கொடைக்கானல்: கோடை சீசன் முடிந்த நிலையிலும், வார விடுமுறை நாளான நேற்று கொடைக்கானலில் சுற்றுலாப் பயணிகள் கூட்டம் அலைமோதியது.
சனி, ஞாயிறு வார விடுமுறையை முன்னிட்டு கொடைக்கானலுக்கு நேற்று முன்தினம் இரவு முதலே அதிக அளவில் சுற்றுலாப் பயணிகள் வந்தனர். நேற்று காலை சுற்றுலாப் பயணிகளின் வருகை மேலும் அதிகரித்தது. பிரையன்ட் பூங்கா, மோயர் சதுக்கம், பைன் ஃபாரஸ்ட், குணாகுகை, வெள்ளி நீர்வீழ்ச்சி, பாம்பார்அருவி உள்ளிட்ட சுற்றுலா மையங்களில் கூட்டம் அலைமோதியது.
சுற்றுலா இடங்களுக்குச் செல்லும் சாலைகளில் கடும் போக்குவரத்து நெரிசல் நிலவியது. எனவே, வாகனங்கள் மிக மெதுவாகச் செல்ல வேண்டியிருந்தது.
சுற்றுலாப் பயணிகள் நீண்ட வரிசையில் காத்திருந்து ஏரியில் படகுச் சவாரி செய்தனர். இதமான வெயில், மேக மூட்டத்துடன் ரம்மியமான தட்பவெப்ப நிலை, அவ்வப்போது லேசான சாரலால் சுற்றுலாப் பயணிகள் பெரிதும் மகிழ்ந்தனர்.
கோடை சீசன் முடிந்து 3 வாரங்களுக்கு மேலாகியும், வார விடுமுறை நாட்களில் சுற்றுலாப் பயணிகளின் கூட்டம் குறையவில்லை. இதனால், உள்ளூர் சாலையோர வியாபாரிகள், சுற்றுலாவை நம்பியுள்ள தொழிலாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.