கொழும்பு: சூதாட்ட புகாரில் சிக்கிய முன்னாள் இலங்கை கிரிக்கெட் அணி வீரரான சசித்ர சேனநாயகே விளையாட்டு ஊழல் விசாரணை பிரிவால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரான சசித்ர சேனநாயகே கடந்த 2020-ம் ஆண்டு இலங்கை பிரிமீயர் லீக்கில் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டது. மேலும் அவர், 2 வீரர்களை சூதாட்டத்தில் ஈடுபட வைக்க முயற்சித்ததாகவும் புகார் எழுந்தது.
இதுதொடர்பான வழக்கை விசாரித்த கொழும்பு நீதிமன்றம், சசித்ர சேனநாயகே 3 மாதங்களுக்கு வெளிநாடு செல்ல தடை விதித்திருந்தது. இந்நிலையில் நேற்று விளையாட்டு ஊழல் விசாரணை குழுவிடம் சசித்ர சேனநாயகே சரண் அடைந்தார். இதைத் தொடர்ந்து அவரை கைது செய்த ஊழல் விசாரணை குழுவினர், கொழும்பு மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
38 வயதான சசித்ர சேனநாயகே இலங்கை அணிக்காக ஒரு டெஸ்ட் போட்டி, 49 ஒருநாள் கிரிக்கெட் போட்டி, 24 டி 20 ஆட்டங்களில் விளையாடி உள்ளார்.