திருச்சி: திருச்சியில் டிச. 23-ம் தேதி விடுதலைசிறுத்தைகள் கட்சி சார்பில் ‘வெல்லும் ஜனநாயகம்’ என்ற தலைப்பில் நடைபெற உள்ள மாநாட்டில்,முதல்வர் ஸ்டாலின் பங்கேற்கிறார்என்று விசிக தலைவர் திருமாவளவன் எம்.பி. தெரிவித்தார்.
இதுகுறித்து திருச்சி விமானநிலையத்தில் அவர் செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது:
விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் திருச்சியில் டிச. 23-ம் தேதி ‘வெல்லும் ஜனநாயகம்’ என்ற தலைப்பில் மாநாடு நடைபெற உள்ளது. இதில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தேசிய பொதுச்செயலாளர் டி.ராஜா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தேசிய பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி, சிபிஐஎம்எல் தேசிய பொதுச்செயலாளர் தீபங்கர் பட்டாச்சாரியா உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்கின்றனர்.
அகில இந்திய காங்கிரஸ் கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்த மாநாடு நடத்துவதற்கான இடம் தேர்வு செய்யும் பணி நடைபெற்று வருகிறது.
பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையின் நடைபயணத்தில், அவரது கட்சியினர் பங்கேற்பதைக் காட்டிலும், அதிமுக, பாமகதொண்டர்களே அதிக அளவில் பங்கேற்கின்றனர். பாஜக ஆட்சிக்குவந்தவுடன் பெரியார் சிலை அகற்றப்படும் என்று அண்ணாமலை கூறியுள்ளார். ஒருபோதும் பெரியார்சிலையை அகற்ற முடியாது. அண்ணாமலையின் பேச்சு தமிழகத்தில் எடுபடாது. இவ்வாறு திருமாவளவன் கூறினார்.