சென்னை: சென்னை மாநகராட்சியின் அதிரடி நடவடிக்கையால் திரையரங்குகளில் வைக்கப்பட்டிருந்த விளம்பர பேனர்கள் அகற்றப்பட்டுள்ளன. சென்னையில் உள்ள முக்கியமான திரையரங்குகள் அனைத்திலுமே வெளியாகவுள்ள புதிய படங்களின் விளம்பரப் பலகைகள் வைக்கப்படுவது வழக்கம். இது குறித்து சென்னை மாநகராட்சி பலமுறை எச்சரிக்கை விடுத்து வந்தது. ஆனால், இது குறித்து திரையரங்க நிர்வாகம் எந்தவொரு முயற்சியும் எடுக்காமல் இருந்தது.
இந்நிலையில், சென்னை மாநகராட்சியின் அதிரடி நடவடிக்கையால், முக்கிய திரையரங்குகளில் வைக்கப்பட்டிருந்த விளம்பரப் பலகைகள் அனைத்தும் அகற்றப்பட்டுள்ளன. காசி திரையரங்கம், உட்லண்ட்ஸ் திரையரங்கம் உள்ளிட்ட அனைத்திலுமே திரையரங்குக்கு வெளியே வைக்கப்பட்டிருந்த விளம்பர பேனர்கள் அகற்றப்பட்டுள்ளன. மேலும், இனிமேலும் இது தொடர்ந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, சென்னை மாநகராட்சியின் இந்த நடவடிக்கையை உடனடியாக கைவிடுமாறு சென்னை மேயருக்கு திரையரங்க உரிமையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது தொடர்பாக சென்னை மேயருக்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனுவில், “புதிய படங்கள் சில தினங்கள் மட்டுமே ஓடக் கூடிய இந்தக் காலக்கட்டத்தில் விளம்பர பேனர்கள் என்பது மிகவும் முக்கியம். தியேட்டர்களில் பேனர்கள் வைக்கவில்லை எனில், ரசிகர்களின் வருகை வெகுவாக பாதிக்கும் அபாயம் உள்ளது. எனவே, சென்னை மாநகராட்சியின் விளம்பர பேனர்கள் அகற்றும் நடவடிக்கையில் தியேட்டர்களுக்கு விலக்கு அளிக்க வேண்டும்” என்று தியேட்டர் உரிமையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.