புதுடெல்லி: ட்விட்டருக்கு போட்டியாக மெட்டா நிறுவனம் ‘த்ரெட்ஸ்’ (Threads) என்ற பெயரில் புதிய செயலியை அறிமுகம் செய்துள்ளது.
சிறிய பதிவுகளுக்கான சமூக வலைதளமாக ட்விட்டர் உள்ளது. அரசியல் தலைவர்கள், பிரபலங்கள், ஊடகவியலாளர்கள் முன்னுரிமை அளிக்கும் தளமாக ட்விட்டர் திகழ்கிறது. இந்நிலையில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க் ட்விட்டர் நிறுவனத்தை 44 பில்லியன் டாலர் (ரூ.3.60 லட்சம் கோடி) மதிப்பில் வாங்கினார்.
அதையடுத்து அவர் ட்விட்டர் செயல்பாட்டில் பல்வேறு மாற்றங்களை கொண்டு வர ஆரம்பித்தார். ட்விட்டரில் அதன் பயனாளர்கள் ஒரு நாளைக்கு எத்தனை பதிவுகளை பார்வையிட முடியும் என்பதில் சமீபத்தில் கட்டுப்பாடுகளை கொண்டுவந்தார்.
இதனிடையே, ட்விட்டருக்கு போட்டியாக புதிய தளத்தை உருவாக்கும் முயற்சியில் மெட்டா நிறுவனம் இறங்கியது. இந்நிலையில், ‘த்ரெட்ஸ்’ என்ற புதிய செயலியை கடந்த புதன்கிழமை மெட்டா நிறுவனர் மார்க் ஸூகர்பெர்க் அறிமுகம் செய்துள்ளார்.
பொது உரையாடல்களுக்கான தளமாக த்ரெட்ஸ் செயல்படும் என்று மெட்டா நிறுவனம் தெரிவித்துள்ளது. ட்விட்டர் போலவே,இதில் எழுத்துகள், புகைப்படங்கள், வீடியோக்களை பதிவிட முடியும். 500 எழுத்துகள் வரையிலும், 5 நிமிடம் வரையில் வீடியோக்களையும் பதிவிட முடியும்.
ட்விட்டருக்கு போட்டியாக த்ரெட்ஸ் களமிறங்கியுள்ளது. த்ரெட்ஸ் செயலியின் அறிமுகம் ட்விட்டருக்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.