புதுடெல்லி: தற்போதைய செபி தலைவர் மாதபி பூரி பச்-க்கு பணம் செலுத்தப்பட்டது குறித்து ஐசிஐசிஐ வங்கி அளித்துள்ள விளக்கம் என்பது மேலும் பல கேள்விகளை எழுப்புவதாக காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டியுள்ளது.
கடந்த 2017-ம் ஆண்டு முதல் 2024-ம் ஆண்டு வரை ஐசிஐசிஐ வங்கியிடமிருந்து சம்பளம் மற்றும் பங்குகள் என மாதபி ரூ.16.8 கோடி வரை பெற்றார் என்று காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டியிருந்தது. இதற்கு பங்குச் சந்தைக்கு நோட்டீஸ் அனுப்பியதன் மூலமாக ஐசிஐசிஐ வங்கி விளக்கம் ஒன்றை அளித்துள்ளது. அதில், மாதபி பூரி பச் வங்கியை விட்டு வெளியேறிய பின்பு அவருக்கு செலுத்தப்பட்ட பணம் என்பது ஓய்வூதிய பலன்கள்தானே தவிர, அது சம்பளமோ, ஊழியர்களுக்கான பங்குகளோ இல்லை (ESOPs) என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் ஊடகப் பிரிவு தலைவர் பவன் கெரா, ஐசிஐசிஐ நிறுவனத்தின் இந்த விளக்கத்தில் பல்வேறு முரண்பாடுகள் இருப்பதாக தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஓய்வூதிய பலன்கள் என்று அது ஏன் அழைக்கப்படுகிறது. அதன் தொகை மற்றும் கால இடைவெளி இரண்டும் ஒரே மாதிரியாக இல்லை.
கடந்த 2016-17 முதல் 2020-21 வரை மதாபி பூரி பச்-க்கு ஐசிஐசிஐ வங்கியால் கொடுக்கப்பட்ட தொகையின் சராசரி ஆண்டுக்கு ரூ.2.77 கோடி. ஒருவரின் ஓய்வூதிய பலன்கள், அவர் வேலை பார்த்தபோது வாங்கிய சம்பளத்தை விட அதிகமாக இருக்க முடியும்? மதாபி ஐசிஐசிஐ-யில் வேலை பார்த்த போது அவரின் சராசரி வருமானம் ஆண்டுக்கு ரூ.1.3 கோடி. ஆனால், 2016 – 2021 வரையிலான அவரது ஓய்வூதிய பலன் என்று அழைக்கப்படும் விஷயத்தின் சராசரி ஆண்டுக்கு ரூ. 2.77 கோடி.
ஐசிஐசிஐ வங்கி இஎஸ்ஒபி கொள்கை, அதன் முன்னாள் ஊழியர்கள் பணியில் இருந்து வெளியேறிய பின்பு, அதிகபட்சமாக மூன்று மாதங்களுக்குள் அவர்களின் விருப்பங்களை பயன்படுத்த அனுமதிக்கிறது. ஆனால், பணியிலிருந்து விருப்ப ஓய்வு பெற்று 8 ஆண்டுகளுக்கு பின்பு மதாபி அவரின் விருப்ப பலன்களை பயன்படுத்தும் வகையில் அனுமதி அளிக்கப்பட்ட மற்றியமைக்கப்பட் கொள்கை எங்கே?
ஐசிஐசிஐ வங்கி அதன் தற்போதைய மற்றும் முன்னாள் ஊழியர்கள் அனைவருக்கும் இதே நெறிமுறைகளை கடைபிடிக்கிறதா? ஐசிஐசிஐ வங்கி ஏன் இந்த டிடிஎஸ் தொகையை மதாபி பச்-க்கு வரிக்குரிய வருமானமாக வழங்கவில்லை? இது வருமான வரிச்சட்டத்தை தெளிவாக மீறுவதாக இல்லையா?” என்று கேள்விகள் எழுப்பியுள்ளார்.
மேலும் அவர், “பிரதமர் மோடி முன்வந்து பதில் அளிக்க வேண்டும். அவர்தான் மதாபி பி.பச்-ஐ செபியின் தலைவராக நியமித்தார். அவருக்கு பொறுப்பு இருக்கிறது. அவர் கட்டாயம் பதிலளிக்க வேண்டும். பாஜகவின் முன்னாள் எம்.பி.யும் செபி மற்றும் அதன் தலைவர் மீது தீவிரமான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்” என்று பவன் கெரா தெரிவித்துள்ளார்.
அதானி குழுமத்தால் பயன்படுத்தப்பட்ட வெளிநாட்டு நிதிகளில் இருந்து மதாபி மற்றும் அவரது கணவரும் பலன்களை பெற்றார்கள் என்று ஹிண்டன்பர்க் நிறுவனம் குற்றம்சாட்டியதைத் தொடர்ந்து மதாபிக்கு பெரும் சிக்கல் உருவாகியுள்ளது. இது குறித்து விசாரணை நடந்து வரும் நிலையில், அந்தக் குற்றச்சாட்டுகளை மதாபி மறுத்துள்ளார்.