Cinema

நடிகை த்ரிஷா குறித்த சர்ச்சை பேச்சு: மன்சூர் அலி கான் மீது வழக்குப் பதிவு | case filed against mansoor ali khan for hate full speech about trisha

நடிகை த்ரிஷா குறித்த சர்ச்சை பேச்சு: மன்சூர் அலி கான் மீது வழக்குப் பதிவு | case filed against mansoor ali khan for hate full speech about trisha


சென்னை: நடிகை த்ரிஷா குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய நடிகர் மன்சூர் அலி கான் மீது, ஆயிரம் விளக்கு அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

சமீபத்தில் வெளியான வீடியோ ஒன்றில் பத்திரிகையாளரின் கேள்விக்கு பதிலளித்த மன்சூர் அலிகான் நடிகை த்ரிஷா குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியிருந்தார். இந்தப் பேச்சுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. மன்சூர் அலி கானின் இந்த பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்திருந்த நடிகை த்ரிஷா தனது எக்ஸ் தள பக்கத்தில், “இவரை போன்றவர்களால் தான் மனித குலத்துக்கே அவப்பெயர் என்றும், இனி தனது திரை வாழ்க்கையில் அவருடன் இணைந்து நடிக்க மாட்டேன்” என்றும் கூறியிருந்தார். மேலும் மன்சூர் அலி கான் பேச்சுக்கு தமிழ் திரையுலகினர் பலரும் கண்டனம் தெரிவித்திருந்தனர்.

தொடர்ந்து மன்சூர் அலிகான் மீது நடவடிக்கை எடுக்குமாறு தமிழக டிஜிபிக்கு தேசிய மகளிர் ஆணையம் உத்தரவிட்டிருந்தது. இது குறித்து தேசிய மகளிர் ஆணையத்தில் அதிகாரபூர்வ எக்ஸ் பக்கத்தில், “நடிகை த்ரிஷா குறித்து நடிகர் மன்சூர் அலிகான் பேசியது மிகுந்த கவலை அளிப்பதாக உள்ளது. இந்த விவகாரத்தில் நாங்கள் தாமாக முன்வந்து, ஐபிசி பிரிவு 509 பி மற்றும் பிற சட்டங்களின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்குமாறு டிஜிபிக்கு உத்தரவிடுகிறோம்.

இதுபோன்ற கருத்துகள் பெண்களுக்கு எதிரான வன்முறையை சாதாரணமாக கருதத் தூண்டுகிறது. இது வன்மையாக கண்டிக்கப்படவேண்டிய ஒன்று” என குறிப்பிடப்பட்டிருந்தது. இந்நிலையில் சென்னை ஆயிரம் விளக்கு காவல்துறையினர் நடிகர் மன்சூர் அலி கான் மீது இரு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இது தொடர்பான காவல்துறையின் செய்தி குறிப்பு: “நடிகர் மன்சூர் அலிகான், நடிகை திரிஷா கிருஷ்ணன் என்பவர் குறித்து கண்ணியத்தை குறைக்கும் வகையில் மிகவும் அநாகரிகமான முறையில் அவமானப்படுத்தி, பெண்ணின் அடக்க உணர்ச்சிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் பேசிய வீடியோ சமூகவலைதளத்தில் (X-Twitter) பரவியது. இது குறித்து தேசிய மகளிர் ஆணையம் அளித்த புகாரின் பேரில் சென்னை பெருநகர காவல் W-1 ஆயிரம் விளக்கு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் இன்று (21.11.2023) நடிகர் மன்சூர் அலிகான் மீது 354 (A), 509 ஆகிய 2 சட்டப்பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்யப்பட்டு வருகிறது.” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய மன்சூர் அலி கான், “நடிகை த்ரிஷா பற்றி நான் தவறாகப் பேசவில்லை. உண்மையில் நான் அவரைப் பாராட்டிதான் பேசினேன். அதற்காக அவர் எனக்கு நன்றிதான் சொல்ல வேண்டும். நடிகர் சங்கம் இவ்விவகாரத்தில் மிகப்பெரிய தவறு செய்துவிட்டது. ஒரு விஷயம் சர்ச்சையானால் அதுபற்றி என்னிடம் விளக்கம் கேட்டிருக்க வேண்டும். ஆனால் அவர்கள் எந்த விளக்கமும் கேட்கவில்லை.

என் மீது தவறாக நடவடிக்கை எடுத்துள்ளனர். 4 மணி நேரத்துக்குள் அவர்கள் அந்த நடவடிக்கையை வாபஸ் பெற வேண்டும். என்னைப் பற்றி மக்களுக்குத் தெரியும். அவர்கள் என் பக்கம் நிற்கிறார்கள். நான் யாரிடமும் மன்னிப்பு கேட்கக்கூடிய ஆள் இல்லை. எரிமலை குமுறினால் சுற்றியிருப்பவர்கள் தெறித்து ஓடுவார்கள்” என்றார்.





Source link

About Author

W2L

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *