
மதுரையில் அரசியல் செல்வாக்கு பெற்ற ரவுடியாக இருக்கிறார் அலியஸ் சீசர் (ராகவா லாரன்ஸ்). ஒரு பார்ட்டியில் கலந்துகொள்ளும் சினிமா ஹீரோ (அரவிந்த் ஆகாஷ்) அவரை ‘கருப்பா இருக்குறவன் நடிகராக முடியாது’ என்று சீண்ட, ஹீரோவாகும் ஆசை வருகிறது, அலியஸ் சீசருக்கு. கிளின்ட் ஈஸ்ட்வுட்டின் தீவிர ரசிகரான இவர், தனது படத்துக்கு உதவி இயக்குநர்களிடம் கதை கேட்கிறார். சத்யஜித் ரே-யிடம் சினிமா கற்றவராக வரும் ரே தாசனை (எஸ்.ஜே.சூர்யா) தேர்வு செய்கிறார். ‘காட் ஃபாதர்’ மாதிரி அவரின் வாழ்க்கைக் கதையை படமாக்கலாம் என்கிறார் ரே தாசன். நினைத்தபடி அவர்களால் படம்பிடிக்க முடிந்ததா, ரே தாசன் யார்? இறுதியில் என்ன நடக்கிறது என்பது கதை.
மிகப் பெரிய வெற்றி பெற்ற ‘ஜிகர்தண்டா’வெளியாகி கிட்டத்தட்ட பத்து வருடங்களுக்குப் பிறகு ‘ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்’ என்னும் அதன் இரண்டாம் பாகத்தை இயக்கியிருக்கிறார் கார்த்திக் சுப்புராஜ். ‘ஜிகர்தண்டா’வைப் போலவே வித்தியாசமான கதைச் சூழல், புதுமையான காட்சி அமைப்புகள், சுவாரசியமான கதாபாத்திர வடிவமைப்பு என்று திரைக்கதையையும் திரைப்படமாக்கத்தையும் சுகமாக ரசிக்க வைத்திருக்கிறார் கார்த்திக் சுப்புராஜ்.
கொடூர ரவுடியான ஆலியஸ் சீசர் (ராகவா லாரன்ஸ்), ஹாலிவுட் நடிகர் கிளின்ட் ஈஸ்ட்வுட் ரசிகராக இருப்பது, அவரைப் போலவே துப்பாக்கியால் சுடுவது என லாரன்ஸ் கதாபாத்திர வடிவமைப்பு ‘ஜிகர்தண்டா’வின் அசால்ட் சேதுவுக்கு இணையாகக் கவர்கிறது. அதேபோல் சீசரின் சுயசரிதையை இயக்குவதாகக் கூறி, அவரை ஆட்டிப் படைக்கும் இயக்குநராக எஸ்.ஜே. சூர்யாவின் கதாபாத்திரமும் ரசிக்க வைக்கிறது.
படத்தில் யானைகளைக் கொன்று தந்தங்களை வேட்டையாடும் கடத்தல்காரன், அவனைப் பிடிக்க வரும் காவல்துறை ஆகிய இரண்டு தரப்பினராலும் அப்பாவி பழங்குடி மக்கள் பல கொடுமைகளை அனுபவிப்பது என தமிழ்நாட்டில் நடைபெற்ற சில வரலாற்று நிகழ்வுகளை அடிப்படையாகக் கொண்ட காட்சிகள் படத்தின் ஒட்டுமொத்த தாக்கத்துக்கு வலு சேர்க்கின்றன. காட்டில் வாழும் பூர்வகுடி மக்களின் வாழ்வியல், யானைகளின் இயல்பு என பண்பாட்டு, சூழலியல் அம்சங்களையும் சேர்த்திருப்பது இதை சாதாரண கமர்ஷியல் படம் என்பதிலிருந்து மேம்பட்ட தளத்துக்குக் கொண்டு செல்கிறது. ஆளும் வர்க்கத்தின் அரசியல் பகடையாட்டத்தால் அப்பாவி பழங்குடி மக்களுக்கு நேரும் துயரத்தைச் சொல்லும் இறுதிப் பகுதிக் காட்சிகள் மனதைப் பதை பதைக்க வைக்கின்றன.
முதல் பாதியில் வெட்டுக் குத்துக்காரராகவும் இரண்டாம் பாதியில் மக்களைக் காக்கும் வீரனாகவும் இருவேறு வகை நடிப்பை சிறப்பாகத் தந்திருக்கிறார் ராகவா லாரன்ஸ். மாறுபட்ட கதாபாத்திரத்தில் எஸ்.ஜே.சூர்யா அசத்தல். தனது வழக்கமான மீட்டரில் இருந்து இதில் வேறுவித நடிப்பை அளந்து தந்திருக்கிறார். சீசரின் மனைவியாக துணிச்சலான பழங்குடி பெண்ணாக நிமிஷா சஜயன், இரக்கமில்லாத காவல்துறை அதிகாரியாக நவீன் சந்திரா, அரசியல்வாதி இளவரசு, போட்டி அரசியல்வாதி கம் நடிகர் ஜெயக்கொடியாக ஷைன் டாம் சாக்கோ, உதவி இயக்குநர் சத்யன், ஹீரோ அரவிந்த் ஆகாஷ் என துணை கதாபாத்திரங்களும் கவனம் ஈர்க்கிறார்கள்.
சந்தோஷ் நாராயணன் இசையில் பின்னணி இசையும் பாடல்களும் ரசிக்க வைக்கின்றன. அடர்வனப் பகுதியில் எடுக்கப்பட்ட யானை வேட்டைக் காட்சிகளில் ஒளிப்பதிவாளர் திருநாவுக்கரசின் உழைப்பு பிரமிக்க வைக்கிறது. ஒளிப்பதிவும் கலை இயக்கமும் கதை நடக்கும் காலகட்டத்துக்கே நம்மை அழைத்துச் சென்றுவிடுகின்றன. விஎப்எக்ஸ் காட்சிகளும் கச்சிதம்.
படத்தில் ஏகப்பட்ட லாஜிக் மீறல்கள். முதல் பாதி கதை தொடங்க அதிக நேரம் எடுத்துக் கொள்ளப்படுகிறது. இரண்டாம் பாதியில் சீசரின் திடீர் மனமாற்றம், தந்தங்களுக்காக யானையை கொல்பவரை அவர் வீழ்த்துவது ஆகிய பகுதிகளில் நம்பகத்தன்மை இல்லை. இறுதிக் காட்சிகளிலும் தர்க்கப் பிழைகள் துருத்தி நிற்கின்றன. நீளமும் அதிகம். என்றாலும் அதைக் கவனிக்க விடாமல் இழுத்துச் செல்லும் திரைக்கதைப் படத்துக்குப் பலம்.