சென்னை: சென்னையில் ஃபார்முலா 4 கார் பந்தயம் நடைபெற உள்ளதையொட்டி, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு, நடிகரும் மநீம தலைவருமான கமல்ஹாசன், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக நடிகரும், மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான கமல்ஹாசன் தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவு: “சென்னையில் ஃபார்முலா 4 கார் பந்தயம் நடைபெறுவது உற்சாகமளிக்கிறது. நம்முடைய விருந்தோம்பல், விளையாட்டு திறமைகளை பார்ப்பதில் ஆவலாக இருக்கிறேன். தமிழகத்தை இந்தியாவின் விளையாட்டு தலைநகராகவும், கிழக்கின் டெட்ராய்டாகவும் மாற்றியதற்கு தமிழக முதல்வர் மற்றும உதயநிதிக்கு வாழ்த்துகள்” என பதிவிட்டுள்ளார்.
ஏ.ஆர்.ரஹ்மானின் எக்ஸ் தள பதிவு: நாட்டிலேயே முதன்முறையாக ஃபார்முலா 4 கார் பந்தயத்தை சென்னையில் நடத்துவதற்கு உதயநிதி ஸ்டாலினுக்கு மனமார்ந்த வாழ்த்துகள். இதனை ஒரு முக்கிய நிகழ்வாக பார்க்கிறேன்” என தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் (SDAT) இந்தியாவின் முதல் ஆன்-ஸ்ட்ரீட் நைட் ஃபார்முலா 4 பந்தய நிகழ்வான “சென்னை ஃபார்முலா ரேசிங் சர்க்யூட்” ஆக.31 முதல் செப்.1 வரை சென்னை தீவுத்திடல் மைதானத்தைச் சுற்றி நடைபெறுகிறது. இதற்காக சென்னை தீவுத்திடலைச் சுற்றி ஆக.30 முதல் செப்.1-ம் தேதி மதியம் 12 மணி முதல் இரவு 10 மணி வரை போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.