National

“நாடாளுமன்றத்தின் மீது சாதாரண மக்களின் நம்பிக்கை வளர்ந்திருப்பது மிகப்பெரிய சாதனை” – பிரதமர் மோடி ஆற்றிய முழு உரை | PM addresses Special Session of Parliament in Lok Sabha

“நாடாளுமன்றத்தின் மீது சாதாரண மக்களின் நம்பிக்கை வளர்ந்திருப்பது மிகப்பெரிய சாதனை” – பிரதமர் மோடி ஆற்றிய முழு உரை | PM addresses Special Session of Parliament in Lok Sabha
“நாடாளுமன்றத்தின் மீது சாதாரண மக்களின் நம்பிக்கை வளர்ந்திருப்பது மிகப்பெரிய சாதனை” – பிரதமர் மோடி ஆற்றிய முழு உரை | PM addresses Special Session of Parliament in Lok Sabha


புதுடெல்லி: “இந்தியாவின் 75 ஆண்டு கால நாடாளுமன்ற பயணத்தை நினைவுகூர்வதற்கான ஒரு சந்தர்ப்பம் இது” என்று நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தில் மக்களவையில் பிரதமர் மோடி பேசினார்.

நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தில் மக்களவையில் பிரதமர் மோடி ஆற்றிய உரையில், “புதிதாகத் திறக்கப்பட்டுள்ள நாடாளுமன்றக் கட்டடத்திற்கு நடவடிக்கைகள் மாற்றப்படுவதற்கு முன்பு, இந்தியாவின் 75 ஆண்டு கால நாடாளுமன்றப் பயணத்தை நினைவுகூர ஒரு சந்தர்ப்பமாக இது அமைந்துள்ளது. பழைய நாடாளுமன்ற கட்டடம் இந்தியா சுதந்திரம் அடைவதற்கு முன்பு இம்பீரியல் லெஜிஸ்லேட்டிவ் கவுன்சிலாக செயல்பட்டது. சுதந்திரத்திற்குப் பிறகு இந்திய நாடாளுமன்றமாக அங்கீகரிக்கப்பட்டது. இந்த கட்டடத்தை கட்டுவதற்கான முடிவு வெளிநாட்டு ஆட்சியாளர்களால் எடுக்கப்பட்டிருந்தாலும், இந்தியர்களின் கடின உழைப்பு, அர்ப்பணிப்பு மற்றும் பணம் ஆகியவை தான் இந்தக் கட்டடத்தில் பயன்படுத்தப்பட்டது.

75 ஆண்டுகால பயணத்தில், அனைவரது மரபுகள் மற்றும் பாரம்பரியங்களில் மிகச் சிறந்தவற்றை இந்த அவை உருவாக்கியுள்ளது. நாம் புதிய கட்டடத்திற்கு மாறினாலும் இந்தப் பழைய கட்டடம் வரும் தலைமுறைக்கு உத்வேகம் அளிக்கும். இது இந்திய ஜனநாயகப் பயணத்தின் பொன்னான அத்தியாயம்.

இது நமது 75 ஆண்டுகால நாடாளுமன்ற வரலாற்றின் கூட்டு முயற்சியின் விளைவாகும். சந்திரயான் 3-ன் வெற்றி, இந்தியாவின் திறன்களின் மற்றொரு பரிமாணத்தை வெளிப்படுத்துகிறது. இது நவீனத்துவம், அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் நமது விஞ்ஞானிகளின் திறன் மற்றும் 140 கோடி இந்தியர்களின் வலிமையுடன் இணைந்தது.

ஜி 20-உச்சிமாநாட்டின் வெற்றியை அவைத் தலைவர் அங்கீகரித்ததற்கு நன்றி. ஜி 20 மாநாட்டின் வெற்றி 140 கோடி இந்தியர்களுக்கானது, எந்தவொரு குறிப்பிட்ட தனிநபர் அல்லது கட்சிக்கான வெற்றி அல்ல. இந்தியாவின் பன்முகத்தன்மையின் வெற்றியின் வெளிப்பாடாக இந்தியாவில் 60 க்கும் மேற்பட்ட இடங்களில் 200 க்கும் மேற்பட்ட ஜி 20 நிகழ்வுகள் நடத்தப்பட்டது. ஜி-20 அமைப்பில் ஆப்பிரிக்க யூனியனை சேர்த்ததில் இந்தியா பெருமை கொள்கிறது.

ஜி 20 பிரகடனம் தொடர்பாக ஒருமித்த கருத்து எட்டப்பட்டது, எதிர்காலத்திற்கான செயல்திட்டம் அங்கு உருவாக்கப்பட்டது. இந்தியாவின் ஜி 20 தலைமைத்துவப் பதவி நவம்பர் இறுதி நாள் வரை நீடிக்கும், நாடு அதை முழுமையாகப் பயன்படுத்த விரும்புகிறது. அவைத் தலைவரின் தலைமையில் பி 20 (பார்லிமண்ட் 20- நாடாளுமன்றம் 20) உச்சிமாநாட்டை நடத்துவதற்கான அவைத் தலைவரின் தீர்மானத்தை ஆதரிக்கிறேன்.

இந்தியா ‘விஷ்வ மித்ரா’, உலக நண்பராக தனக்கென ஒரு இடத்தைப் பிடித்துள்ளது அனைவருக்கும் பெருமை அளிக்கிறது. முழு உலகமும் இந்தியாவை ஒரு நண்பராகப் பார்க்கிறது. அதற்குக் காரணம் வேதங்கள் முதல் விவேகானந்தர் வரை நாம் வகுத்த நெறிமுறைகள் ஆகும். சப்கா சாத் சப்கா விகாஸ் எனப்படும் அனைவரும் இணைவோம் – அனைவரின் வளர்ச்சி என்ற தாரக மந்திரம் உலகை நம்முடன் ஒன்றிணைக்கிறது.

பழைய நாடாளுமன்ற கட்டடத்திற்கு பிரியாவிடை அளிப்பது மிகவும் உணர்ச்சிகரமான தருணம். இத்தனை ஆண்டுகளில் அவையில் ஏற்பட்ட பல்வேறு சூழல்கள் மற்றும் ஏற்பட்ட பல்வேறு மனநிலைகள், இந்த நினைவுகள் அவையின் அனைத்து உறுப்பினர்களின் பாரம்பரியம். அதன் மகிமையும் நமக்கே சொந்தம். இந்த நாடாளுமன்ற மாளிகையின் 75 ஆண்டுகால வரலாற்றில் புதிய இந்தியாவை உருவாக்குவது தொடர்பான எண்ணற்ற நிகழ்வுகளை தேசம் கண்டுள்ளது, இன்று இந்தியாவின் சாதாரண குடிமகனுக்கு மரியாதையை வெளிப்படுத்த ஒரு வாய்ப்பாகும்.

முதல் முறை நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டபோது தாம், நாடாளுமன்றத்திற்கு வந்து வணக்கம் செலுத்தியது ஒரு உணர்ச்சிகரமான தருணம். ஆனால் வாழ்வாதாரத்திற்காக ரயில் நிலையத்தில் தொழில் செய்து வந்த ஒரு ஏழை நாடாளுமன்றத்தை அடைந்திருப்பது இந்திய ஜனநாயகத்தின் சக்தி. தேசம் எனக்கு இவ்வளவு அன்பு, மரியாதை மற்றும் ஆசீர்வாதங்களை வழங்கும் என்று நான் ஒருபோதும் நினைக்கவில்லை.

நாடாளுமன்ற அவை அனைவரையும் உள்ளடக்கிய சூழல், மக்களின் எதிர்பார்ப்புகளை முழு அதிகாரத்துடன் வெளிப்படுத்தி வருகிறது. அவையின் கண்ணியத்தை அதிகரிக்க பெண் நாடாளுமன்ற உறுப்பினர்களின் பங்களிப்புகள் உதவியது.

உத்தேசமாக இதுவரை இரு அவைகளிலும் 7500 க்கும் மேற்பட்ட மக்கள் பிரதிநிதிகள் பணியாற்றியுள்ளனர். அவர்களில் சுமார் 600 பேர் பெண் பிரதிநிதிகள். இந்திரஜித் குப்தா இந்த அவையில் கிட்டத்தட்ட 43 ஆண்டுகள் பணியாற்றியுள்ளார்.ஷபிகுர் ரஹ்மான் தனது 93 வயது வரை அவை உறுப்பினராகப் பணியாற்றினார். 25வது வயதில் அவைக்குத் தேர்வு செய்யப்பட்டவர் சந்திரானி முர்மு.

விவாதங்கள் மற்றும் கார சாரமான சூழல்களுக்கு மத்தியிலும் அவையில் குடும்ப உணர்வு இருந்தது. கசப்பு ஒருபோதும் நீடிக்காது. இது அவையின் முக்கிய பண்பு. சுதந்திரத்தின் ஆரம்ப ஆண்டுகளில் புதிய தேசத்தின் நம்பகத்தன்மை குறித்து இருந்த அனைத்து சந்தேகங்களும் தவறானவை என்று நிரூபிக்கப்பட்டது நாடாளுமன்றத்தின் பலம்.

75 ஆண்டுகளில் நாடாளுமன்றத்தின் மீது சாதாரண குடிமக்களின் நம்பிக்கை தொடர்ந்து வளர்ந்து வருவது மிகப்பெரிய சாதனையாகும். டாக்டர் ராஜேந்திர பிரசாத், டாக்டர் அப்துல் கலாம் முதல் ராம்நாத் கோவிந்த், திரௌபதி முர்மு வரை பல குடியரசுத் தலைவர்களின் உரைகளால் அவை பயனடைந்துள்ளது.

நேரு மற்றும் லால் பகதூர் சாஸ்திரி காலத்திலிருந்து அடல் பிஹாரி வாஜ்பாய் மற்றும் மன்மோகன் சிங் வரை அவர்கள் தங்கள் தலைமையின் கீழ் தேசத்திற்கு புதிய பாதையை வழங்கியுள்ளனர். அவர்களின் சாதனைகளை முன்னிலைப்படுத்துவதற்கான ஒரு சந்தர்ப்பம் இது. சர்தார் வல்லபாய் படேல், ராம் மனோகர் லோகியா, சந்திரசேகர், லால் கிருஷ்ண அத்வானி ஆகியோர் அவையில் விவாதங்களை செழுமைப்படுத்தி, சாமானிய மக்களின் குரலுக்கு பலம் அளித்தனர்.

பல சவால்களுக்கு மத்தியிலும் அவைத் தலைவர்கள் அவையைத் திறம்பட கையாண்டனர். அவர்கள் தங்கள் முடிவுகளின் மூலம் முக்கிய கருத்துகளை உருவாக்கினர். மாவ்லங்கர், சுமித்ரா மகாஜன் முதல் ஓம் பிர்லா வரை 2 பெண்கள் உட்பட 17 அவைத் தலைவர்கள் பணியாற்றியுள்ள நிலையில் அவர்கள் அனைவரும் தங்கள் வழியில் சிறப்பாகப் பங்களித்தனர்.

நாடாளுமன்றம் மீதான பயங்கரவாத தாக்குதல், அது கட்டடத்தின் மீதான தாக்குதல் அல்ல, ஜனநாயகத் தாயின் மீதான தாக்குதல். அது இந்தியாவின் ஆன்மா மீதான தாக்குதல். பயங்கரவாதிகளுக்கும் அவைக்கும் இடையில் அதன் உறுப்பினர்களைப் பாதுகாக்கப் போராடிய வீரர்களின் பங்களிப்புகளை அங்கீகரித்து, துணிச்சலான இதயங்களுக்கு அஞ்சலி செலுத்துவோம்.

பழைய நாடாளுமன்றத்திற்கு விடை கொடுப்பது பத்திரிகையாளர்களுக்கு இன்னும் கடினமான பணியாக இருக்கும். ஏனெனில் அவர்கள் உறுப்பினர்களை விட நாடாளுமன்றத்துடன் அதிகம் தொடர்புடையவர்கள்.

நாதபிரம்ம சடங்கில், ஒரு இடம் யாத்திரைக்குப் பின் மந்திரங்களை ஒலிப்பதன் காரணமாக அது புனிதமாக மாறும். அதேபோல், இந்த பழைய கட்டடத்தில் 7500 பிரதிநிதிகளின் கருத்துகளின் எதிரொலிகள் மற்றும் விவாதங்கள் நடைபெற்றுள்ளது. இந்த கட்டடம் இனி பயன்படுத்தப்படாவிட்டாலும் இது ஒரு புனிதத் தன்மையாக மாற்றியுள்ளது.

பகத்சிங்கும், பட்டுகேஷ்வர் தத்தும் தங்கள் வீரத்தாலும் தைரியத்தாலும் ஆங்கிலேயர்களிடையே அச்சத்தை ஏற்படுத்திய இடம் நாடாளுமன்றம். பண்டித ஜவஹர்லால் நேருவின் ‘ஸ்ட்ரோக் ஆஃப் மிட்நைட்’ எதிரொலிகள் இந்தியாவின் ஒவ்வொரு குடிமகனுக்கும் தொடர்ந்து உத்வேகம் அளிக்கும். அடல் பிஹாரி வாஜ்பாய் சொன்னதை இங்கே நினைவு கூர்கிறேன், “அரசுகள் வரும், – போகும். கட்சிகள் உருவாக்கப்படும் – கலைக்கப்படலாம். ஆனால் இந்த நாடு நிரந்தரமாக இருக்க வேண்டும், அதன் ஜனநாயகம் உயிர்வாழ வேண்டும்”.

நேரு அமைச்சரவையில் பாபா சாஹேப் உருவாக்கிய நீர்க் கொள்கை அற்புதமானது. 1965-ம் ஆண்டு போரின்போது லால் பகதூர் சாஸ்திரி இந்திய வீரர்களின் உத்வேகத்தை இந்த அவையில்தான் ஊக்கப்படுத்தினார். பங்களாதேஷின் சுதந்திரத்திற்கான போரும் இந்திரா காந்தியின் தலைமையின் கீழ் இந்த அவையின் விளைவாகும்.

வாக்களிக்கும் வயதை 21லிருந்து 18 ஆகக் குறைத்ததும் இந்த அவையில் நடந்தது. நாடு பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்துக் கொண்டிருந்த நேரத்தில் பி.வி.நரசிம்மராவ் தலைமையில் நாடு புதிய பொருளாதாரக் கொள்கைகளையும் நடவடிக்கைகளையும் மேற்கொண்டது. அடல் பிகாரி வாஜ்பாயின் ‘சர்வ சிக்ஷா அபியான்’, பழங்குடியினர் விவகார அமைச்சக உருவாக்கம் மற்றும் அவரது வழிகாட்டுதலின் கீழ் அணுசக்தி சாதனைகள் இந்த அவையில் நிகழ்ந்தது.

பல ஆண்டுகளாக நிலுவையில் இருந்த சிக்கல்களுக்கு வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த முடிவுகள் இந்த அவையில் எடுக்கப்பட்டது. குறிப்பாக 370-வது பிரிவு நீக்கம், ஜிஎஸ்டி, ஓஆர்ஓபி எனப்படும் ராணுவ வீரர்களுக்கான ஓய்வூதியத் திட்டம் மற்றும் பொருளாதார ரீதியில் பின்தங்கியவர்களுக்கான 10 சதவீத இடஒதுக்கீடு ஆகியவை முக்கியமானவை.

மக்களின் நம்பிக்கைக்கு இந்த அவை சாட்சியாக இருக்கிறது, ஜனநாயகத்தின் ஏற்ற இறக்கங்களுக்கு மத்தியில் அந்த நம்பிக்கையின் மையமாக இருந்து வருகிறது. வாஜ்பாய் அரசு ஒரு வாக்கு வித்தியாசத்தில் இந்த அவையில் வீழ்ந்தது.

வாஜ்பாயின் தலைமையின் போது சத்தீஸ்கர், உத்தரகாண்ட் மற்றும் ஜார்கண்ட் ஆகிய புதிய மாநிலங்கள் உருவாக்கப்பட்டது, எனினும் தெலங்கானா உருவாக்கத்தில் அதிகாரத்தைக் கைப்பற்றும் முயற்சிகள் இருந்தது வருந்தத்தக்கது. தெலங்கானாவைப் பொறுத்தவரை பிரிவினை தீய நோக்கத்துடன் மேற்கொள்ளப்பட்டதால் இரு மாநிலங்களிலும் கொண்டாட்டங்கள் இல்லை.

பழைய கட்டடத்திற்கு பிரியாவிடை அளிக்கவுள்ளோம். கடந்த காலத்தையும் எதிர்காலத்தையும் இணைக்கும் வாய்ப்பைப் பெறுவதால் அவையின் தற்போதைய உறுப்பினர்கள் மிகவும் அதிர்ஷ்டசாலிகள். நாடாளுமன்றத்தின் சுவர்களுக்குள் இருந்து உத்வேகம் பெற்ற 7500 பிரதிநிதிகளுக்கு இன்றைய சந்தர்ப்பம் பெருமைக்குரிய தருணம். உறுப்பினர்கள் மிகுந்த ஆர்வத்துடனும் உற்சாகத்துடனும் புதிய கட்டடத்திற்கு செல்வார்கள் என்று நம்பிக்கை உள்ளது” இவ்வாறு பிரதமர் மோடி தனது உரையில் குறிப்பிட்டார்.

Source link

W2L
About Author

W2L

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *