State

தூத்துக்குடி டாக் தொழிற்சாலையில் அமோனியா வாயு கசிவால் ஊழியர் உயிரிழப்பு – உறவினர்கள் போராட்டம் | Employee dies due to ammonia gas leak in Thoothukudi factory

தூத்துக்குடி டாக் தொழிற்சாலையில் அமோனியா வாயு கசிவால் ஊழியர் உயிரிழப்பு – உறவினர்கள் போராட்டம் | Employee dies due to ammonia gas leak in Thoothukudi factory


தூத்துக்குடி: தூத்துக்குடி டாக் தொழிற்சாலையில் அமோனியா வாயு கசிவால் ஏற்பட்ட தீவிபத்தில் ஊழியர் ஒருவர் உயிரிழந்தார். மேலும், 2 பேர் காயமடைந்தனர்.

தூத்துக்குடி முத்தையாபுரம் துறைமுகம் விரைவு சாலையில் டாக் தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது. இந்த ஆலையில் சோடா ஆஷ் மற்றும் அமோனியம் குளோரேட் உரம் தயாரிக்கப்படுகின்றன. இந்த தொழிற்சாலையில் தனியார் நிறுவனத்தின் ஒப்பந்ததாரர் ஜோயல் என்பவரிடம் மெக்கானிக்காக ஏரல் அருகே மஞ்சள்நீர்காயலைச் சேர்ந்த ஆனந்த கிருஷ்ணன் மகன் ஹரிஹரன் (23), தூத்துக்குடி காட்டன் சாலையைச் சேர்ந்த சுப்பிரமணியன் மகன் தனராஜ்(37), திருப்பூரைச் சேர்ந்த சந்திரசேகர் மகன் மாரிமுத்து(24) உள்ளிட்டோர் பணிபுரிந்து வந்தனர்.

இன்று மாலை 3.15 மணியளவில் அமோனியம் குளோரேட் பிரிவில் அமோனியோ குழாயில் கசிவு ஏற்பட்டுள்ளது. அதனை சரி செய்யும் பணியில் ஹரிஹரன், தனராஜ், மாரிமுத்து உள்ளிட்டோர் ஈடுபட்டனர். அப்போது, குழாய் வால்வை அடைப்பதற்கு பதிலாக திறந்துவிட்டதாக கூறப்படுகிறது. அப்போது ஹரிஹரன் மீது அமோனியா வாயு அடித்ததில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். தன்ராஜ், மாரிமுத்து ஆகியோருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டு, காலில் அமோனியம் குளோரேட் கொட்டியதால் காயமும் ஏற்பட்டது. அவர்கள் இருவரும் சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

இறந்த ஹரிஹரன் உடல் தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. தகவல் அறிந்து ஹரிஹரனின் உறவினர்கள் மற்றும் கிராம மக்கள் அரசு மருத்துவமனை வளாகத்தில் திரண்டனர். அவர்கள் அவரது உடலை வாங்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். விபத்துக்கு காரணமான தொழிற்சாலை அதிகாரிகள் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும், இறந்த ஹரிஹரன் குடும்பத்துக்கு இழப்பீடாக ஒரு கோடி ரூபாய் வழங்க வேண்டும் என வலியுறுத்தினர். அவர்களிடம் நகர துணை கண்காணிப்பாளர் கேல்கர் சுப்பிரமணியம் தலைமையில் போலீஸார் பேச்சுவார்த்தை நடத்தினர். இதுதொடர்பாக முத்தையாபுரம் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.





Source link

W2L
About Author

W2L

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *