சென்னை: சென்னையில், விநாயகர் சிலைகளை செப். 11, 14, 15 ஆகிய தேதிகளில் ஊர்வலமாக எடுத்துச் சென்று 4 இடங்களில் கடலில் கரைக்க போலீஸார் அனுமதி வழங்கி உள்ளனர். விநாயகர் சதுர்த்தி விழா அடுத்த மாதம் 7-ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. அன்றைய தினம் இந்து அமைப்புகள், தன்னார்வலர்கள் மற்றும் குடியிருப்பு வாசிகள் உட்பட பல்வேறு தரப்பினர் விநாயகர் சிலைகளை நிறுவி, அதை வழிபட்டு வணங்குவார்கள்.
பின்னர், ஒருவார காலம் சிறப்பு பூஜைகள், அன்னதானம் நடைபெறும். பிறகு, விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு நீர் நிலைகளில் கரைக்கப்படும். இதற்குபோலீஸார் பல்வேறு கட்டுப்பாடுகள் மற்றும் வழிமுறைகளை வகுத்து கொடுத்துள்ளனர்.
கடந்தாண்டு சென்னை பெருநகர காவல் எல்லைக்குள் 1,519 விநாயகர் சிலைகள் வைத்து வழிபாடு செய்ய அனுமதி வழங்கப்பட்டது. இந்தாண்டு, அதை விட அதிகளவு சிலைகள் நிறுவ வாய்ப்புள்ளதாக தெரிகிறது.
இதுகுறித்து, போலீஸ் அதிகாரிகள் மற்றும் இந்து அமைப்பினரின் ஆலோசனை கூட்டம் வேப்பேரியில் உள்ள காவல் ஆணையர் அலுவலகத்தில் நேற்று முன்தினம் நடைபெற்றது.
இதில், இந்து முன்னணி, இந்து மக்கள் கட்சி, சிவசேனா, இந்து அனுமன் சேனா, பாரதிய ஜனதா கட்சி, பாரத் இந்து முன்னணி, விஸ்வ இந்து பரிஷத் உட்பட பல அமைப்புகளை சேர்ந்த சுமார் 200 பிரதிநிதிகள் கலந்து கொண்டு தங்களது கருத்துகளை முன்வைத்தனர். கடந்தாண்டு போலவே இந்தாண்டும் சட்ட திட்டங்கள் நடைமுறையில் இருக்கும். புதிய கட்டுப்பாடுகள் எதுவும் இருக்காது என போலீஸார் தெரிவித்தனர்.
பட்டினப்பாக்கம் சீனிவாசபுரம், நீலாங்கரை பல்கலைநகர், காசிமேடு மீன்பிடி துறைமுகம், திருவொற்றியூர் பாப்புலர் எடைமேடை பின்புறம் ஆகிய 4 கடற்கரை பகுதிகளில் விநாயகர் சிலைகள் கரைக்கபோலீஸார் அனுமதி வழங்கிஉள்ளனர். மேலும், ஊர்வலமாக எடுத்துச் செல்ல 17 வழித்தடங்கள் பிரத்யேகமாக வகைப்படுத்தப்பட்டுள்ளது.
3 நாட்கள் ஊர்வலம்: பாஜக, இந்து முன்னணி உட்பட பெரிய அமைப்புகளுக்கு செப். 14,15 (சனி மற்றும் ஞாயிறு) ஆகிய தேதிகளிலும், சிறிய அமைப்புகள், குடியிருப்போர் சங்கத்தினர் உள்ளிட்டோர் 11-ம் தேதியும் விநாயகர் சிலைகளை ஊர்வலமாக எடுத்துச் சென்று கடலில் கரைக்க போலீஸார் அனுமதி வழங்கி உள்ளனர். அந்த நாட்களில் பாதுகாப்புப் பணியில் 16,500 போலீஸார் ஈடுபட உள்ளனர்.