
கொடைக்கானல்: கொடைக்கானல் பேரிஜம் ஏரியில் வனத்துறை சார்பில் முதன் முறையாக பரிசல் சவாரி நேற்று முதல் தொடங்கப்பட்டது.
கொடைக்கானலில் உள்ள முக்கிய சுற்றுலா தலங்களில் பேரிஜம் ஏரி, பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் உள்ளது. இதனால் வனத்துறையினரிடம் அனுமதி பெற்ற பின்னரே சுற்றுலாப் பயணிகளால் அங்கு செல்ல முடியும். பேரிஜம் ஏரிக்குச் செல்லும் வழியில் தொப்பி தூக்கிப் பாறை, மதி கெட்டான் சோலை, வியூ பாய்ண்ட், அமைதி பள்ளத்தாக்கு உள்ளிட்ட இடங்களை பார்த்து ரசிக்கலாம்.
இந்நிலையில் கொடைக்கானல் நட்சத்திர ஏரி மற்றும் மன்னவனூர் ஏரியில் இருப்பதைப்போல், பேரிஜம் ஏரியிலும் பரிசல் அல்லது படகு சவாரி தொடங்க வேண்டும் என சுற்றுலா பயணிகள் தொடர்ந்து கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து, நேற்றுமுதல் பேரிஜம் ஏரியில் பரிசல் சவாரி தொடங்கப்பட்டது.
ஒரு பரிசலில் 5 பேர் வரை செல்லலாம். பயணிகளுக்கு லைப் ஜாக்கெட் வழங்கப்படுகிறது. ஒரு நபருக்கு ரூ.150 கட்டணம் வசூலிக்கப்படுகிறது. முதல்கட்டமாக தற்போது 3 பரிசல் இயக்கப்படுகிறது. பசுமை போர்த்திய மலைத்தொடர்கள், ஓங்கி உயர்ந்த மரங்களுக்கு நடுவில் பரந்து விரிந்த ஏரியில் சுற்றுலா பயணிகள் ஆர்வமுடன் பரிசல் சவாரி செய்து மகிழ்ந்தனர்.
இந்த ஏரி தண்ணீர் தேனி மாவட்டம் பெரியகுளம் பகுதி மக்களின் குடிநீர் ஆதாரமாக உள்ளது. மேலும் ஆசியாவிலேயே 2-வது மிகப்பெரிய நன்னீர் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே, ஏரி தண்ணீர் மாசுபடாமல் பரிசல்களை இயக்க வேண்டும் என இயற்கை ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.