State

செயற்கைக்கோள்களை ஏவிய பிறகு பூமிக்கு திரும்பும் ராக்கெட்: ஆக.24-ல் சென்னை அருகே விண்ணில் செலுத்த திட்டம் | Rocket returning to Earth after launching satellites: Launched near Chennai on Aug 24

செயற்கைக்கோள்களை ஏவிய பிறகு பூமிக்கு திரும்பும் ராக்கெட்: ஆக.24-ல் சென்னை அருகே விண்ணில் செலுத்த திட்டம் | Rocket returning to Earth after launching satellites: Launched near Chennai on Aug 24


சென்னை: செயற்கைகோள்களை ஏவிய பிறகு மீண்டும் பூமிக்கு திரும்பும் புது வகை ராக்கெட்டை ‘ஸ்பேஸ் ஸோன் இந்தியா’ நிறுவனம் உருவாக்கியுள்ளது. இந்த ராக்கெட் 3 சிறிய செயற்கைக்கோள்களுடன் வருகிற 24-ம் தேதி சென்னை அருகே விண்ணில் செலுத்தப்பட உள்ளது.

சென்னையை அடுத்த கேளம்பாக்கத்தில் இயங்கி வரும் ‘ஸ்பேஸ் ஸோன் இந்தியா’ நிறுவனம் ராக்கெட் மற்றும் செயற்கைக்கோள் வடிவமைப்பு குறித்து பள்ளி மாணவர்களுக்கு பயிற்சி அளித்து வருவதுடன் ராக்கெட் மற்றும் செயற்கைக்கோள்களை வடிவமைத்து அவற்றை விண்ணில் செலுத்தும் பணியிலும் ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில், இந்நிறுவனம் செயற்கைக்கோள்களை ஏவிய பிறகு மீண்டும் பூமிக்கு திரும்பும் வகையில் ‘ரூமி’என்ற மினி ராக்கெட்டை வடிவமைத்துள்ளது.

மார்ட்டின் குழுமத்தின் சிஎஸ்ஆர் நிதியுதவியுடன் இஸ்ரோ முன்னாள் விஞ்ஞானிகளின் வழிகாட்டுதலில் பல்வேறு தொழில்நுட்ப நிபுணர்களின் ஒன்றரை ஆண்டு கால உழைப்பில் உருவானது. இதன் எடை சுமார் 80 கிலோ. இந்த ராக்கெட்டுக்கான உதிரிபாகங்களை இணைக்கும் பணியில் ஏறத்தாழ 6 ஆயிரம் பள்ளி மாணவர்களும் ஈடுபட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.காலநிலை, காஸ்மிக் கதிர்வீச்சு, புறஊதா கதிர்வீச்சு , காற்றின் தன்மை தொடர்பான தரவுகளை சேகரிக்க உதவும் 3 கியூப் செயற்கைக்கோள்கள் மற்றும் 50 விதமான ஆய்வு சாதனங்களுடன் ‘ரூமி’ ராக்கெட் வருகிற 24-ம் தேதி (சனிக்கிழமை) காலை 7 மணி முதல் 7.45 மணிக்குள் சென்னை கேளம்பாக்கம் கிழக்கு கடற்கரை சாலையில் விண்ணில் செலுத்தப்பட உள்ளது.

மூன்று செயற்கைகோள்களையும் பூமியிலிருந்து அதிகபட்சம் 80 கிலோ மீட்டர் நிலைநிறுத்திவிட்டு அதில் இணைக்கப்பட்டுள்ள பாராசூட் மூலம் மீண்டும் பூமிக்கு திரும்பி வந்துவிடும். இந்த புதிய ராக்கெட் திட்டம் தொடர்பான அறிவிப்பை இஸ்ரோ முன்னாள் இயக்குநர் மயில்சாமி அண்ணாதுரை, ‘ஸ்பேஸ் ஸோன் இந்தியா’நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் தலைமைச் செயல் அலுவலர் ஆனந்த் மேகலிங்கம், மார்ட்டின் குழும நிறுவனங்களின் நிர்வாக இயக்குநர் ஜோஸ் சார்லஸ் மார்டின் ஆகியோர் சென்னையில் புதன்கிழமை நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் வெளியிட்டனர்.

அப்போது விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை கூறும்போது, “இன்றைய தினம் விண்வெளி துறையில் அரசுத்துறையோடு தனியாரும் இணைந்துள்ளனர். வழக்கமாக செயற்கைக்கோள்களை குறிப்பிட்ட சுற்றுவட்டப்பாதையில் செலுத்தியவுடன் ராக்கெட்டின் ஆயுட்காலம் முடிந்துவிடும். ஆனால், செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்திவிட்டு மீண்டும் பூமிக்கு திரும்பும் வகையில் ராக்கெட் உருவாக்கப்பட்டிருப்பது புதிய முயற்சி. ராக்கெட் தயாரிப்பில் இது அடுத்த கட்டம் ஆகும்,” என்று கூறினார்.

ஆனந்த் மேகலிங்கம் கூறுகையில், “மீண்டும் பயன்படுத்தக்கூடிய ராக்கெட்டை கொண்டு செயற்கைக்கோள்களை ஏவுவதால் செலவு மிச்சமாகும். சுற்றுச்சூழல் பாதிப்பு குறையும். நடமாடும் ஏவுதளம் (மொபைல் லாஞ்ச்பேட்) மூலமாக இந்த ராக்கெட்டை விண்ணில் செலுத்த உள்ளோம். ஜீரோ டிகிரி முதல் 120 டிகிரி கோணம் வரை எந்த கோணத்ததுக்கும் இந்த நடமாடும் ஏவுதளத்தை மாற்றியமைக்க முடியும். 3 செயற்கைக்கோள்களையும் குறிப்பிட்ட தூரத்தில் விண்ணில் செலுத்திய பிறகு அதில் உள்ள பாரசூட் மூலம் அது மீண்டும் பூமிக்கு திரும்பி வந்துவிடும். அந்த ராக்கெட்டை மீண்டும் பயன்படுத்தலாம். இது சுற்றுச்சூழலுக்கும் ஏற்றது. நாங்கள் ஆண்டுக்கு 12 செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்த திட்டமிட்டுள்ளோம்,” என்றார்.

ஜோஸ் சார்லஸ் மார்டின் கூறும்போது, “ராக்கெட் ஏவுவதற்கு கோடிக்கணக்கில் செலவாகும் நிலையில் தற்போது குறைந்த செலவில் ராக்கெட்டை விண்ணில் செலுத்தும் திட்டத்தை ‘ஸ்பேஸ் ஸோன் இந்தியா’ மேற்கொண்டுள்ளது. அந்நிறுவனம் பள்ளி மாணவர்களுக்கு ராக்கெட் மற்றும் செயற்கைக்கோள் வடிவமைப்பு குறித்து பயிற்சி அளித்து வருகிறது. அந்த வகையில், இத்திட்டத்தில் சுமார் 6 ஆயிரம் மாணவர்கள் பயன்பெற நாங்கள் உதவியுள்ளோம் என்பது மகிழ்ச்சி அளிக்கிறது,” என்றார்.





Source link

W2L
About Author

W2L

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *