சென்னை: “தமிழகத்துக்கு கூடுதலாக வழங்கப்படும் அரிசியை கிலோ ரூ.20க்கு வழங்குவதுடன், கோதுமை, கேழ்வரகு ஒதுக்கீட்டை அதிகரிக்க வேண்டும்” என்று மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷியிடம் தமிழக உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி கோரிக்கை விடுத்துள்ளார்.
டெல்லியில் மத்திய உணவுத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷியை தமிழக உணவுத்துறை அமைச்சர் அர.சக்கரபாணி சந்தித்து பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவை அளித்தார். உடன், மாநிலங்களவை எம்பி., திருச்சி சிவா, மத்திய உணவுத்துறை செயலர் சஞ்சீவ் சோப்ரா, தமிழக உணவுத்துறை செயலர் ஜெ.ராதாகிருஷ்ணன், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழக மேலாண் இயக்குனர் அண்ணாதுரை, உணவுப்பொருள் வழங்கல் ஆணையர் மோகன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
அமைச்சர் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: நெல் அரவை மானியம் ரூ.2348.34 கோடி, கேழ்வரகு மானியம் ரூ.2.04 கோடி, பொது விநியோகத்திட்டம், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித்திட்டம், மதிய உணவு திட்டம் உள்ளிட்ட திட்டங்களுக்கான நிலுவைத்தொகை ரூ.13.17 கோடி, தேசிய உணவு பாதுகாப்பு திட்டம் (என்எப்எஸ்ஏ), பிரதம மந்திரி கரீப் கல்யாண் அன்ன யோஜனா உள்ளிட்ட திட்டங்களின் கீழ் மாநிலங்களுக்கு இடையிலான நிலைத் தொகை நிலுவை ரூ.786.73 கோடி மற்றும் சர்க்கரைக்கான மானியம் ரூ.40.36 கோடி என ரூ.3,160.64 கோடி நிலுவைத் தொகையை விடுவிக்க வேண்டும்.
மாநிலத்துக்கு தேசிய உணவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழங்கப்படும் அரிசி தவிர்த்து மாதம் தோறும் 75 ஆயிரம் டன் கூடுதல் அரிசி, பொது விநியோகத்திட்டம், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித்திட்டம், மதிய உணவு மற்றும் காலை உணவுத் திட்டங்களுக்கு தேவைப்படுகிறது. கடந்த ஜூலை 9-ம் தேதியிட்ட மத்திய அரசின் கடிதத்தில் அந்த அரிசி கிலோ ரூ.28-க்கு இந்திய உணவுக்கழகம் மூலம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், அந்த அரிசியை ஏற்கெனவே வழங்கப்பட்டது போல் கிலோ ரூ.20-க்கே வழங்க வேண்டும் என்று கோருகிறோம்.
மாநிலத்துக்கு தேசிய உணவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழங்கப்படும் கேழ்வரகை தவிர்த்து 2,756 டன் கூடுதலாக தேவைப்படுகிறது. இந்த கேழ்வரகை, வெளிச்சந்தை விற்பனை திட்டத்தின் கீழ் தமிழகத்துக்கு மானிய விலையில் வழங்க வேண்டும். பொதுமக்களின் உணவுப்பழக்கத்தின் மாற்றத்தின் காரணமாக கோதுமை நுகர்வு அதிகரித்து வருகிறது. தமிழகம் கோதுமை உற்பத்தி செய்யும் மாநிலம் அல்ல. உணவுக் கழகத்தின் விநியோகத்தை சார்ந்தே உள்ளது. மாதம் தோறும் 23 ஆயிரம் டன் கோதுமை தமிழகத்துக்கு சராசரியாக தேவைப்படுகிறது.
ஆனால், தேசிய உணவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் மாதம் ரூ.8576.02 டன் கோதுமையே மத்திய அரசு தமிழகத்துக்கு வழங்குகிறது. எனவே, மாதம் 23 ஆயிரம் டன் கோதுமை வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும். கடந்த 2013-14,15-16 முதல் 2019-20 வரையிலான கரீப் கொள்முதல் பருவத்துக்கு நிர்ணயிக்கப்பட்ட குறைந்த பட்ச ஆதார விலை தொடர்பான கணக்குகளை இறுதி செய்து, மீதமுள்ள தொகையை அரசுக்கு வழங்க வேண்டும். நெல் அரவை மற்றும் கேழ்வரகுக்கான தற்காலிக பொருளாதார செலவுத் தொகை அதாவது மண்டி தொழிலாளர், போக்குவரத்து உள்ளிட்டவற்றை மறு நிர்ணயம் செய்ய வேண்டும்,” என்று அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.