
தஞ்சாவூர்: தமிழகத்துக்குரிய தண்ணீரை திறக்க கர்நாடக அரசு மறுத்து வரும் நிலையில், தற்போது பெய்து வரும் மழையால் ஆறுகளில் தண்ணீர் வருவதால், சம்பா சாகுபடியில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். காவிரி டெல்டா மாவட்டங்களில் பாசனத்துக்காக மேட்டூர் அணை கடந்த ஜூன் 12-ம் தேதி திறக்கப்பட்ட நிலையில், போதிய தண்ணீர் இல்லாத காரணத்தாலும், தமிழகத்துக்குரிய தண்ணீரை தர கர்நாடக அரசு தொடர்ந்து மறுத்து வருவதாலும், மேட்டூர் அணையிலிருந்து பாசனத்துக்காக தண்ணீர் திறப்பது கடந்த அக்.10-ம் தேதியுடன் நிறுத்தப்பட்டது. அதைத்தொடர்ந்து குடிநீர் தேவைக்காக மட்டுமே விநாடிக்கு 500 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு வந்தது.
அதுவும் கடந்த சில வாரங்களாக 300 கனஅடியாக குறைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், வடகிழக்குப் பருவமழையின் காரணமாக தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்த மழை மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் அதிகளவில் பெய்வதால் பவானி ஆற்றில் அதிகளவு தண்ணீர் வந்து, காவிரியில் கலக்கிறது. இந்த தண்ணீர் நேற்று முன்தினம் கல்லணையை வந்தடைந்தது. இதையடுத்து, கல்லணையிலிருந்து 3 வாரங்களுக்கு பிறகு டெல்டா மாவட்டங்களின் பாசனத்துக்காக, நேற்று முன்தினம் மாலை முதல் காவிரியில் விநாடிக்கு 1,500 கனஅடியும், வெண்ணாற்றில் 1,008 கனஅடியும், கல்லணைக் கால்வாயில் 1,262 கனஅடியும், கொள்ளிடத்தில் 1,702 கனஅடியும் தண்ணீர் திறந்து விடப்படுகிறது. இந்த தண்ணீர் தற்போது சாகுபடி செய்யப்பட்டுள்ள சம்பா, தாளடி நெற்பயிருக்கு பெரிதும் பயனுள்ளதாக இருக்கும் என விவசாயிகள் நம்பிக்கை தெரிவித்தனர்.
இதுகுறித்து நீர்ப்பாசனத் துறையினர் கூறும்போது, ‘‘மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் தற்போது பெய்யும் மழையால், பவானி ஆற்றின் மூலம் காவிரிக்கு நீர் வருகிறது. இந்த நீர் கல்லணைக்கு வந்துள்ளதால், டெல்டா மாவட்ட ஆறுகளில் திறக்கப்பட்டுள்ளது. மேலும், தற்போது டெல்டா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்து வருவதால், சம்பா மற்றும் தாளடி சாகுபடியில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுக்கு இம்மழை பயனுள்ளதாக இருக்கும்’’ என்றனர்.
இதுகுறித்து விவசாயிகள் கூறும்போது, ‘‘டெல்டாவில் சம்பா சாகுபடி செய்யப்பட்டு பாசன தண்ணீர் இல்லாமலும், போதிய மழை இல்லாமலும் இருந்த நிலையில், தற்போது ஆற்றில் வரும் தண்ணீர் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதே நேரத்தில் டெல்டாவில் பரவலாக மழை பெய்வதால், அதை சாகுபடிக்கு பயன்படுத்த முடியும். மேலும் தற்போது ஆற்றில் வரும் நீரை, ஆங்காங்கே உள்ள ஏரி, குளங்களில் நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றனர்.