
நடிகரும் தயாரிப்பாளருமான விஜய்பாபு மீது கேரள மாநிலத்தில் பிரபல நடிகை ஒருவர் பாலியல் புகார் அளித்துள்ளார். கடந்த மார்ச் 13, 14 ஆகிய தேதிகளில் தனக்கு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக நடிகை போலீசில் புகார் அளித்துள்ளார்.சினிமாவில் வாய்ப்பு தருவதாக கூறி விஜய்பாபு தனக்கு மது மற்றும் போதை மருந்து கொடுத்து பாலியல் பலாத்காரம் செய்ததாக நடிகை புகார் மனுவில் கூறியுள்ளார். . இதுகுறித்து எர்ணாகுளம் தெற்கு போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், சம்பந்தப்பட்ட நடிகையின் பெயரை ஃபேஸ்புக் லைவில் விஜய்பாபு கூறியதாக கூறப்படுகிறது. பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகும் பெண்களின் பெயர்கள் பொதுவாக பொதுவெளியில் குறிப்பிடப்படுவதில்லை என்பது விதி. ஆனால், முகநூல் லைவில் சம்பந்தப்பட்ட நடிகையின் பெயரை குறிப்பிட்ட விஜய்பாபு மீது தனி வழக்கு பதிவு செய்ய போலீசார் தயாராகி வருகின்றனர்.
சர்ச்சைக்குரிய ஃபேஸ்புக் லைவ்வில் பேசிய விஜய்பாபு, “நடிகை மன அழுத்தத்தில் இருந்தார். என்னை சந்திக்க விரும்புவதாகவும் கூறினார். அவர் புகார் கூறியதால் என் மனைவி, அம்மா, நண்பர்கள் வருத்தம் அடைந்துள்ளனர். நான் பாதிக்கப்பட்டவன். எனவே, அந்த நடிகையின் பெயரைச் சொல்லிவிடுகிறேன். இவ்வாறு வரும் வழக்கை எதிர்கொள்கிறேன். நடிகை என்னுடன் உரையாடியதற்கான ஆதாரம் உள்ளது. அவர் மீது அவதூறு வழக்கு தொடர்வேன். “

புகார் அளித்த நடிகையை மிரட்டும் வகையில் விஜய்பாபு பேசியதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன. கடந்த சனிக்கிழமை துபாய் சென்ற விஜய்பாபு தற்போது துபாயில் இருப்பதாக கூறப்படுகிறது. இதையடுத்து, புகார் அளித்த நடிகையிடம் போலீஸார் ரகசிய விசாரணையும், மருத்துவப் பரிசோதனையும் நடத்தவுள்ளனர். கேரள சினிமா நடிகையின் பாலியல் புகார் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.