
ஹைதராபாத்: தெலங்கானா சட்டப்பேரவை தேர்தல் வரும் 30-ம் தேதி நடைபெறஉள்ளது. இதற்கான வேட்பு மனு தாக்கல் கடந்த 3-ம் தேதி தொடங்கியது. வேட்புமனு தாக்கல்செய்ய இன்று 10-ம் தேதி கடைசி நாளாகும்.
இந்நிலையில் முதல்வர் கே.சந்திரசேகர ராவ் நேற்று காலையில் சித்திப்பேட்டை மாவட்டம் கஜ்வேல் தொகுதியில் வேட்பு மனுதாக்கல் செய்தார். இத்தொகுதியில் இருந்து சட்டப்பேரவைக்கு அவர் 2 முறை தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதையடுத்து மதியம் அவர் காமாரெட்டி மாவட்டம் காமாரெட்டி தொகுதியில் வேட்பு மனு தாக்கல் செய்தார். சந்திரசேகர ராவ் முதல்முறையாக 2 பேரவைத் தொகுதிகளில் போட்டியிடுகிறார்.
முதல்வரின் மகனும் ஐடி துறை அமைச்சருமான கே.டி. ராமாராவ் நேற்று காலை சிரிசில்லா தொகுதியில் வேட்பு மனு தாக்கல் செய்தார். முதல்வரின் மருமகன் ஹரீஷ்ராவ், சித்திப்பேட்டையில் வேட்பு மனு தாக்கல் செய்தார்.
தெலங்கானா முழுவதும் நேற்று வேட்பாளர்கள் ஏராளமானோர் ஊர்வலமாக சென்று வேட்பு மனு தாக்கல் செய்தனர்.