
சூரத்: குஜராத் மாநிலம் சூரத் மாவட்டத்தில் உள்ள சூரத் ரயில் நிலையத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி ஒருவர் உயிரிழந்துள்ளார், பலர் காயமடைந்துள்ளனர். தீபாவளி திருநாளை முன்னிட்டு சூரத் ரயில் நிலையத்தில் ஒரே நேரத்தில் மக்கள் பலரும் ரயில் மூலம் சொந்த ஊருக்கு திரும்ப முயற்சித்த போது இந்த அசம்பாவிதம் நடந்துள்ளது.
சூரத் நகரில் தங்கி பணிபுரிந்து வரும் வெளிமாநில தொழிலாளர்கள், தங்கள் சொந்த ஊருக்கு செல்ல முயன்ற காரணத்தால் ரயில் நிலையத்தில் கூட்டம் அதிகரித்து காணப்பட்டுள்ளது. இவர்களில் பெரும்பாலானவர்கள் பிஹார் மற்றும் உத்தர பிரதேச மாநிலத்தை சேர்ந்தவர்கள் என தகவல் கிடைத்துள்ளது. கூட்டத்தை கட்டுப்படுத்தும் பணியில் காவலர்களும் ஈடுபட்டுள்ளனர்.
சூரத் நகரில் வெளிமாநிலங்களை சேர்ந்த தொழிலாளர்கள் சுமார் 15 லட்சம் பேர் பல்வேறு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்கள் தீபாவளி பண்டிகைக்கு சொந்த ஊர் திரும்புவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. அதனை கருத்தில் கொண்டு ரயில்வே சார்பில் சூரத் ரயில் நிலையத்தில் கூடுதல் டிக்கெட் கவுண்ட்டர்கள், ரயில்கள் மற்றும் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த காவலர்களும் பணி அமர்த்தப்பட்டுள்ளனர். இருந்தும் இந்த அசம்பாவிதம் நடைபெற்றுள்ளது.
கூட்ட நெரிசலில் சிக்கி காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களை மத்திய ரயில்வே இணை அமைச்சர் தர்ஷனா ஜர்தோஷ் நேரில் சந்தித்துள்ளார். இவர் சூரத் மக்களவை தொகுதியின் உறுப்பினர் என்பது குறிப்பிடத்தக்கது.