
கோவை: தீபாவளி பண்டிகையை கொண்டாட, கோவை, திருப்பூரில் இருந்து பேருந்துகள், ரயில்கள் மூலம் ஏராளமான பொதுமக்களும், வடமாநில தொழிலாளர்களும் தங்களது சொந்த ஊர்களுக்கு சென்றனர். இதனால் மக்கள் கூட்டத்தால் ரயில் நிலையம், பேருந்து நிலையம் நிரம்பி வழிந்தது. தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு, கோவையில் வசிக்கும் பொதுமக்களின் வசதிக்காக தமிழ்நாடு அரசுப் போக்குவரத்து கழகம் சார்பில், வழக்கமான பேருந்துகளுடன் சிறப்புப் பேருந்துகளும் இயக்கப்பட்டன. அதன்படி, கோவையில் இருந்து மதுரைக்கு 100, திருச்சிக்கு 80, தேனிக்கு 50, சேலத்துக்கு 60 பேருந்துகள் என 290 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டன.
இந்நிலையில், வெளியூர், வெளிமாநிலங்களுக்கு செல்வதற்காக சிங்காநல்லூர், காந்திபுரம், சூலூர் ஆகிய பேருந்து நிலையங்களில் பொதுமக்களும், வடமாநில தொழிலாளர்களும் திரண்டனர். பேருந்துகளில் ஏற பயணிகளிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. திண்டுக்கல், பொன்னமராவதி, புதுக்கோட்டை, தஞ்சாவூர் உள்ளிட்ட சில பகுதிகளுக்கு குறைந்த எண்ணிக்கையிலேயே பேருந்துகள் இயக்கப்பட்டதால் பயணிகள் சிரமம் அடைந்தனர்.

ரயில் நிலையத்தில் நேற்று திரண்ட பயணிகள் கூட்டத்தின் ஒரு பகுதியினர்.
படம்: ஜெ.மனோகரன்
நிரம்பி வழிந்த ரயில்கள்: கோவை ரயில் நிலையத்தில் நேற்று காலை முதலே பயணிகள் கூட்டம் அதிகளவில் இருந்தது. குறிப்பாக, கோவையில் இருந்து சென்னைக்கு சென்ற எக்ஸ்பிரஸ் ரயில்கள், தென் மாவட்ட பகுதிகளை நோக்கி சென்ற ரயில்களில் பயணிகள் அதிகளவில் சென்றனர். முன்பதிவு இல்லாத பெட்டிகளில் நிற்கக்கூட இடமில்லாமல், பயணிகள் நெருக்கியடித்தபடி பயணித்தனர். அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த ரயில்வே போலீஸார், பயணிகளின் கூட்டத்தை ஒழுங்குபடுத்தினர்.
450 சிறப்பு பேருந்துகள்: திருப்பூரில் தீபாவளி பண்டிகையை ஒட்டி நேற்று புதுமார்க்கெட் வீதி உள்ளிட்ட பகுதிகளில் புத்தாடைகளை வாங்க பொதுமக்கள் திரண்டனர். குறிப்பாக காதர்பேட்டை பகுதியில் தங்களுக்கு தேவையான ஆடைகளை வாங்க பொதுமக்கள் திரண்டதால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. அதேபோல் பொதுமக்களும், வடமாநில தொழிலாளர்களும் தங்கள் ஊர்களுக்கு செல்ல ஒரே நேரத்தில் திரண்டதால், ரயில் நிலையமும், பேருந்து நிலையமும் திணறின.
தீபாவளியை ஒட்டி 450 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டாலும், ஏராளமான பேருந்துகளில் பொதுமக்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது. இதேபோல் பல்லடம், அவிநாசி, காங்கயம், வெள்ளகோவில், ஊத்துக்குளி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் தீபாவளியை ஒட்டி கடைவீதிகளில் பொதுமக்கள் கூட்டம் அதிகளவில் இருந்தது. தீபாவளியை ஒட்டி மாநகர் மற்றும் மாவட்ட போலீஸார் பொதுமக்கள் நடமாட்டம் நிறைந்த பகுதிகளில் தொடர்ந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

படம் : ஜெ.மனோகரன்
வடமாநிலத்தவர்கள் அவதி: திருப்பூர் ரயில் நிலையத்தில் இருந்து ஆலப்புழாவில் இருந்து தன்பாத் செல்லும் ரயிலில் ஏற பல்லாயிரக்கணக்கான புலம் பெயர் தொழிலாளர்கள் முண்டியடித்துக் கொண்டு ஏறினர். தீபாவளி உள்ளிட்ட பண்டிகைகளுக்காக தொழில் நகரமான திருப்பூர், கோவையில் இருந்து லட்சக்கணக்கில் தொழிலாளர்கள் வெளிமாநிலங்களுக்கு செல்லும் நிலையில், பண்டிகைக்கால பிரத்யேக சிறப்பு ரயில்கள் இயக்கப்படாதது ஏமாற்றம் அளிப்பதாக வடமாநில தொழிலாளர்கள் வேதனையுடன் தெரிவித்தனர். இனிவரும் காலங்களிலாவது சிறப்பு ரயில்களை இயக்க ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.