
உடுமலை: உடுமலை அருகே மேற்கு தொடர்ச்சி மலைகளில் இருந்து மழைக்காலங்களில் கிடைக்கும் தண்ணீர், காண்டூர் கால்வாய்க்கு திருப்பி விடப்பட்டுள்ளதால் விவசாய நிலங்கள் பாதிக்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது. பிஏபி திட்டத்தின் உயிர் நாடியாக காண்டூர் கால்வாய் விளங்குகிறது. மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் பெய்யும் மழை நீர், காண்டூர் கால்வாயை கடந்து, திருமூர்த்தி அணையை வந்தடைகிறது. ஆனால் காண்டூர் கால்வாய் புனரமைப்பின்போது ஓடைகளுக்கு வரவேண்டிய தண்ணீர் தடுக்கப்பட்டு விட்டதாக விவசாயிகள் புகார் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து அப்பகுதி விவசாயிகள் கூறியதாவது: திருமூர்த்தி நகர், வலையபாளையம், ராவணாபுரம், தேவனூர்புதூர், அர்த்தநாரிபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 5000 ஏக்கர் பரப்பளவில் வேளாண் சாகுபடி நடைபெற்று வருகிறது. இந்த நிலங்கள் அனைத்தும் பிஏபி திட்டத்தில் இணைக்கப்படவில்லை. அதனால் மழையை மட்டுமே நம்பி இருக்க வேண்டியுள்ளது. குறிப்பாக மேற்கு தொடர்ச்சி மலைகளில் இருந்து கிடைத்த மழை நீரால் மத்தள ஓடை உள்ளிட்ட சிற்றோடைகள் வழியாக குளங்கள் நிரம்பும்.
காண்டூர் கால்வாய் புனரமைப்பின் போது ஓடைகளுக்கு வரவேண்டிய தண்ணீர் தடுக்கப்பட்டுவிட்டது. அதனால் குளங்கள் வறண்டு, நிலத்தடி நீர் மட்டமும் வெகுவாக சரிந்து விட்டது. எனவே பல ஆண்டுகளாக பூகோள ரீதியாக கிடைத்து வந்த மழை நீரை தடுத்ததை ஏற்றுக்கொள்ள முடியாது. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.