
தஞ்சாவூர்: தொடர் விடுமுறையின் காரணமாக தஞ்சாவூர் பெரிய கோயிலில் நேற்று ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் குவிந்தனர். மேலும், அவர்களின் வாகனங்களை நிறுத்தபோதிய இடமில்லாததால் அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
உலக பிரசித்தி பெற்ற தஞ்சாவூர் பெரிய கோயிலுக்கு நாள்தோறும் உள்நாடு மற்றும் வெளிநாடு சுற்றுலாப் பயணிகள் வந்து, கோயிலில்உள்ள சிற்பங்கள், கல்வெட்டுகளை பார்வையிட்டு, கோயிலின் அழகை ரசித்து வருகின்றனர்.
இந்நிலையில், பள்ளிகளில் காலாண்டு விடுமுறை, மற்றவர்களுக்கு வார இறுதி நாட்கள் மற்றும் காந்தி ஜெயந்தியையொட்டி, தொடர் விடுமுறை ஆகியவற்றின் காரணமாக வெளியூர்களில் இருந்து நேற்று ஏராளமான சுற்றுலாப் பயணிகள் பெரிய கோயிலுக்கு வந்தனர். இதனால், கோயில் முழுவதும் பக்தர்கள் கூட்டம் அதிகளவில் காணப்பட்டது. பக்தர்கள் நீண்ட வரிசையில் வெகுநேரம் காத்திருந்து, பெருவுடையார், பெரியநாயகி அம்மனை தரிசனம் செய்தனர்.
போக்குவரத்து நெரிசல்: பெரிய கோயிலுக்கு வந்தவர்கள் தங்களுடைய வாகனங்களை கோயிலுக்கு எதிரே உள்ள வாகனநிறுத்துமிடத்தில் நிறுத்தினர். ஆனால், அங்கு போதிய இடம் இல்லாததால், சோழன் சிலை அருகில், பழைய நீதிமன்ற சாலை மற்றும் டிஐஜி அலுவலகம் அருகிலும் தங்களின் வாகனங்களை நிறுத்தினர். மேலும், பெரிய கோயில் முன்பு உள்ள சாலையின் ஓரத்திலும் ஏராளமான வாகனங்களை நிறுத்தியிருந்தனர்.
இதனால், அப்பகுதியில் அவ்வப் போது கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதை போக்குவரத்து போலீஸார் ஒழுங்குபடுத்தவில்லை என வாகன ஓட்டிகள் குற்றம்சாட்டினர். விடுமுறை காலமாக இருந்ததால் பக்தர்களின் வருகையும், வாகன நெரிசலும் அதிகமாக இருந்தது. ஆனால், பாதுகாப்பு பணிக்கு வழக்கமாக நியமிக்கப்படும் போக்குவரத்து போலீஸார் மட்டுமே தற்போதும் பணியில் இருந்தனர்.
இதனால், போக்குவரத்தை சீரமைக்க முடியாமல் அவர்கள் திணறினர். இனி வரும் காலங்களில் தொடர் விடுமுறையின் போது, பெரிய கோயிலுக்கு அதிகமாக சுற்றுலாப் பயணிகள் வருவதைக் கருத்தில் கொண்டு, அங்கு கூடுதல் போலீஸாரை நியமித்து போக்குவரத்து நெரிசலை குறைக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகத்துக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.