
கோவை: கனமழையின் காரணமாக, கோவை ஐஓபி காலனியில் அடித்துச் செல்லப்பட்ட தரைப்பாலத்தை மாநகராட்சி நிர்வாகத்தினர் சீரமைத்தனர். கோவையில் கடந்த 8-ம் தேதி இரவில் இருந்து மறுநாள் காலை வரை விடிய விடிய மழை பெய்தது. இதன் காரணமாக மருதமலை அடிவாரப் பகுதியில் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. 38-வது வார்டுக்குட்பட்ட ஐஓபி காலனியில் சங்கனூர் கால்வாய் பகுதியை கடக்கும் வகையில் உள்ள தரைப்பாலத்தின் பெரும்பகுதி வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது.
இதனால் அவ்வழியே போக்குவரத்து தடைபட்டது. இதையடுத்து, நகராட்சி நிர்வாக இயக்குநர் சிவராசு, மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி, மாநகராட்சி ஆணையர் சிவகுரு பிரபாகரன் மற்றும் அதிகாரிகள் ஆய்வு செய்து, சாலையை உடனடியாக சீரமைக்க உத்தரவிட்டனர். தரைப்பாலம் இருந்த பகுதியில் சிமென்ட் குழாய்கள் மற்றும் மண் மூட்டைகளை அடுக்கி, 4 மணி நேரத்தில் பாலம் சீரமைக்கப்பட்டு வாகனப் போக்குவரத்து அனுமதிக்கப்பட்டது.

படம்: ஜெ.மனோகரன்
2,500 கோழிகள் உயிரிழப்பு: கனமழை காரணமாக அன்னூர் வட்டாரத்தில் கணுவக்கரைப் பகுதியில் உள்ள ஒரு தோட்டத்து கோழிப்பண்ணையில் வளர்க்கப்பட்டுவந்த 2,500 கோழிகள் வெள்ளநீரில் அடித்துச் செல்லப்பட்டு உயிரிழந்தன. அன்னூர் கட்ட பொம்மன் நகர், அல்லி குளம், தாசம்பாளையம் உள்ளிட்ட இடங்களில் உள்ள தோட்டங்களில் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாழை மரங்கள் நீரில் மூழ்கின. காளியாபுரம், பணந்தோப்பு மயில், தர்மர் கோயில் வீதி ஆகிய இடங்களில் உள்ள 40-க்கும் மேற்பட்ட வீடுகளில் மழைநீர் புகுந்தது. குப்பனூர், ஆம்போதி, பொகலூர் ஊராட்சிகளில் 3 வீடுகள் இடிந்து சேதமடைந்தன.
கோவை செல்வபுரம் பகுதியில் உள்ள செல்வசிந்தாமணி குளம் நிரம்பி உபரி நீர் உக்கடம்- செல்வபுரம் பைபாஸ் சாலையில் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் அசோக் நகர், பிரபு நகர், சாவித்திரி நகர் மற்றும் அதன் சுற்றுப்புறப் பகுதிகளில் உள்ள குடியிருப்புகளில் நீர் புகுந்தது. நூற்றுக்கும் மேற்பட்ட குடியிருப்புகளில் தண்ணீர் புகுந்ததால், அங்கு வசித்த மக்கள் கடும் சிரமத்துக்கு உள்ளாகினர். தகவல் அறிந்து அங்கு வந்த மாவட்ட மற்றும் மாநகராட்சி நிர்வாகத்தினர், பாதிக்கப்பட்ட மக்களை மீட்டு அருகில் உள்ள திருமண மண்டபங்களில் தங்க வைத்தனர்.
அப்பகுதி மக்கள் கூறும்போது,‘‘முதல்வராக எம்ஜிஆர் பதவி வகித்த காலத்துக்குப் பிறகு இப்போது தான், இதுபோன்ற நிலைமையை சந்தித்துள்ளோம். மக்கள் பிரதிநிதிகள் நீர் வெளியேறும் இடத்தை பார்வையிட்டு சென்று விடுகின்றனர். பாதிக்கப்பட்ட வீடுகளுக்கு நேரடியாக வந்து பார்ப்பதில்லை’’ என்றனர். இதேபோல், செல்வபுரத்தில் உள்ள மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி வளாகத்திலும் மழை நீர் புகுந்தது. இந்த மழைநீர் நேற்றும் வடியவில்லை. இதனால் நேற்று அந்த பள்ளிக்கு விடுமுறை விடப்பட்டது.