
சென்னை: தமிழகத்தில் உள்ள 2 கூட்டுறவு சர்க்கரை ஆலை பணியாளர்களுக்கு 20 சதவீதம், 14 கூட்டுறவு மற்றும் 2 பொதுத்துறை சர்க்கரை ஆலைகளுக்கு 10 சதவீதம் போனஸ் வழங்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். சர்க்கரை ஆலைகளின் செயல் திறனை மேம்படுத்த,சம்பள நிலுவையை வழங்க ரூ.63.61கோடி முன்பண கடன் வழங்கவும் முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.
இதுகுறித்து தமிழக வேளாண் துறை வெளியிட்ட செய்திக்குறிப்பு:
கூட்டுறவு, பொதுத்துறை சர்க்கரை ஆலைகளில் பணிபுரிந்து வரும் தொழிலாளர்கள், பணியாளர்கள் அனைவரும் தீபாவளியை மகிழ்ச்சியுடன் கொண்டாடும் வகையில், போனஸ், கருணைத் தொகை வழங்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
அதன் அடிப்படையில், ஒதுக்கீட்டு உபரி உள்ள தருமபுரி மாவட்டம் ஆலப்புரம் சுப்ரமணிய சிவா மற்றும் கள்ளக்குறிச்சி – II ஆகிய 2 கூட்டுறவு சர்க்கரை ஆலைகளுக்கும் 20 சதவீதம் போனஸ் வழங்கவும், இதர 14 கூட்டுறவு மற்றும் 2 பொதுத்துறை சர்க்கரை ஆலைகளுக்கு 10 சதவீதம் போனஸ் வழங்கவும் முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.
இதன்மூலம் தமிழகத்தில் உள்ள16 கூட்டுறவு மற்றும் 2 பொதுத்துறைசர்க்கரை ஆலைகளில் பணியாற்றும் 6,103 தொழிலாளர்கள், பணியாளர்களுக்கு 2022-23-ம் ஆண்டுக்கான போனஸ் வழங்க ரூ.4.15 கோடிசெலவாகும்.
ரூ.253.70 கோடி நிதி ஒதுக்கீடு: 2022-23 அரவை பருவத்துக்கு கூட்டுறவு, பொதுத்துறை, தனியார் சர்க்கரை ஆலைகளுக்கு கரும்பு வழங்கிய தகுதி வாய்ந்த விவசாயிகளுக்கு ஒரு டன்னுக்கு ரூ.195 வழங்க ஏதுவாக ரூ.253.70 கோடிநிதி ஒதுக்கி முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
கரும்பு பற்றாக்குறை காரணமாக, ஆம்பூர், மதுரை மாவட்டம்மேட்டுப்பட்டி, நாகை மாவட்டம் தலைஞாயிறில் உள்ள கூட்டுறவு சர்க்கரை ஆலைகளின் அரவைஇயங்காமல் உள்ளது. இதனால், இங்கு பணிபுரிந்த விருப்பம் உள்ளபணியாளர்கள், தொழிலாளர்கள் அயல்பணியில் மற்ற கூட்டுறவு,பொதுத்துறை சர்க்கரை ஆலைகளில் பணிபுரிய ஆணையிடப்பட்டு அவர்களது வாழ்வாதாரம் பாதுகாக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இந்த ஆலைகளில் பணிபுரிந்த காலத்துக்கான சம்பளம் மற்றும் இதர சட்டப்பூர்வ நிலுவைகளை வழங்குமாறு தொழிலாளர்கள், பணியாளர்கள் தொடர்ச்சியாக கோரிக்கை விடுத்தனர். இதை பரிசீலித்த முதல்வர், இந்த 3சர்க்கரை ஆலைகளுக்கு முன்பணவழிவகை கடனாக ரூ.21.47 கோடி வழங்கி உத்தரவிட்டுள்ளார்.
மேலும், சர்க்கரை ஆலைகளின்செயல்திறனை அதிகரிக்க தஞ்சாவூர் மாவட்டம் குருங்குளம் அறிஞர் அண்ணா பொதுத்துறை சர்க்கரை ஆலை, சேத்தியாதோப்பு எம்ஆர்கே, சேலம், திருப்பத்தூர், திருத்தணி, வேலூர், கோவை மாவட்டம் கிருஷ்ணாபுரம் அமராவதி ஆகிய கூட்டுறவு சர்க்கரை ஆலைகளுக்கும் இயந்திர பழுது நீக்கம்,பராமரிப்பு பணிகளுக்கு தேவைப்படும் செயல்பாட்டு பண மூலதனதொகைக்கு முன்பண வழிவகை கடனாக ரூ.42.14 கோடி வழங்கியுள்ளார். இதன்மூலம், வரும் பருவத்தில் இந்த சர்க்கரை ஆலைகளின் செயல்திறன் அதிகரிக்கும் சூழ் நிலை ஏற்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட் டுள்ளது.
டாஸ்மாக் பணியாளர்களுக்கு 20 சதவீதம் போனஸ்: தமிழக அரசு நேற்று முன்தினம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
தமிழ்நாடு மாநில வாணிபக் கழகத்தில் (டாஸ்மாக்) பணியாற்றும் சி மற்றும் டி பிரிவு பணியாளர்களுக்கு 8.33 சதவீதம் போனஸ் மற்றும் 11.67 சதவீதம் கருணைத்தொகை என 20 சதவீதம் வழங்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
இதன்படி, தலைமை அலுவலகம் மற்றும் தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து மண்டலங்கள், மாவட்ட மேலாளர் அலுவலகங்கள், மதுபானக் கிடங்குகள், மதுபான சில்லறை விற்பனைக் கடைகள் ஆகியவற்றில் பணியாற்றும் 25,690 பணியாளர்களுக்கு, ரூ.43.16கோடி போனஸ் மற்றும் கருணைத் தொகை வழங்க உத்தரவிடப் பட்டுள்ளது’’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.