புதுடெல்லி: சம்பு எல்லைப் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள தடுப்புகளை நீக்குவது தொடர்பான வழக்கில், விவசாயிகளின் குறைகளை தீர்ப்பதற்கு உயர்மட்ட குழுவை உச்ச நீதிமன்றம் அமைத்துள்ளது.
வேளாண் விளைப் பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு உறுதி மற்றும் பல்வேறுகோரிக்கைகளை மத்திய அரசிடம் விவசாயிகள் வைத்துள்ளனர். அந்தக் கோரிக்கைகளை வலியுறுத்தி பஞ்சாப் – ஹரியானாவின் சம்பு எல்லைப் பகுதியில் இருந்து டெல்லி நோக்கி பேரணி நடத்தப்படும் என்று சம்யுக்தா கிஸான் மோர்ச்சா விவசாயிகள் சங்கம் அறிவித்தது. மேலும், சம்பு எல்லையில் ஏராளமான டிராக்டர்கள், வாகனங்களில் விவசாயிகள் குவிந்தனர்.
இதையடுத்து சம்பு எல்லை பகுதியை ஹரியானா அரசு கடந்த பிப்ரவரி மாதம் மூடிவிட்டது. அங்கு ஏராளமான தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. இதனால் பொதுமக்கள் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுதொடர்பான வழக்கை விசாரித்த பஞ்சாப் – ஹரியானா உயர் நீதிமன்றம், ஒருவாரத்துக்குள் சம்பு எல்லைப் பகுதிகளில் உள்ள தடுப்புகளை அகற்றி சாலையை திறந்துவிடும்படி கடந்த ஜூலை 10-ம் தேதி உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் ஹரியானா அரசு மேல்முறையீடு செய்தது.
அதில், ‘‘சம்பு எல்லையில் தினமும் 500-க்கும் மேற்பட்ட விவசாயிகள் குவிகின்றனர். ஏராளமான டிரக்குகள், டிராக்டர்கள் குவிக்கப்பட்டுள்ளன. டெல்லி நோக்கி பேரணி சென்றால் சட்டம் ஒழுங்கு சீர்குலையும். எனவே, சம்பு எல்லையை திறக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டதை ரத்துசெய்ய வேண்டும்’’ என்று கோரியது. இந்த வழக்கை உச்ச நீதிமன்றநீதிபதிகள் சூர்யகாந்த் மற்றும் உஜ்ஜால் புயான் அமர்வு விசாரித்து வந்தது.
இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, விவசாயிகளின் குறைகளை கேட்டறிந்து அவற்றுக்கு தீர்வு காண்பது குறித்து ஆராய உயர்மட்ட குழுஅமைப்பதாக நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும், விவசாயிகளுக்கும் மத்திய அரசுக்கும் இடையில் நம்பிக்கை பற்றாக்குறை இருப்பதை ஒப்புக் கொண்ட நீதிபதிகள், விவசாயிகளின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு கால அவகாசம் வேண்டும் என்பதையும் ஏற்றுக் கொண்டனர்.
உயர் மட்ட குழு விவசாயிகளுடன் ஒரு வாரத்துக்குள் பேச்சுவார்த்தை தொடங்க வேண்டும்.அவர்களுடைய முக்கிய பிரச்சினைகளைக் கண்டறிந்து அவற்றுக்கு தீர்வு காண வேண்டும். உயர்மட்ட குழுவினருடன் பேச்சுவார்த்தை நடத்தும் போது விவசாயிகளும் தங்கள் பிரச்சினைகளை அரசியலாக்காமல், அரசியலில் இருந்து விலகி பிரச்சினைகளைப் பற்றி மட்டும் பேசி தீர்வு காண வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.