சென்னை: கைவினை பொருட்கள் பயன்படுத்துவதை ஊக்குவிக்கும் வகையில் கல்வி நிறுவனங்களில் பிரச்சாரம் மேற்கொள்ள பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) அறிவுறுத்தியுள்ளது.
இதுகுறித்து யுஜிசி செயலர்மணீஸ் ஆர்.ஜோஷி, அனைத்துபல்கலைக்கழக துணை வேந்தர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை:
இந்தியாவின் ஒவ்வொரு மாவட்டத்தையும் ஏற்றுமதி மையமாக மாற்றும் வகையில், ‘ஒரு மாவட்டம் ஒரு பொருள்’ என்ற திட்டத்தை 2019-ல் பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். நாட்டின் ஊரக பகுதிகளை வளப்படுத்துவதையும், மாவட்ட அளவில் பொருளாதார வளர்ச்சியை உயர்த்துவதையும் நோக்கமாக கொண்டு இத்திட்டம் செயல்பட்டு வருகிறது.
உள்ளூர் தயாரிப்பு பொருட்கள்: இத்திட்டத்துடன் சேர்த்து புவியியல் சார்ந்த குறிப்புகள், பாரம்பரியமிக்க உள்ளூர் தயாரிப்பு பொருட்களான கைவினை பொருட்களின் முக்கியத்துவம், அவற்றை பயன்படுத்துவது குறித்து மக்களிடையே எடுத்துரைக்கும் வகையிலான பிரச்சாரத்தை மத்திய தொழில்துறை அமைச்சகம் கடந்த நவ.3-ம் தேதி தொடங்கியது.
இதன் ஒருபகுதியாக கல்லூரிகளில் உள்ளூர் தயாரிப்பு பொருட்களை மாணவர்கள் தெரிந்துகொள்ளும் வகையில் பல்வேறுபோட்டிகளை நடத்துவது, பொருட்கள் தயாரிக்கும் முறை குறித்த வீடியோக்களை திரையிடுவது, கைவினை கலைஞர்களின் அனுபவங்களை நேரடியாக பகிரச் செய்வது போன்றவற்றை கல்வி நிறுவனங்கள் ஏற்பாடு செய்ய வேண்டும். போட்டிகளில் மாணவர்கள் அதிக அளவில் பங்கேற்பதையும் உறுதி செய்ய வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.