
சென்னை: தெற்கு ரயில்வேயில் 2023-24 நிதியாண்டில் நவம்பர் 9-ம் தேதி வரை 80,902 குறைகளுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது. இதுகுறித்து தெற்கு ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது:
‘ரயில் மடாட்’ மூலம், தெற்கு ரயில்வேயில் நடப்பு நிதியாண்டில் நவ.9-ம் தேதி வரை மொத்தம் 80,915 குறைகள் பதிவு செய்யப்பட்டன. இதில், 80,902 குறைகளுக்கு தீர்வு காணப்பட்டுள்ளன. இதன்மூலம், 99.98 சதவீதம் குறைதீர்ப்பு விகிதத்தை எட்டியுள்ளது. கடந்த அக்டோபர் மாதத்தில், 14,826 குறைகள் பதிவு செய்யப்பட்டன.
பொதுவாக, பயணிகளிடம் இருந்து பெறப்படும் குறைகள், சராசரியாக 36 நிமிடங்களுக்குள் தீர்த்து வைக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, மருத்துவ தேவை, பாதுகாப்பு தொடர்பாக புகார்களுக்கு விரைவாக தீர்வு காணப்பட்டுள்ளன. இதுதவிர, வந்தே பாரத் ரயில் பயணிகளின் இனிதான பயணத்தை உறுதி செய்யும் வகையில், பயணிகளிடம் நிறை, குறைகளை கேட்டு தேவையான வசதிகளை செய்து கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.