சாத்தூர்: விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை அருகே சாலையோரத்தில் அரசுப் பேருந்து கவிழ்ந்து விபத்து ஏற்பட்டதில் பெண் பயணி ஒருவர் உயிரிழந்தார். 10க்கும் மேற்பட்டோர் பலத்த காயமடைந்தனர்.
திருநெல்வேலி மாவட்டம் திருவேங்கடபுரத்திலிருந்து சிவகாசி நோக்கி அரசுப் பேருந்து ஒன்று இன்று (நவம்பர் 14ம் தேதி) பிற்பகல் புறப்பட்டது. பேருந்தை, ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள பண்டிதநாதன்பட்டியைச் சேர்ந்த தங்கமணி என்பவர் ஓட்டிவந்தார். வெம்பக்கோட்டை அலமேலுமங்கைபுரம் அருகே வந்தபோது, மழையால் சாலையோரத்தில் சேறும் சகதியுமாக இருந்துள்ளது. அப்போது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து சேற்றில் சிக்கி சக்கரம் வழுக்கிச்சென்றதால் சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில், 10க்கும் மேற்பட்ட பயணிகள் பலத்த காயமடைந்தனர். பேருந்தில், 2 மாத கைக்குழந்தையுடன் பயணித்த சிவகாசி அருகே உள்ள செவல்பட்டியைச் சேர்ந்த முத்துமாரி (32) என்ற பெண் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அதிர்ஷ்டவசமாக குழந்தை லேசான காயங்களுடன் உயிர் தப்பியது. விபத்தைப் பார்த்த அப்பகுதி பொதுமக்கள் ஓடி வந்து மீட்புப் பணியில் ஈடுபட்டனர். காயமடைந்த பயணிகள் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக சிவகாசி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
காயமடைந்த அப்பையநாயக்கன்பட்டியைச் சேர்ந்த கமலா (50), ஆவுடையாபுரத்தைச் சேர்ந்த முத்துமாரி (60), கன்னிச்சேரி ஸ்டெலா (57), நாச்சியார்பட்டி முத்துலட்சுமி (38), ஜமீன்சல்வார்பட்டி விஜயலட்சுமி (49), செவல்பட்டி மகாலட்சுமி (38), மீனம்பட்டி ஸ்வர்ணமரியா (20), வெம்பக்கோட்டை முத்துலட்சுமி (65), எதிர்கோட்டை நாகலட்சுமி (32), சித்துராஜபுரம் சுமதி (21), வெள்ளிமலையூரணி சதீஷ் (30) ஆகிய 11 பேரும் தீவிர சிகிச்சைபெற்று வருகின்றனர். இந்த விபத்து குறித்து வெம்பக்கோட்டை போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.