State

தமிழகத்தில் 26 இடங்களில் என்ஐஏ ரெய்டு – கோவை கார் குண்டு வெடிப்பு தொடர்பாக சோதனை | NIA raids 26 places in Tamil Nadu – Coimbatore car bomb blasts probed

தமிழகத்தில் 26 இடங்களில் என்ஐஏ ரெய்டு – கோவை கார் குண்டு வெடிப்பு தொடர்பாக சோதனை | NIA raids 26 places in Tamil Nadu – Coimbatore car bomb blasts probed


சென்னை/கோவை/நெல்லை: கோவை கார் வெடிப்பு சம்பவம் தொடர்பாக தமிழகத்தில் 26 இடங்களில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் (என்ஐஏ) நேற்று சோதனை மேற்கொண்டனர்.

கோவையில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் கோட்டை ஈஸ்வரன் கோயில் அருகில் கார் வெடித்து, அதை ஓட்டி வந்த ஜமேஷா முபின்(28) என்பவர் உயிரிழந்தார்.

இதுகுறித்து தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் நடத்திய விசாரணையில், கார் வெடிப்பு சம்பவம், பயங்கரவாத தாக்குதல் என்பது தெரியவந்தது. இதையடுத்து, ஜமேஷா முபினுடன் தொடர்பில் இருந்த 11 பேரை கைது செய்தனர். தொடர்ந்து, அவர்களது வீடுகள் மற்றும் அவர்களுக்குச் சொந்தமான இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு, முக்கிய ஆவணங்கள், தீவிரவாதம் தொடர்புடைய ஆதாரங்களைக் கைப்பற்றினர்.

இந்நிலையில், கடந்த மாதம் கோவை உக்கடம் பகுதியில் என்ஐஏ அதிகாரிகள் 2 பேரைக் கைது செய்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில், கோவை குனியமுத்தூர் பகுதியில் செயல்பட்டு வரும் அரபிக் கல்லூரி சம்பந்தப்பட்டவர்களுக்கும், கோவை கார் குண்டு வெடிப்பு சம்பவத்துக்கும் தொடர்பிருக்கலாம் என்றும் என்ஐஏ அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்துள்ளது.

இதையடுத்து, அரபி மொழி கற்றுத் தரும் அந்தக் கல்லூரி, அங்கு பயின்றவர்கள், கல்லூரிக்குத் தொடர்புடையவர்களின் வீடுகள், அலுவலகங்களில் நேற்று என்ஐஏ அதிகாரிகள் அதிரடியாக சோதனை மேற்கொண்டனர்.

கோவை உக்கடம், கரும்புக்கடை, குனியமுத்தூர், ஆர்.எஸ்.புரம், கவுண்டம்பாளையம், ஜி.எம்.நகர் உள்ளிட்ட 22 இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் குழுவினர் சோதனை நடத்தினர்.

குறிப்பாக, கோவை பெரிய கடைவீதியில் உள்ள மாநகராட்சி 82-வது வார்டு திமுக பெண் கவுன்சிலர் முபஷீராவின் வீடு, ஜி.எம்.நகர் மன்ஜில் ரஹ்மான் வீதியில் உள்ள அபுதாகீர் வீடு, குனியமுத்தூர் செம்மொழி நகரில் உள்ள சோகைல் என்பவரது வீடு, கரும்புக்கடை பகுதியில் மன்சூர் வீடு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சோதனை நடத்தப்பட்டது.

மேலும், கிணத்துக்கடவு மணிகண்டபுரம் பகுதியில் செல்போன் கடை நடத்தி வரும் சாலை மஸ்தான்(38) என்பவரிடம், தேசிய புலனாய்வு முகமை டிஎஸ்பி பங்கஜ் அகர்வால் தலைமையிலான 6 பேர் கொண்ட குழுவினர் நேற்று காலை 6 மணி முதல் விசாரணை மேற்கொண்டனர்.

இதேபோல, சென்னை திரு.வி.நகர் பகுதியில் முஜிபுர் ரஹ்மான், அயனாவரத்தில் முகமது உக்கரியா, நீலாங்கரை அடுத்த ஈஞ்சம்பாக்கத்தில் புஹாரி ஆகியோரது வீடுகளிலும் என்ஐஏ அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

இதுதவிர, தற்போது வீட்டில் இருந்தவாறு பணியாற்றி வரும் சென்னை தனியார் ஐடி நிறுவன ஊழியர், தென்காசி மாவட்டம் கடையநல்லூர் ரசாலிபுரம் தெருவைச் சேர்ந்த முகமது இத்ரிஸ்(25) ஆகியோரது வீடுகளிலும் சோதனை நடந்தது.

தென்காசி முகமது இத்ரிஸ் ஞாயிற்றுக்கிழமைகளில் அருகில் உள்ள கிராமங்களுக்குச் சென்றுமதப் பிரச்சாரம் மேற்கொண்டதாகவும், அவரது செல்போனுக்கு தடை செய்யப்பட்ட இயக்கங்களிடம் இருந்து பலமுறை அழைப்புகள் வந்ததாகவும் கூறப்படும் நிலையில், நேற்று அதிகாலை 5 மணி முதல் மதியம் 12 மணி வரை அவரது வீட்டில் சோதனை நடத்தப்பட்டது.

தெலங்கானாவில் 5 இடங்கள்: தமிழகத்தில் 26 இடங்கள் மற்றும் தெலங்கானா மாநிலம் ஐதராபாத், சைபராபாத்தில் 5 இடங்கள் என மொத்தம் 31 இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் நேற்றுஒரே நேரத்தில் சோதனை மேற்கொண்டனர்.

இந்த சோதனையில், லேப்டாப், செல்போன்கள், ஹார்டுடிஸ்க் மற்றும் பல்வேறு ஆவணங்களை என்ஐஏ அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர். இது தொடர்பாக என்ஐஏ அதிகாரிகள் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்பில் ஆள்சேர்ப்பு மற்றும் தீவிரவாத செயல்கள் தொடர்பாக கிடைத்த தகவலின் அடிப்படையில், தமிழ்நாடு, தெலங்கானா மாநிலங்களில் 31 இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. இதில் பல்வேறு டிஜிட்டல் ஆவணங்கள், ரூ.60 லட்சம் ரொக்கம், 18,200 அமெரிக்க டாலர்கள், உள்ளூர் மற்றும் அரபு மொழிகளில் எழுதப்பட்ட புத்தகங்கள் ஆகியவை கைப்பற்றப்பட்டுள்ளன. மேலும், சோதனையில் கைப்பற்றப்பட்ட செல்போன்கள், லேப்டாப்கள், ஹார்டுடிஸ்க்-களில் உள்ள தரவுகளை ஆய்வு செய்து வருகிறோம்.

அப்பாவி இளைஞர்களை மூளைச்சலவை செய்து, தீவிரவாதக் குழுக்களில் இணைப்பதற்காக சிலர் ரகசியமாக செயல்பட்டு வருகின்றனர். இவர்கள் மீது ஐபிசி120பி, 121ஏ ஆகிய பிரிவுகள் மற்றும் சட்ட விரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

அரபி மொழி கற்றுக் கொடுக்கும் மையங்கள் என்ற பெயரில், தீவிரவாத நடவடிக்கைகளில் சிலர் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், அவர்களது நடவடிக்கைகள் வாட்ஸ்-அப், டெலிகிராம் போன்ற சமூகவலைதளங்களில் பகிரப்பட்டுள்ளன.

ஐஎஸ்ஐஎஸ் இயக்க ஆதரவாளர்கள் ‘கிலாபத்’ என்ற பெயரில், இந்திய அரசியல் சாசனத்துக்கு எதிரான கொள்கைகளை பரப்புவதுடன், தீவிரவாதத்துக்கு ஆதரவாக இளைஞர்களை தூண்டி வருகின்றனர். மேலும், அப்பாவி இளைஞர்களின் மனதில் தீவிரவாத எண்ணத்தை விதைத்து, அவர்களுக்குப் பயிற்சி அளித்து, தீவிரவாதக் குழுக்களுக்குத் தேர்வு செய்யும் சதித் திட்டத்திலும் அவர்கள் ஈடுபட்டு வந்துள்ளனர்.

கடந்த ஆண்டு கோவையில் நடந்த கார் வெடிப்பு சம்பவமும் இதனுடன் தொடர்புடையதுதான். இந்த வழக்கு தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

நாட்டின் அமைதியை சீர்குலைக்கும் முயற்சிக்கும் தீவிரவாத செயல்பாடுகளை ஒடுக்க, என்ஐஏ உரியநடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.





Source link

About Author

W2L

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: