சென்னை: “இதுவரை தமிழகத்தில் ஏற்பட்டிருக்கிற இந்த ஆண்டுக்கான டெங்கு பாதிப்பு என்பது 11,743. இதில் இறப்புகளை பொறுத்தவரை 4 என்கின்ற எண்ணிக்கையில் நிகழ்ந்திருக்கிறது. பெரிய அளவில் டெங்கு என்பது நமது கட்டுப்பாட்டில் இருக்கிறது,” என்று தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார்.
தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தலைமையில் இன்று (செப்.2) சென்னை, ஓமந்தூரார், அரசினர் தோட்டத்தில் உள்ள தமிழ்நாடு அரசு பன்னாக்கு உயர்சிறப்பு மருத்துவமனை கூட்டரங்கில், டெங்கு மற்றும் மழைக்கால நோய்கள் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை, நகராட்சி நிர்வாகத்துறை, ஊரக வளர்ச்சித்துறை மாநில மாவட்ட அலுவலர்களுடன் கலந்தாலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்நிகழ்வில் குரங்கு அம்மை நிலையான வழிகாட்டு நெறிமுறைகள் கையேட்டினை வெளியிட்டார்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியதாவது: தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ள நிலையில் தொடர்ச்சியாகவும், மழைப்பொழிவுகள் என்பது தென்மேற்கு பருவமழை, வடகிழக்கு பருவ மழை, கோடை வெப்பமழை, வெப்ப சலன மழை என்றெல்லாம் தொடர்ந்து மழைபொழிவுகள் இருந்து கொண்டிருக்கிறது. மாநில அளவில் இந்த மழை பாதிப்புகளால் உண்டாகின்ற நோய்கள் குறிப்பாக டெங்கு, அதேபோல் மழைக்கால தொற்று நோய்களாக இருக்கின்ற வயிற்றுப்போக்கு, டைபாய்டு, மஞ்சள் காமாலை, எலி காய்ச்சல் மற்றும் உண்ணிகாய்ச்சல் போன்ற பருவகால நோய்கள் பரவாமல் தடுப்பதற்குரிய நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
அந்த வகையில் தமிழக முதல்வரின் வழிகாட்டுதலோடு, மாநில அளவிலான டெங்கு மற்றும் தொற்று நோய்கள் தடுப்பு நடவடிக்கைகள் குறித்தான கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது. இன்று ஒரு நாள் முழுவதும் இந்த கூட்டம் இங்கு நடைபெறுகிறது. மக்களை நோய் தொற்றிலிருந்து காப்பாற்றுவதற்குரிய நடவடிக்கைகள் என்னவெல்லாம் எடுப்பது போன்ற பல்வேறு விஷயங்கள் கலந்து ஆலோசனை செய்யப்படுகிறது.
இதுவரை தமிழகத்தில் ஏற்பட்டிருக்கிற இந்த ஆண்டுக்கான டெங்கு பாதிப்பு என்பது 11,743. இதில் இறப்புகளை பொறுத்தவரை 4 என்கின்ற எண்ணிக்கையில் நிகழ்ந்திருக்கிறது. நேற்று (செப்.1) ஒருநாள் டெங்கு பாதிப்பு 205 ஆகும்.
கடந்த ஆண்டுகளில் குறிப்பாக 2012-ல் 66 இறப்புகளும், 2017-ல் 65 இறப்புகளும் இவை இரண்டு ஆண்டுகளில் தான் அதிகபட்சமான இறப்புகள் என்பது பதிவாகி இருந்தது. அந்த நிலையில் தமிழக முதல்வரின் வழிகாட்டுதலோடு, இன்றைக்கு அனைத்து அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளையும் ஒருங்கிணைத்து, இந்த டெங்கு பாதிப்புக்குள்ளானவர்களை பட்டியலில் இணைப்பது என்கின்ற வகையில் தொடர்ச்சியாக அந்த பணிகள் செய்து கொண்டிருக்கிற காரணத்தினால், இந்த ஆண்டு இதுவரை 11,000-க்கும் மேற்பட்டவர்களுக்குரிய அந்த பாதிப்புகள் கண்டறியப்பட்டு உயிரிழப்புகள் என்பது குறைய தொடங்கியிருக்கிறது.
அந்தவகையில் தமிழகத்தைப் பொறுத்தவரை 4,676 அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளை கண்காணிக்கும் பணியினை இந்த துறை செய்து கொண்டிருக்கிறது. இந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளுக்கு ஏற்ப நாளையிலிருந்து எல்லா மாவட்டங்களிலும் இந்த துறைகள் ஒருங்கிணைப்பு என்பது இப்போது மாநில அளவிலும் மாவட்ட அளவில் இங்கு சென்னையில் நடைபெற்றுக் கொண்டிருப்பதை போலவே அவரவர்களுடைய மாவட்டங்களிலும், சுகாதார மாவட்டங்களில் இதேபோன்று அனைத்து துறைகளைச் சேர்ந்த ஏறத்தாழ 11 துறைகள் இன்றைக்கு இங்கே பங்கேற்றிருக்கிறார்கள். இந்த 11 துறைகளைச் சேர்ந்த அதிகாரிகளையும் அந்தந்த மாவட்டங்களில் ஒருங்கிணைத்து பணிகளை ஆற்றிட வேண்டும் என்று சொல்லப்பட்டிருக்கிறது.
அந்த வகையில் நாளையிலிருந்து இவர்கள் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவது, தனியார் மருத்துவமனைகளையும் கண்காணித்து டெங்கு பாதிப்புகளை கண்டறிவது, டெங்கு பாதிப்புக்குள்ளானவர்களுக்கு தீவிர சிகிச்சைகள் அளித்து அவர்கள் யாரும் மருத்துவர்களை நாடாமல் மருத்துவமனைகளுக்கு வராமல் தனியாக சிகிச்சை எடுத்துக்கொள்ள அனுமதிக்காமல் அவர்களுக்கு போதுமான விழிப்புணர்வு ஏற்படுத்துவது போன்ற பல்வேறு பணிகளை அந்தந்த மாவட்டங்களில் செய்யவிருக்கிறார்கள், கடந்த ஆண்டு இவர்கள் செய்த அந்த பணிகளின் காரணமாக இதே போன்று நடத்தப்பட்ட கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளும், அதற்கு பின்னால் நடைபெற்ற இந்த நிகழ்வுகளும்,இன்றைக்கு பெரிய அளவில் அந்த பாதிப்புகள் என்பது கடந்த ஆண்டு இல்லாமல் போனது.
காரணம் கடந்தாண்டை பொறுத்தவரை உலகம் முழுவதும் ஒரு 80 நாடுகளில் டெங்கு பாதிப்பு என்பது மிகப்பெரிய அளவில் இருந்தது. எனவே எப்படி 2012-ல் 66 இறப்புகளும், 2017-ல் 65 இறப்புகளும் என்கின்ற நிலையில் ஒரு அச்சம் ஏற்பட்டதோ அதே மாதிரியான ஒரு அச்சம் 2023-ம் நிகழ இருக்கிறது என்கின்ற அளவிலே இருந்தது, தமிழக முதல்வரின்ன் வழிகாட்டுதலின்படி, இதுபோன்ற கூட்டம் வடகிழக்கு பருவமழைக்கு முன்னாள் அப்போது நடத்தி, இந்த அலுவலர்கள் எடுத்த அந்த முயற்சியின் காரணமாக அனைத்து துறை அலுவலர்களும் ஒருங்கிணைந்து நடத்திய நிகழ்வுகளின் காரணமாக இன்றைக்கு இறப்புகளும் குறைந்து இருக்கிறது. பெரிய அளவில் அந்த டெங்கு என்பது நமது கட்டுப்பாட்டில் இருக்கிறது,” என்று அவர் கூறினார்.
இக்கூட்டத்தில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை, நகராட்சி நிர்வாகத்துறை, ஊரகவளர்ச்சித்துறை போன்ற பல்வேறு துறைகளைச் சேர்ந்த உயர் அலுவலர்களுடன், மாவட்ட வாரியாக இருந்து இணை இயக்குனர்கள், துணை இயக்குனர்கள், மருத்துவ கல்லூரி முதல்வர்கள் என்று 400-க்கும் மேற்பட்ட உயரலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.