
சென்னை: தீபாவளி பண்டிகை நாடு முழுவதும் இன்று கோலாகலமாகக் கொண்டாடப்படும் நிலையில், பண்டிகைக்கு முந்தைய நாளான நேற்று பட்டாசு, துணி, இனிப்புக் கடைகளில் கூட்டம் அலைமோதியது. தீபாவளி பண்டிகையைஒட்டி, கடந்த வெள்ளிக்கிழமை முதல் ஜவுளி, நகைக் கடைகளில் விற்பனை சூடுபிடித்தது. நேற்று விடுமுறை என்பதால் தீபாவளிக்கு புத்தாடைகளை எடுக்க ஜவுளி கடைகளுக்கு மக்கள் படையெடுத்தனர். வர்த்தகப் பகுதியான தி.நகரில், உஸ்மான் சாலை, துரைசாமி சாலை, பனகல் பூங்காவைச் சுற்றியுள்ள பகுதிகள்,பாண்டி பஜார், மேற்கு மாம்பலம் போன்ற பகுதிகளில் உள்ள ஜவுளி, நகைக் கடைகள் மற்றும் வணிக வளாகங்களில் மக்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது.
இதேபோல பழைய வண்ணாரப்பேட்டை, புரசைவாக்கம், அண்ணா நகர், வடபழனி, பெரம்பூர், மயிலாப்பூர், அடையாறு, திருவான்மியூர், வேளச்சேரி போன்ற இடங்களிலும் மக்கள் குவிந்தனர். சாலையோர கடைகளில் அழகுசாதனப் பொருட்கள், துணிகள், அணிகலன்கள், பாத்திரங்கள் போன்றவற்றின் விற்பனையும் மும்முரமாக நடந்தன. இதுதவிர இனிப்பு கடைகள், உணவகங்களிலும் மக்கள் கூட்டம் அதிகமாகக் காணப்பட்டது. சென்னை தீவுத்திடலில் உள்ள பட்டாசுக் கடைகளில் கூட்டம் கட்டுக்கடங்காமல் காணப்பட்டது.

படம்: எஸ்.சத்தியசீலன்
ஒரே இடத்தில்30-க்கும் மேற்பட்ட பட்டாசுகடைகள் அமைக்கப்பட்டிருப்பதால், விருப்பமான பட்டாசுகளை வாங்க ஏற்ற இடமாகபொதுமக்கள் தீவுத்திடலை தேர்வு செய்துள்ளனர். இதனால், நேற்று பொதுமக்கள் தங்களது குடும்பத்தினருடன் தீவுத்திடலில் குவிந்தனர். இதுதவிர, சென்னை மற்றும் புறநகர் பகுதிகளிலும் பட்டாசு விற்பனை களைகட்டியது. கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு பட்டாசு விலைஅதிகமாக இருந்த போதிலும், பட்டாசுகளை வாங்குவதில் மக்களின் ஆர்வம் குறையவில்லை. கடந்த சில நாட்களாக சென்னையில் மழை பெய்து வந்தநிலையில், நேற்று மழை இல்லாததது விற்பனையாளர்களுக்கும், வாடிக்கையாளர்களுக்கும் மகிழ்ச்சியைஅளித்தது. அந்த வகையில்பட்டாசு, துணி, இனிப்பு விற்பனை நேற்று களைகட்டியது.