அடியாகவும், நீர்வரத்து 782 கனஅடியாகவும் உள்ளது. இது குறித்து நீர்வளத்துறை அதிகாரிகள் கூறுகையில், “நீர்வரத்து குறைந்ததால் கடந்த 4 நாட்களாக வெளியேற்றப்பட்டு வந்த உபரிநீர் நிறுத்தப்பட்டுள்ளது. இருப்பினும் வைகை அணை நீர்மட்டம் 70.41அடியாக உள்ளது. மழை பெய்வதற்கான சூழ்நிலை உள்ளதால் நீர்வரத்து அதிகரிக்க வாய்ப்புள்ளது” என்றனர்.