
பெங்களூரு அருகில் உள்ள பெயலாலு என்ற இடத்தில் பிரம்மாண்ட ஆன்ட்டனா மூலம் விக்ரம் லேண்டர் தரையிறங்கும் பாதை கண்காணிக்கப்பட்டது. இந்தியாவின் மிகப் பெரிய இந்த ஆண்டனா 38 மீட்டர் குடை வடிவத்தில் உள்ளது.
இந்நிலையில், விக்ரம் லேண்டர் நிலவின் இருண்ட அல்லது அடர்த்தியான நிழல் படர்ந்த பகுதியில் தரையிறங்கும்போது, பெங்களூருவில் இருந்து ஆன்ட்டனா மூலம் அதன் பாதையை துல்லியமாக கணிக்க இயலாது. இதற்குதான் நாசாவும், ஐரோப்பிய விண்வெளி ஆய்வு மையமும் (இஎஸ்ஏ) இஸ்ரோவுக்கு உதவ முன்வந்தன. அதன்படி, விக்ரம் லேண்டர் நிலவில் தரையிறங்கும் போது, அது எந்தப் பாதையில் செல்கிறது, தூரம், நேரம் போன்ற அனைத்து தகவல்களையும் நாசா மற்றும் இஎஸ்ஏ கண்டறிந்து இஸ்ரோவுக்கு உடனுக்குடன் தகவல் அளித்தது. அதற்காக பயன்படுத்தும் அதிநவீன ஆன்ட்டனாக்கள் மற்றும் விக்ரம் லேண்டரின் பாதையை கண்காணித்து தகவல் அளிக்க எத்தனை மணி நேரம் ஆகிறதோ, அதற்கேற்ப கட்டணத்தை இஸ்ரோவிடம் இருந்து நாசாவும் இஎஸ்ஏ.வும் பெற்றுக் கொள்கின்றன.
எனவே, இந்தியாவின் ஆன்ட்டனா மூலம் விக்ரம் லேண்டரை தொடர்ந்து கண்காணிக்க முடியாத நிலையில், நாசாவும் இஎஸ்ஏவும் அதை கண்டறிந்து பெங்களூருவில் உள்ள கட்டுப்பாட்டு மையத்துக்கு உடனுக்குடன் தகவல் அளித்து கொண்டே இருந்தது. அதேவேளையில், விக்ரம் லேண்டரை கட்டுப்படுத்தவோ அல்லது அதற்கு என்ன கட்டளை வழங்க வேண்டும் என்பதை நாசா அல்லது இஎஸ்ஏ வழங்க முடியாது.
விக்ரம் லேண்டரின் பாதையை மட்டும் கண்டறிந்து தகவல் அளிப்பதோடு அவர்கள் வேலை முடிந்து விடும். வேறு எந்த வகையிலும் இத்திட்டத்தில் அவர்கள் தலையிட முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.