
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் கீழ் மலைக் கிராமங்களில் பகலேயே இரவு போல மாற்றிய பனிமூட்டத்தை சுற்றுலா பயணிகள் வியந்து ரசித்தனர்.
கொடைக்கானல் மலைக்கிராமங்களில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. நேற்று (அக்.2) பகலில் இதமான தட்பவெப்பநிலையும், பிற்கபலில் குளிரும் நிலவியது. கொடைக்கானல் கீழ்மலை கிராமங்களான வடகவுஞ்சி, மேல்பள்ளம், கோம்பைக்காடு, கடம்பன் ரேவ், சவரிக்காடு உள்ளிட்ட பகுதிகளில் நேற்று (அக்.2) நண்பகல் 12 மணிக்கு மேல் அடர்ந்த பனி மூட்டத்துடன் விட்டு விட்டு சாரல் மழை பெய்தது.
இதனால் சாலையில் எதிரே வரும் வாகனங்கள் மட்டுமின்றி நடந்து செல்லும் ஆட்கள் கூட தெரியாத அளவு பனி மூட்டம் சூழ்ந்தது. வாகனங்கள் முகப்பு விளக்கை எரியவிட்டு மலைச்சாலையில் மெதுவாக பயணித்தன. அதாவது, பகலே இரவு போல் காணப்பட்டது. தரையிங்கி வந்த மேக கூட்டத்தின் நடுவில் சுற்றுலா பயணிகள் புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர். இருப்பினும், பகலிலேயே பனிமூட்டம் அதிகளவில் காணப்பட்டதால் இயற்கை காட்சிகளை கண்டு ரசிக்க முடியாமல் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர். இரவில் கடும் குளிர் நிலவியது.