பெங்களூரு: கர்நாடகாவில் திப்பு சுல்தானின் பிறந்த நாளை கொண்டாடுவதற்கு இந்துத்துவ அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்ததால் ஸ்ரீரங்கப்பட்ணாவில் நேற்று 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டது.
‘மைசூரு புலி’ என அழைக்கப்படும் திப்பு சுல்தானின் பிறந்த நாளை ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 10-ம் தேதி, கர்நாடகாவில் உள்ள முஸ்லிம் அமைப்புகள் கொண்டாடி வருகின்றன. அவரதுஆட்சிக் காலத்தில் இந்து கோயில்கள் அழிக்கப்பட்டதாக இந்துத்துவ அமைப்புகள் குற்றம்சாட்டுகின்றன.
இதனால் திப்பு சுல்தான் ஜெயந்தி கொண்டாட பாஜக, பஜ்ரங் தளம், விஷ்வ ஹிந்து பரிஷத் உள்ளிட்ட அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இதனால் நேற்று திப்பு சுல்தான் ஜெயந்தி நிகழ்ச்சி பெங்களூரு, மைசூரு, குடகு, மங்களூரு ஆகிய இடங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நடத்தப்பட்டது. திப்பு சுல்தானின் நினைவகம் அமைந்துள்ள ரங்கப்பட்ணாவில் ஆயிரக்கணக்கான போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
முஸ்லிம் மற்றும் இந்துத்துவ அமைப்பினர் ஊர்வலமாக செல்ல போலீஸார் அனுமதி மறுத்தனர். இருப்பினும் மண்டியா தேசிய நெடுஞ்சாலையில் 50-க்கும் மேற்பட்டோர் அத்துமீறி ஊர்வலமாக சென்றனர். அவர்கள் திப்பு சுல்தான் ஜெயந்தி கொண்டாட்டத்துக்கு எதிராக முழக்கம் எழுப்பியதால் பதற்றம் ஏற்பட்டது. இதையடுத்து போலீஸார் இந்துத்துவ அமைப்பினரை கைது செய்து, பேருந்தில் அழைத்துச் சென்றனர்.
இதனிடையே ஸ்ரீரங்கப்பட்ணாவில் நேற்று இரவு 12 மணி வரை 144 தடை பிறப்பித்து மண்டியா மாவட்ட ஆட்சியர் குமார் உத்தரவிட்டார். பொது இடங்களில் கும்பலாக சேர்வது, ஊர்வலமாக செல்வது ஆகியவற்றை தவிர்க்குமாறு கோரினார். இதனால்அங்கு பரபரப்பான சூழல் நிலவியது.