
நாமக்கல்: “பிரதமர் அவர்களே எவ்வளவு ரெய்டுகள் வேண்டுமானாலும் விடுங்க. ஆனால் வரும் பாராளுமன்ற தேர்தலில் ஒட்டுமொத்த இந்தியாவும் பாஜகவுக்கு ரெய்டு விட போவது நிச்சயம்” என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசினார். நாமக்கல் கிழக்கு, மேற்கு மாவட்ட திமுக இளைஞரணி செயல்வீரர்கள் கூட்டம் நாமக்கல் பொம்மைக்குட்டை மேட்டில் நடைபெற்றது.
திமுக மாநில இளைஞரணி செயலாளரும், தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு பேசியதாவது. சேலத்தில் டிசம்பர் 17-ம் தேதி திமுக இளைஞரணி இரண்டாவது மாநில மாநாடு நடைபெறுகிறது. மாநாட்டில் பங்கேற்க வருமாறு இளைஞர் அணியினருக்கு அழைப்பு விடுக்கும் வகையில், மாவட்ட வாரியாக சென்று வருகிறேன். தற்போதைய முதல்வர், மாநில திமுக இளைஞரணி மாநாட்டை முதன்முறையாக நெல்லையில் நடத்தினார். அவர் சாதாரண கிளை பதவியில் இருந்து உயர்பதவிக்கு வந்தவர்.
திமுகவில் அவ்வாறு வரும் தொண்டர்களுக்கு உயர் பதவி காத்திருக்கிறது. சேலம் திமுக இளைஞரணி மாநாட்டை வெற்றி மாநாடாக அனைவரும் மாற்றிக் காட்ட வேண்டும். மதுரையில் அதிமுக நடத்திய மாநாடு போல் திமுக மாநாடு அமையாது. கொள்கை, கோட்பாடு இல்லாமல் அவர்களுடைய மாநாடு அமைந்தது. ஆனால் திமுக மாநாட்டில் கொள்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்படும். எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தல் வெற்றியை எதிரொலிக்கும் வகையில் திமுக மாநாடு அமையும்.
ஒட்டுமொத்த இந்தியாவும், பாஜகவை வீட்டுக்கு அனுப்பும் தேர்தலாக இந்த தேர்தல் அமைய உள்ளது. திமுக சட்டப்பேரவை தேர்தல் வாக்குறுதியில் கூறியபடி, மகளிருக்கு அரசு பேருந்தில் இலவச பயணம், மகளிர் உரிமை தொகை திட்டம், காலை உணவு திட்டம், கல்லூரி மாணவிகளுக்கான புதுமைப்பெண் திட்டம் போன்ற மக்கள் நலத்திட்டங்களை வெற்றிகரமாக செயல்படுத்தி வருகிறது. காலை உணவு திட்டத்தால் 17 லட்சம் மாணவர்கள் பயன்பெற்று வருகின்றனர். தெலங்கானா மாநிலத்தைச் சேர்ந்தவர்கள், தமிழகத்தில் இந்தத் திட்டத்தை எவ்வாறு செயல்படுத்துகிறார்கள் என நேரடியாக வந்து ஆய்வு செய்தனர். பிற மாநிலங்களுக்கு முன்னோடியாக தமிழகம் விளங்குகிறது.
கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டத்தில் 1 கோடியே 18 லட்சம் மகளிர் இதுவரை பயனடைந்து வருகிறார்கள், திமுகவின் 4 திட்டங்கள் குறித்து நீங்கள் பேசுங்கள். தலைவர் சொன்ன திட்டங்கள் வந்துவிட்டது. பிரதமர் மோடி சொன்ன 15 லட்சம் எங்கே? என கேளுங்கள். மேலும் சிஏஜி வெளியிட்ட அறிக்கையில் மத்திய அரசில் ரூ. 7.50 லட்சம் கோடிக்கு கணக்கு இல்லை, இறந்து போன 88 ஆயிரம் பேருக்கு மருத்துவ காப்பீடு திட்டத்தில் பணம் வழங்கப்பட்டு உள்ளது. இதுகுறித்து பேசினால் பேச்சு இல்லை,
பிரதமர் மோடி தேர்தல் பிரச்சாரத்திற்கு எங்கே போனாலும் என்னை பற்றி பேசுகிறார். பேசாததை பேசியதாக கூறுகின்றனர். வழக்கை சந்திப்பேன். கலைஞரின் பேரன் நான். மன்னிப்பு கேட்க மாட்டேன். விசில் அடித்து கலைந்து செல்கின்ற கூட்டமில்லை நீங்கள். பெரியார், அண்ணா, கலைஞரின் கொள்கை வாரிசுகள் என பேசிய அவர் திமுக அமைச்சர்கள் மீது மத்திய அமலாக்கத்துறை, வருமான வரித்துறை ரெய்டுகள் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது.
பிரதமர் அவர்களே எவ்வளவு ரெய்டுகள் ஆனாலும் விடுங்க, வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் ஒட்டுமொத்த இந்தியாவும் பாஜகவுக்கு ரெய்டு விட போவது நிச்சயம் என்றார்.
முன்னதாக, நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக இளைஞரணி சார்பில் ரூ.10 லட்சம் மாநாட்டு நிதி, அமைச்சரிடம் வழங்கப்பட்டது. இந்த கூட்டத்தில், வனத்துறை அமைச்சர் மா.மதிவேந்தன், மாநிலங்களவை உறுப்பினரும், கிழக்கு மாவட்ட செயலாளருமான கே.ஆர்.என்.ராஜேஸ்குமார், மேற்கு மாவட்ட திமுக செயலாளர் மதுரா செந்தில், சட்டப்பேரவை உறுப்பினர்கள் பெ. ராமலிங்கம், கு. பொன்னுசாமி, மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் விஸ்வநாத் மற்றும் மாவட்ட, நகர, ஒன்றிய திமுக நிர்வாகிகள், இளைஞர் அணியினர் பலர் கலந்து கொண்டனர்.