சண்டிகர்: தெருநாய்க் கடியால் பாதிக்கப்பட்ட வர்களுக்கு ஒவ்வொரு பல் அடையாளத்துக்கும் ரூ.10,000 இழப்பீடு வழங்க பஞ்சாப் மற்றும் ஹரியாணா அரசுகளுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தெருவோரம் சுற்றித்திரியும் விலங்குகளால் மனிதர்கள் தாக்கப்படுவது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த சூழலில், தெருவிலங்குகளால் பாதிக்கப்பட்டது தொடர்பான 193 மனுக்களை பஞ்சாப்-ஹரியாணா உயர் நீதிமன்றம் நேற்று விசாரணைக்கு எடுத்துக் கொண்டது. அப்போது நீதிபதி கூறியதாவது:
நாய், மாடு போன்ற கால்நடை விலங்குகளால் தாக்கப்படுபவர்களுக்கு இழப்பீடுகள் வழங்குவதற்கு அரசு முதன்மையான பொறுப்பை ஏற்க வேண்டும். நாய்க் கடியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஒவ்வொரு பல் அடையாளத்துக்கும் குறைந்த பட்சம் ரூ.10,000 இழப்பீடு வழங்க அவை முன்வர வேண்டும். அதேபோன்று, 0.2 செ.மீ. காயத் துக்கு குறைந்தபட்சம் ரூ.20,000 இழப்பீட்டை அறிவிக்க வேண்டும்.
குழு அமைக்க வேண்டும்: விலங்குகள் அச்சுறுத்தல் பிரச்சினைக்கு தீர்வு காணவும், இழப்பீட்டை வழங்குவது தொடர்பாக முடிவெடுக்கவும் பஞ்சாப், ஹரியாணா மற்றும் சண்டிகர் யூனியன் பிரதேசம் இணைந்து ஒரு குழுவை அமைக்க வேண்டும். பசுக்கள், காளைகள், எருதுகள், கழுதைகள், நாய்கள், எருமைகள் போன்ற விலங்குகள், காட்டு, வீட்டு செல்லப் பிராணிகள் மற்றும் பாலைவன விலங்குகளும் அதில் அடங்கும்.
இந்த குழுவானது சம்பந்தப்பட்ட மாவட்டத்தின் துணை ஆணையரை தலைவராக கொண்டு காவல் கண்காணிப்பாளர் அல்லது துணைக் காவல் கண்காணிப்பாளர் (போக்குவரத்து), சப் டிவிஷனல் மாஜிஸ்திரேட், மாவட்ட போக்குவரத்து அதிகாரி, தலைமை மருத்துவ அதிகாரியின் பிரதிநிதி உள்ளிட்டோரை உள்ளடக் கியதாக இருக்க வேண்டும் என நீதிபதி தனது தீர்ப்பில் தெரிவித்துள்ளார்.
.
கடந்த அக்டோபரில் வாக் பக்ரி டீ குழுமத்தின் நிர்வாக இயக்குநரான பராக் தேசாய் (49) தெருநாய் துரத்தியதால் கீழே விழுந்து தலையில் அடிபட்டு மூளையில் ரத்தக் கசிவு ஏற்பட்ட காரணத்தால் உயிரிழந்தார்.
இந்த சம்பவம் சமூக ஊடகங்களில் பரவியதையடுத்து நாடு முழுவதும் தெருநாய் விவகாரம் முக்கிய பிரச்சினையாக உருவெடுத்தது. சிறுவர்கள் உள்ளிட்டோர் காயமடையவும், இறப்புக்கும் காரணமாக இருக் கும் தெருவோர விலங்குகள் மீது பொதுமக்களின் கோபம் அதிகரித்துள்ள சூழ்நிலையில் நீதிமன்றம் இந்த தீர்ப்பை வழங்கியுள்ளது.