
சென்னை: சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் வரும் 21-ம் தேதி தேசிய பில்லியர்ட்ஸ் போட்டி தொடங்குகிறது.
தமிழ்நாடு பில்லியர்ட்ஸ் மற்றும் ஸ்னூக்கர் சங்கம் (டிஎன்பிஎஸ்ஏ) சார்பில் 90-வது தேசிய பில்லியர்ட்ஸ் மற்றும் ஸ்னூக்கர் சாம்பியன்ஷிப் போட்டி சென்னையில் உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கில் வரும் 21-ம் தேதி முதல் டிசம்பர் 25-ம் தேதி வரை நடைபெறவுள்ளது. இந்த போட்டியில் நாடு முழுவதிலும் இருந்து 1500 வீரர்கள் பங்கேற்கின்றனர்.
ஆடவர், மகளிருக்கான சீனியர் பில்லியர்ட்ஸ் மற்றும் ஸ்னூக்கர், மாஸ்டர்ஸ் ஸ்னூக்கர், ஆடவர், மகளிருக்கான 6 ரெட்ஸ் ஸ்னூக்கர், சிறுவர் மற்றும் சிறுமிகளுக்கான சப்-ஜூனியர் மற்றும் ஜூனியர் பில்லியர்ட்ஸ், ஸ்னூக்கர் போட்டிகள் நடைபெற உள்ளது. உலக சாம்பியனான பங்கஜ் அத்வானி, ஆதித்யா மேத்தா, ரஃபத் ஹபீப், வித்யா பிள்ளை, பிரிஜேஷ் தமானி, கிருஷ்ண சூர்யநாராயணன் மற்றும் அனுபமா ராமச்சந்திரன் ஆகியோர் இந்த தொடரில் பங்கேற்க உள்ளனர். 2011-ம் ஆண்டுக்குப் பிறகு தேசிய பில்லியர்ட்ஸ் போட்டி தமிழகத்தில் நடைபெறுகிறது.
இத்தகவலை தமிழ்நாடு பில்லியர்ட்ஸ் சங்க தலைவர் பி.ஜி.முரளிதரன் தெரிவித்தார். செயலாளர் என்.கணேஷ், இணைச் செயலர் கே.நடராஜ், துணைத் தலைவர்கள் ராஜ் மோகன், ஹரிஹரன் ராஜாமணி, பொருளாளர் இ.சிவக்குமார் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.