சென்னை: சுற்றுலா மற்றும் மருத்துவ சேவைகளுக்காக உலக மக்களை ஈர்க்கும் மையமாக சென்னை விளங்குகிறது. சென்னை மாநகரில் நிலவும் சட்டம் – ஒழுங்கு, அடிப்படை வசதிகள், தூய்மை ஆகியவற்றை வைத்தே தமிழகம் எப்படி இருக்கும் என அவர்கள் முடிவு செய்கின்றனர். அந்த அளவுக்கு சென்னை மாநகரம், தமிழகத்தின் முகமாகவே வெளி மாநிலத்தவராலும், வெளிநாட்டவராலும் பார்க்கப்படுகிறது.
சுமார் 80 லட்சம் மக்கள்தொகை கொண்ட மாநகரில் உள்ளூரை சேர்ந்தவர்கள் மற்றும் வெளியூர், வெளிநாட்டை சேர்ந்தவர்கள் என தினமும் சுமார் 10 லட்சத்துக்கும் மேற்பட்டோர் மாநகருக்கு ஏதோ ஒரு வேலை நிமித்தமாக வந்து செல்கின்றனர். இவ்வாறு வெளியில் சுற்றுவோருக்கு அடிப்படையான, அத்தியாவசியமான தேவையாக இருப்பது கழிப்பறைகள்தான். ஆனால் போதிய எண்ணிக்கையில் கழிப்பறைகளை மாநகராட்சி அமைக்கவில்லை என்ற குற்றச்சாட்டு நீண்ட காலமாக இருந்து வருகிறது.
‘தூய்மை இந்தியா நிதியில் கட்டப்படும் கழிப்பறைகளில் தூய்மையே இல்லை!’ – உலக சுகாதார நிறுவனத்தின் அறிக்கையின்படி உலகம் முழுவதும் 892 மில்லியன் மக்கள் இயற்கை உபாதையை கழிக்க திறந்தவெளியை கழிப்பிடமாக பயன்படுத்துகின்றனர். இதனால் பல்வேறு சுகாதார சீர்கேடுகள் ஏற்படுவதுடன் வயிற்றுப்போக்கு, காலரா, மஞ்சள்காமாலை, டைபாய்டு காய்ச்சல் போன்ற நோய்கள் பரவவும் காரணமாக அமைகிறது. இதனை கருத்தில் கொண்டு ஐக்கிய நாடுகள் சபை ஒவ்வொரு ஆண்டும் நவ.19-ம்தேதியை ‘உலக கழிப்பறை தினமாக அறிவித்துள்ளது. 2030-ம் ஆண்டுக்குள் உலக மக்கள் அனைவருக்கும் சுகாதாரமான கழிப்பறையை ஏற்படுத்தி திறந்தவெளியில் அசுத்தம் செய்யப்படாத உலகை உருவாக்க முயற்சி மேற்கொண்டு வருகிறது.
அதன் ஒருபகுதியாக மத்திய அரசுதூய்மை இந்தியா இயக்கம் மூலம் சென்னை மாநகரப் பகுதியில் திறந்தவெளியில் அசுத்தம் செய்வதை தடுக்கவும், மாநகரின் தூய்மையை உறுதி செய்யவும் கடந்த 2014-ம் ஆண்டு முதல் நிதி வழங்கி வருகிறது. அந்த நிதியை கொண்டு சென்னை மாநகராட்சி நிர்வாகம் புதிய பொது கழிப்பறைகளை அமைத்து வருகிறது. சென்னை மாநகராட்சியில் தற்போதைய நிலவரப்படி 547 இடங்களில் கான்கிரீட் கட்டிடங்களில் பழைய கழிப்பிடங்கள் இயங்கி வருகின்றன. தூய்மை இந்தியா இயக்க நிதியில் 445 இடங்களில் நவீன கழிப்பிடங்களை இளஞ்சிவப்பு நிறத்தில் நிறுவி வருகிறது.
இத்திட்டத்தில் புதிதாக கழிப்பிடங்கள் அமைக்கும் பணிகளும் நடைபெற்று வருகின்றன. இவை சுமார் 7 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இருக்கைகளை கொண்டுள்ளன. 300-க்கும் மேற்பட்ட சிறுநீர் கழிப்பிட வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன. மாநகரில் 445 இடங்களில் அமைக்கப்பட்டுள்ள நவீன இளஞ்சிவப்பு நிற கழிப்பிடங்களில் பெரும்பாலானவை முறையான பராமரிப்பின்றி அசுத்தமாகவும், பயன்படுத்தவே முடியாத நிலையிலும் இருக்கிறது. கழிப்பறைகளுக்கு தண்ணீர் வசதி அவசியம் என்ற நிலையில், பெரும்பாலான இடங்களில் தண்ணீரே இல்லை. இதனால்பொதுமக்கள் ஏமாற்றத்துடனும் அவதியுடனும் திரும்புகின்றனர். குறிப்பாக பெண்களின் தவிப்பு சொல்லி மாளாது.
பெருங்குடி மண்டலம்,182-வது வார்டு பகுதியில் அமைக்கப்பட்டுள்ள பொது கழிப்பறை முறையான பாரமரிப்பின்றி கிடப்பதுடன், அவற்றிலிருந்து வெளியேறும் கழிவுநீர் செல்ல நிலத்தில் அமைக்கப்பட்டுள்ள நீர் உறிஞ்சும் தொட்டியில் பிளாஸ்டிக் பாட்டில்களே நிறைந்து காணப்படுகின்றன. தண்டையார்பேட்டை மண்டலம், 37-வதுவார்டு, மத்திய நிழற்சாலையில் எம்கேபி நகர் காவல் நிலையத்தை ஒட்டி அமைக்கப்பட்டுள்ள பொது கழிப்பிடத்தில் தண்ணீர் வசதி செய்து தரப்படவில்லை. அங்கு தூய்மை பணி மேற்கொள்வோர், அருகில்உள்ள மாநகராட்சி இடத்தில் இருந்து குடத்தில் நீரை கொண்டு வந்து கழிவறையில் வைக்கும் நிலை உள்ளது.
கழிப்பறையின் மேலிருந்து நீரை கொண்டு வர குழாய் வசதிகள் அமைக்கப்பட்டு இருந்தும், அவற்றில் தண்ணீர் வருவதில்லை. முன்கூட்டியே தண்ணீரை கொண்டு செல்ல வேண்டிய நிலை உள்ளது. சில நேரங்களில் தண்ணீர் தட்டுப்பாடும் நிலவுகிறது. அதே வார்டில் மத்திய நிழற்சாலையில் உள்ள மாநகராட்சி விளையாட்டுத் திடலில் உள்ள பொது கழிப்பிடம் மேலே உள்ள நீர்த்தேக்க தொட்டியில் இதுவரை நீர் நிரப்பப்படாததால், பூட்டியே கிடக்கிறது. ஆனால்அந்த கழிப்பறையை பராமரிக்க ஒப்பந்ததாரர் நியமிக்கப்பட்டு, தூய்மை பணியாளரும் பணிக்கு வரும் நிலையில் கழிப்பறைகள் பூட்டியே கிடக்கின்றன.
மாநகராட்சியில் வெளி நிறுவனம் மூலமாக பணியமர்த்தப்பட்டாலும் தூய்மைப் பணியாளர்களுக்கு தினக்கூலியாக ரூ.687 வழங்க வேண்டும் என்றுசென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில் இந்த பொது கழிப்பிட தூய்மைப் பணியாளர்களுக்கு மாதம் ரூ.6 ஆயிரம் மட்டுமே ஊதியமாக வழங்குவதாக புகார் எழுந்துள்ளது. ராயபுரம் மண்டலம், வேப்பேரி தீயணைப்பு நிலையம் அருகில் அமைக்கப்பட்டுள்ள பொது கழிப்பிடத்தில் நீண்ட நாட்களாக தண்ணீர் வசதி இல்லாததால் அசுத்தமாக காட்சியளிக்கிறது. ஆனால் மின் விளக்குகள் மட்டும் 24 மணி நேரமும் எரிந்துகொண்டிருக்கிறது.
திரு.வி.க.நகர் மண்டலம், புளியந்தோப்பு, பேசின் பாலம், யானை கவுனி சாலையில் மாநகராட்சி குப்பை மாற்றும் இடத்துக்கு எதிரே அமைக்கப்பட்டுள்ள பொது கழிப்பிடத்திலும் தண்ணீர் வசதி இல்லை. ஆனால் குழாய்கள் மட்டும் உள்ளன. புளியந்தோப்பு பகுதியில் டாக்டர் அம்பேத்கர் சாலை- ஸ்டீபன்சன் சாலை சந்திப்பில் அமைக்கப்பட்டுள்ள பொது கழிப்பிடமும் பயன்பாடற்று கிடக்கிறது. மாநகராட்சி நிர்வாகம் திறந்தவெளியில் நிறுவும் பொது கழிப்பிடங்களில் பிளாஸ்டிக் கதவுகளை அமைக்கின்றன. அவை, காலப்போக்கில் வெயிலில் பட்டு உறுதியை இழந்துவிடுகின்றன. இதனால், பல கதவுகள் உடைந்து விடுகின்றன. முதல்வர் ஸ்டாலின் இப்போது சிங்கார சென்னை 2.0-வை அறிவித்து நிதியும் ஒதுக்கி வருகிறார்.
இந்நிலையில் இதுபோன்ற அசுத்த கழிப்பறைகளுக்கு சிங்கார சென்னை 2.0 இலட்சினையை ஒட்டி, முதல்வரின் பெயருக்கும் களங்கம் விளைவிப்பதாக திமுகவினரே மாநகராட்சி நிர்வாகத்தை குற்றம்சாட்டி வருகின்றனர். இதுதொடர்பாக சென்னை மாநகராட்சி அதிகாரிகளிடம் கேட்டபோது, “தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் மாநகரம் முழுவதும் அமைக்கப்பட்டுள்ள பொது கழிப்பிடங்களை 8 ஆண்டு ஒப்பந்த அடிப்படையில் வெளி நிறுவனங்கள் மூலம் முறையாக தூய்மையாக பராமரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது” என்றனர்.