Cinema

ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் Review: அடர்த்தியும் ஆச்சரியமும் கலந்த ரெட்ரோ ட்ரீட்! | Jigarthanda DoubleX movie review

ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் Review: அடர்த்தியும் ஆச்சரியமும் கலந்த ரெட்ரோ ட்ரீட்! | Jigarthanda DoubleX movie review


துப்பாக்கிகளுக்கு எதிரே வலிமையான ஆயுதமாக கேமராவை முன்னிறுத்தினால் என்ன நடக்கும் என்பதுதான் ‘ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்’. தன் தந்தையின் விருப்பப்படி காவல் துறையில் சேர வேண்டும் என்ற முனைப்பில் இருக்கிறார் கிருபாகரன் (எஸ்.ஜே.சூர்யா). சந்தர்ப்ப சூழ்நிலைகளால் கொலைக் குற்றத்துக்குள் சிக்கவைக்கப்பட்டு சிறையிலடைக்கப்படுகிறார். அவர் மீண்டும் போலீஸாக வாய்ப்பு ஒன்று தேடி வருகிறது. மதுரையில் இருக்கும் கேங்க்ஸ்டர் சீசரை கொல்ல வேண்டும் என்பது தான் அவருக்கான அந்த அசைன்மென்ட். அதற்கு கிருபா ஒப்புகொள்கிறார். இதனிடையே கருப்பா இருக்குறவன் நடிகராக முடியாது என்ற விமர்சனத்தை உடைக்கும் வகையில் சினிமாவில் நடிக்க நல்ல கதையை தேடிக் கொண்டிருக்கிறார் கேங்க்ஸ்டர் சீசர் (ராகவா லாரன்ஸ்).

கேங்க்ஸ்டர் சீசரிடம் சத்யஜித்ரேவின் உதவி இயக்குநர் என சொல்லிக்கொண்டு ‘ரே தாசனா’க வந்து நிற்கிறார் கிருபாகரன். இருவரும் இணைந்து சினிமா பயணத்தை தொடங்க, இறுதியில் சொன்னபடி கிருபாகரன், சீசரை கொன்றாரா, கேங்கஸ்டர் சீசரை கொல்ல காவல் துறை முனைப்பு காட்டுவது ஏன்? அவர்கள் எடுக்கும் சினிமா என்னாவானது? – இவற்றை பழங்குடியின மக்களுடன் கூடிய அரசியலுடன் பேசியிருக்கிறது இந்த ‘ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்’.

கமர்ஷியலுடன் கூடிய ஓர் அடர்த்தியான அரசியல் கதையுடன் ‘கம்பேக்’ கொடுத்திருக்கிறார் கார்த்திக் சுப்பராஜ். ‘மெர்குரி’ படத்துக்குப் பிறகு இம்முறை மீண்டும் மக்கள் பிரச்சினையை பேசும் களத்தில் இறங்கியிருக்கும் அவர், முடிந்த அளவு அதனை வெகுஜன பார்வையாளர்களுக்கான படமாக மாற்றியிருப்பது பலம். தொடக்கத்தில் ஆங்காங்கே கிளைக் கதைகளுக்கான ‘ஹின்ட்’ கொடுத்து நகரும் காட்சிகள் என்ன நடக்கிறது என்பது புரியாமல் குழப்பத்துடன் எந்தவித தாக்கத்தையும் செலுத்தாமல் கடக்க, ராகவா லாரன்ஸ் vs எஸ்.ஜே.சூர்யா என மாறும்போது திரைக்கதை நிமிர்ந்து உட்காரவைக்கிறது.

ரெட்ரோ சீன்ஸ், 70-களின் உடைகள், ‘அபூர்வ ராகங்கள்’ ரஜினிகாந்த், சத்யஜித் ரே ரெஃபரன்ஸ், கிளின்ட் ஈஸ்ட்வுட்டின் ரசிகராக ராகவா லாரன்ஸ் செய்யும் அதகளங்கள் கதைக்குள் நுழையாத முதல் பாதியை கரை சேர்க்கின்றன. ஒருபுறம் துப்பாக்கியை ஆயுதமாக ஏந்திக்கொண்டு லாரன்ஸும், மறுறபும் கேமராவை தனது ஆயுதமாக எஸ்.ஜே.சூர்யா ஏந்திகொண்டிருக்கும்போது வரும் ‘இடைவேளை’ கார்த்திக் சுப்பராஜ் டச்.

தேனிக்கு அருகிலுள்ள மலைகிராம பழங்குடியின மக்கள் மீதான காவல் துறையின் அத்துமீறல், வாச்சாத்தி சம்பவத்தை நினைவுபடுத்துகிறது. தவிர, காடுகளை அழித்து மக்களை வெளியேற்ற முயலும் மத்திய, மாநில அரசுகள், பழங்குடியின மக்களின் கலாசாரம், நாட்டார் தெய்வ வழிபாடு, மாநில அரசின் அதிகார துஷ்பிரயோகம் என்பதெல்லாம் ‘ஜிகர்தண்டா டபுள் எக்ஸின்’ எதிர்பார்க்காத சர்ப்ரைஸ். அதனை பிரச்சாரமாக மாற்றாத திரைமொழியில் யானையைக்கொண்டு நிகழ்த்தியிருக்கும் எமோஷன்ஸ் கைகொடுக்கிறது.

‘யாரும் எதையும் புதுசா எழுத முடியாது. பேனாவை கெட்டியா பிடிச்சிட்டா போதும். எழுதப்பட்றது எழுதப்படும்’ என்ற வசனம் கவனம் பெறுகிறது. மேலும், ‘தனியாவா போற’ என கேட்கும்போது, ‘சினிமாங்குற ஆயுதத்தை கொண்டு போறேன்’ என எஸ்.ஜே.சூர்யாவின் பதில் மொழியும், அதன் மூலம் அதிகார துஷ்பிரயோகங்களை உலகுக்கு வெளிச்சமிட்டு காட்ட முடியும் என சினிமா மீதான காதலை வெளிப்படுத்துகிறார் கார்த்திக் சுப்பராஜ்.

ஹாலிவுட் நடிகர் கிளின்ட் ஈஸ்ட்வுட்டை ஆசானாக கொண்டு அவரை போல மாற நினைக்கும் ராகவா லாரன்ஸ், ஸ்டைலான உடல்மொழி, மிடுக்கான நடை, ஆக்ரோஷம் என கதபாத்திரத்துக்கு தனது நடிப்பால் நியாயம் சேர்க்கிறார். அப்பாவியான முகபாவனைகளை அடுத்த நொடியே மாற்றி ராகவா லாரன்ஸிடம் தன்னை கெத்தாக காட்டிக்கொண்டு அவரது சீட்டில் திமிராக அமரும் காட்சியில் எஸ்.ஜே.சூர்யா அப்லாஸ் அள்ளுகிறார். தவிர்த்து, அவர் தனது வழக்கமான ஏற்ற இறக்க நடிப்பிலிருந்து விலகி இதில் வித்தியாசம் காட்டியிருக்கிறார்.

‘ரகடா’ன நிமிஷா சஜயன் பழங்குடியின பெண்ணாக பிசிறில்லாத நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். ஷைன்டாம் சாக்கோவின் 70’ஸ் ஹீரோ ஸ்டைல் ஈர்க்கிறது. தவிர்த்து, நவீன்சந்திரா, இளவரசு, சத்யன், பழங்குடியின மக்களாக நடித்தவர்கள் கச்சிதமான கதாபாத்திர தேர்வு.

ஆரம்பத்தில் ஆங்காங்கே பின்னணி இசையில் இரைச்சல் ஒலிப்பதாக தோன்றினாலும், பின்னர் காட்சிகளுக்குத் தேவையான இசையை அதற்கு உண்டான மீட்டரில் பொருத்தியிருக்கிறார் சந்தோஷ் நாராயணன். அவரின் ரெட்ரோ மியூசிக்கும், விசில் சவுண்டும் தனி கவனம் பெறுகிறது. ‘மாமதுரை’ பாடல் ரசிகர்களுக்கான கொண்டாட்டம். அடர்ந்த காட்டுப்பகுதியையும், அதன் கனத்த மவுனத்தையும், ஆக்சன் காட்சிகளையும் கச்சிதமாக பதிவு செய்யும் திருநாவுக்கரசின் ஒளிப்பதிவில், ராகவா லாரன்ஸுக்கான ஷில்அவுட்டும், இன்ட்ரோ காட்சியும் ஈர்ப்பு. கலை ஆக்கமும், சிகை அலங்காரமும் தனி பாராட்டுதலுக்குரியவை.

பழங்குடியின மக்களின் வாழ்க்கை, காடுகளை அழித்தல், அரசியல் அதிகாரப் போராட்டங்கள், கேங்க்ஸ்டர்களின் உலகம் என பல விஷயங்களை பேசுவது பாராட்டத்தக்கது. ஆனால், எல்லாவற்றையும் ஒரே ஆளாக செய்யும் ராகவா லாரன்ஸின் ஹீரோயிசத்தைப் போல எல்லாவற்றையும் ஒரே படத்தில் சொல்ல முனைந்திருப்பது ஒரு முழுமையற்ற உணர்வை தருகிறது. அதேபோல இழுத்துச் செல்லும் இரண்டாம் பாதி அயற்சி.

ஒட்டுமொத்தமாக, வெகுஜன சினிமாவுக்குள் அடர்த்தியான கதைக்களத்தை நுழைத்து அரசியல் பேசியிருக்கிறார் கார்த்திக் சுப்பராஜ். அதில், எதை தேர்ந்தெடுத்து எதை பேசப்போகிறோம் என்பதை மட்டும் இன்னும் தெளிவாக டீட்டெய்ல் செய்திருந்தால் இந்த ‘ஜிகர்தண்டா’ இன்னும் குளிர்ந்திருக்கும். ஆனாலும், இந்த தீபாவளி ‘ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்’ உடையது!





Source link

About Author

W2L

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *