Cinema

“கோழைத்தனமான செயல்” – மலையாள நடிகர் சங்க நிர்வாகிகளின் ராஜினாமாவை சாடிய பார்வதி | Actor Parvathy on Mohanlal-led panel mass resignation

“கோழைத்தனமான செயல்” – மலையாள நடிகர் சங்க நிர்வாகிகளின் ராஜினாமாவை சாடிய பார்வதி | Actor Parvathy on Mohanlal-led panel mass resignation


கொச்சி: மலையாள நடிகர் சங்கமான அம்மா அமைப்பில் இருந்து மோகன்லால் உள்ளிட்ட நிர்வாகிகள் ராஜினாமா செய்ததை கோழைத்தனமான செயல் என்று விமர்சித்துள்ளார் நடிகை பார்வதி.

ஹேமா கமிட்டி அறிக்கை வெளியான பிறகு மலையாள திரையுலகில் பாலியல் புகார் தொடர்பான சர்ச்சை வெடித்துள்ளது. இந்த சூழலில் மலையாள திரைப்பட கலைஞர்கள் சங்கமான ‘அம்மா’ (AMMA) அமைப்பின் தலைவர் பொறுப்பிலிருந்து நடிகர் மோகன்லால் ராஜினாமா செய்துள்ளார். மேலும் செயற்குழு உறுப்பினர்கள் அனைவரும் கூண்டோடு ராஜினாமா செய்தனர்.

அம்மா அமைப்பு நிர்வாகிகளின் இந்த செயல் குறித்து கருத்து தெரிவித்துள்ள நடிகை பார்வதி இதனை கோழைத்தனமான செயல் என்று விமர்சித்துள்ளார். இது குறித்து பேட்டி ஒன்றில் பேசிய அவர் கூறியதாவது: “இந்த செய்தியை கேள்விப்பட்ட உடனே என் மனதில் தோன்றிய முதல் விஷயம், ‘எவ்வளவு கோழைத்தனமான செயல் இது?’ என்பதுதான். ஊடகங்களிடம் இதுகுறித்து விளக்க வேண்டிய இடத்தில் இருக்கும் அவர்கள் எவ்வாறு கோழைத்தனமாக பொறுப்பிலிருந்து விலகலாம்?

மீண்டும் இந்த விவாதத்தை முன்னோக்கி எடுத்துச் செல்லும் பொறுப்பு பெண்களிடமே வந்துள்ளது. பெண்கள்தான் முன்வந்து புகாரளித்து எஃப்ஐஆர் பதிவு செய்ய வேண்டும் என்பது போன்ற கருத்துகளை கூறி கேரள அரசும் அலட்சியமாகவே இருந்தது. ஒட்டுமொத்த சுமையும் பெண்கள் மீதே சுமத்தப்பட்டு, அதன் பிறகான பின்விளைவுகளையும் சந்திக்க வேண்டிய நிலை ஏற்படுத்தப்படுகிறது. ஒருவேளை நாங்கள் தைரியமாக முன்வந்து பெயர்களை கூறினால், எங்களுக்கு நீதி கிடைக்கும் என்பதற்கு என்ன உத்தரவாதம்? அதன் பிறகு, எங்களுடைய கரியர், வாழ்க்கை, கோர்ட் செலவு, மனநல பிரச்சினைகள் இதைப் பற்றியெல்லாம் யாரும் கவலைப்படுவதில்லை” இவ்வாறு பார்வதி தெரிவித்தார்.

நடந்தது என்ன? – மலையாள திரையுலகில் நடிகைகள் மற்றும் பெண் கலைஞர்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல்கள் குறித்து விசாரித்த நீதிபதி ஹேமா கமிட்டியின் அறிக்கை, சில தினங்களுக்கு முன் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. அது வெளியான பின் பல நடிகைகள், தங்களுக்கும் பல்வேறு பாலியல் துன்புறுத்தல்கள் நடந்ததாக தற்போது கூறி வருகின்றனர். நடிகர்கள், ஜெயசூர்யா சித்திக், ரியாஸ் கான் உட்பட பலர் மீதும் புகார்கள் கூறப்பட்டுள்ளன. இதற்கிடையே வங்க மொழி நடிகை ஸ்ரீலேகா மித்ரா, பிரபல இயக்குநரும் மலையாள சினிமா அகாடமி தலைவருமான ரஞ்சித் மீது பாலியல் புகார் கூறியிருந்தார்.

இதனால் சினிமா அகாடமி தலைவர் பொறுப்பிலிருந்து ரஞ்சித் விலக வேண்டும் என்ற கோரிக்கை எழுந்ததால் பதவியிலிருந்து அவர் விலகினார். முன்னதாக ‘அம்மா’ அமைப்பின் பொதுச்செயலாளராக இருந்த சித்திக் மீது பாலியல் புகார் அளிக்கப்பட்ட நிலையில், அவரும் பதவியை ராஜினாமா செய்தார்.

தொடர்ந்து இந்த விவகாரத்தில் ‘அம்மா’ அமைப்பின் தலைவர் மோகன்லால் அமைதி காப்பதாக புகார் எழுந்த நிலையில், தனது தலைவர் பொறுப்பை மோகன்லாலும் ராஜினாமா செய்தார். அவருடன் மற்ற செயற்குழு உறுப்பினர்களும் ராஜினாமா செய்தனர். மலையாள நடிகர்கள் சங்கத்தில் நிகழ்ந்த இந்த ‘கூண்டோடு’ ராஜினாமா முடிவு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்கிடையே ஹேமா கமிட்டி அறிக்கையின் அடிப்படையில் பாலியல் புகார்கள் குறித்து விசாரிக்க, சிறப்பு புலனாய்வு குழுவை கேரள அரசு அமைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.





Source link

W2L
About Author

W2L

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *