
திருவனந்தபுரம்: தமிழகத்தைச் சேர்ந்தவருக்கு மார்க்சிஸ்ட் பிரமுகர் அளித்த பரிந்துரை கடிதத்தின் அடிப்படையில் விதிமுறைகளுக்கு புறம்பாக கேரளாவில் வனவிலங்குகள் உயிரியியல் இளநிலை விஞ்ஞானியாக நியமனம் வழங்கியிருப்பது சட்டவிரோதமானது என கேரள உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
கேரள வனவியல் ஆராய்ச்சி மையத்தில் இளநிலை விஞ்ஞானி பணியிடத்துக்கு விண்ணப்பித்த பி.ராஜன் என்பவர், கேரள உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனுவில், ‘‘நான் பழங்குடியின வகுப்பைச் சேர்ந்தவன். விலங்கியலில் முனைவர் பட்டமும், வனவிலங்குகள் உயிரியியல் பாடத்தில் சிறப்பு பட்டமும் பெற்றுள்ளேன்.
கேரள மாநில அறிவியல் தொழில்நுட்பம் மற்றும் சுற்றுச்சூழலியல் கவுன்சில், வெப்ப மண்டல காடுகள் குறித்தும் பல்லுயிர் பாதுகாப்பு குறித்தும் ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வருகிறது.இந்நிலையில் கேரள வனவியல் ஆராய்ச்சி மையம் பல்வேறு விஞ்ஞானிகளுக்கான பணியிடங்களை நிரப்ப கடந்த 2018 ஆக.14 அன்று அறிவிப்பாணை வெளியிட்டது.
ஆனால் இந்த அறிவிப்பாணை குறிப்பிட்ட சமூகங்களுக்கு முன்னுரிமை அளிப்பதாகக் கூறி தொடரப்பட்ட வழக்கை விசாரித்த கேரள உயர் நீதிமன்றம், சட்டத்துக்கு உட்பட்டு மீண்டும் புதிதாக அறிவிப்பாணை வெளியிட உத்தரவிட்டது. அதன்படி கேரள வனவியல் ஆராய்ச்சி மையம் மீண்டும் அறிவிப்பாணை வெளியிட்டது.
இதில் 10 பேர் நேர்முகத் தேர்வுக்காக தேர்வு செய்யப்பட்ட நிலையில், ஓபிசி பிரிவில் தமிழகத்தைச் சேர்ந்த விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பைச் சேர்ந்த முனைவர் ஆர்.சுகந்த சக்திவேல், அசோக்குமார், ரமேஷ்குமார் மற்றும் எஸ்டி பிரிவில் கேரளாவைச் சேர்ந்த நான், பொதுப்பிரிவில் கேரளாவைச் சேர்ந்த கே.அனில் ஆகிய 5 பேர்மட்டும் நேர்முகத் தேர்வில் பங்கேற்றோம்.
இந்நிலையில் ஓபிசி பிரிவைச் சேர்ந்த முனைவர் ஆர்.சுகந்தசக்திவேல் இளநிலை விஞ்ஞானியாகத் தேர்வு செய்யப்பட்டுள்ள தாக அறிவிக்கப்பட்டார்.
வெளிப்படைத்தன்மை இல்லை: ஆனால் இந்தத் தேர்வு தொடர்பான தரவரிசைப்பட்டியல் இணையத்தில் வெளிப்படையாக வெளியிடப்படவில்லை. மேலும் இப்பதவிக்கு 35 வயதுக்கு உட்பட்டவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும் என்ற நிலையில் 39 வயதான ஆர்.சுகந்த சக்திவேலை வனவிலங்குகள் உயிரியியல் இளநிலை விஞ்ஞானியாக நியமித்திருப்பது சட்டவிரோதமானது. மேலும் அவர் கேரள மாநில ஓபிசி வரம்புக்குள் வரவில்லைஎன்பதால் அவரது நியமனம் செல்லாது என அறிவித்து அதை ரத்து செய்ய வேண்டும்’’ என கோரியிருந்தார்.
இந்த வழக்கில் கேரள மாநில அறிவியல் தொழில்நுட்பம் மற்றும் சுற்றுச்சூழலியல் கவுன்சில்தாக்கல் செய்திருந்த பதில்மனுவில், ‘‘இந்த பதவி ஓபிசி பிரிவினருக்கு உரியது என்பதால், இந்த நியமனத்தில் எந்த விதிமீறலும் இல்லை. அதில் பழங்குடியின வகுப்பைச் சேர்ந்த மனுதாரரை நியமிக்க முடியாது’’ என தெரிவிக்கப்பட்டிருந்தது.
அதேபோல ஆர்.சுகந்த சக்திவேல் தாக்கல் செய்திருந்த பதில் மனுவில், ‘‘மெரிட் அடிப்படையில் இந்த இளநிலை விஞ்ஞானி பதவிக்கு நான் தேர்வு செய்யப்பட்டதில் எந்த விதிமீறலும் இல்லை. வயது வரம்பில் சலுகை பெற தனக்கு தகுதியுண்டு’’ என்று குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையில், இந்த வழக்கை விசாரித்த நீதிபதி வி.ராஜா விஜயராகவன் பிறப்பித்துள்ள உத்தரவி்ல், ‘‘தமிழகத்தில் ஓபிசி பிரிவைச் சேர்ந்த ஆர்.சுகந்த சக்திவேல் கேரளாவில் வேலைவாய்ப்பு பெற கேரள மாநில ஓபிசி வரம்புக்குள் வரவில்லை என்பதால் அவரது நியமனம் சட்டவிரோதமானது. அதேபோல அவருக்கு வயது வரம்பில் சலுகை அளித்ததும் ஏற்புடையதல்ல.
மேலும் தமிழகத்தைச் சேர்ந்த முக்கிய அரசியல் பிரமுகர் ஒருவர் தனது கட்சியைச் சேர்ந்த கேரள நிர்வாகிக்கு கடந்த 2022-ம்ஆண்டு அளித்துள்ள சிபாரிசு கடிதத்தின் அடிப்படையில், ஆர்.சுகந்த சக்திவேலுக்கு சாதகமாக சட்ட விதிமுறைகள் மற்றும்நெறிமுறைகள் அரசியல் காரணங்களுக்காக வளைக்கப்பட்டுள்ளது என்பதை மனுதாரர் தகுந்தஆவணங்களின் மூலம் நிரூபித்துள்ளார். இது இப்பதவிக்கான தேர்வு நடைமுறைகளின் வெளிப்படைத் தன்மைமை கேள்விக்குறியாக்கியுள்ளது.
மனுதாரருக்கு உரிய இழப்பீடு: எனவே இந்த வழக்கில் மனுதாரருக்கு உரிய இழப்பீடு வழங்குவது அவசியம் என நான் கருதுகிறேன். ஆகவே ஆர்.சுகந்த சக்திவேலை இளநிலை விஞ்ஞானியாக நியமித்தது சட்டவிரோதம் என்பதால் அதை ரத்து செய்கிறேன். அதேபோல மனுதாரரைஇப்பதவிக்கு நியமிக்க வேண்டு மென்ற கோரிக்கையையும் ஏற்கமுடியாது. ஆனால் கேரள மாநில அறிவியல் தொழில்நுட்பம் மற்றும் சுற்றுச்சூழலியல் கவுன்சில் மற்றும் கேரள வனவியல் ஆராய்ச்சி மையம் ஆகியவை இணைந்து மனுதாரருக்கு ரூ.25 ஆயிரத்தை ஒரு மாதத்தில் இழப்பீடாக வழங்க வேண்டும்’’ என உத்தரவிட்டுள்ளார்.
தமிழக பாஜக கருத்து: இந்த தீர்ப்பு குறித்து தமிழக பாஜகவைச் சேர்ந்த நாராயணன் திருப்பதி கூறும்போது, ‘‘ஊருக்கெல்லாம் உபதேசம் செய்யும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் போலி உருவத்தை இந்த தீர்ப்பு தோலுரித்து காட்டியுள்ளது. அரசு பணிகளில் தங்களது கட்சியினரை சட்டவிரோதமாக நுழைக்கும் கம்யூனிஸ்ட்களின் திட்டத்தை வெளிப்படுத்தியுள்ளது’’ என தெரிவித்துள்ளார்.