
ஓசூர்: காவிரியில் தண்ணீர் வழங்க மறுக்கும் கர்நாடக அரசைக் கண்டித்து, ஓசூரில் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சார்பில் சாலை மறியல் போராட்டம் நடந்தது.
தமிழகத்துக்கு காவிரி நீர் வழங்க மறுக்கும் கர்நாடக அரசை கண்டித்து, தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சார்பில், கர்நாடக மாநில எல்லையில் நேற்று முற்றுகை போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து, ஓசூர் இஎஸ்ஐ மருத்துவமனை அருகே நேற்று தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க நிறுவனத் தலைவர் ஈசன் முருகசாமி தலைமையில் நிர்வாகிகள் திரண்டனர். பின்னர் அங்கிருந்து பேரணியாக கர்நாடக மாநில எல்லையை நோக்கி காலிக் குடங்களுடன் புறப்பட்டனர்.
அப்போது, கர்நாடக அரசுக்கு எதிராக முழக்கமிட்டபடி சென்றனர். ஓசூர் உள்வட்ட சாலை சந்திப்பு அருகே பேரணி வந்தபோது, அவர்களை அங்கு பாதுகாப்புப் பணியிலிருந்த போலீஸார் தடுத்து நிறுத்தனர். இதையடுத்து, விவசாயிகள் அப்பகுதியில் உள்ள சர்வீஸ் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். சுமார் 1 மணி நேரம் மறியல் நீடித்தது. பின்னர் விவசாயிகள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால், அப்பகுதியில் ஒரு மணி நேரம் பரபரப்பு நிலவியது.