கொச்சி: “ஒவ்வொரு தனிநபருக்கும் அவரது கருத்துகளை வெளிப்படுத்த உரிமை உண்டு. ஆனால், அந்தக் கருத்துகள் அவர்களது கருத்துகளாக இருக்க வேண்டும்” என நடிகர் மம்மூட்டி தெரிவித்துள்ளார்.
ஜியோ பேபி இயக்கத்தில் மம்மூட்டி – ஜோதிகா நடித்துள்ள ‘காதல் தி கோர்’ மலையாள படம் வரும் 23-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்நிலையில், கொச்சியில் நடந்த படத்தின் புரமோஷன் நிகழ்வில் கலந்துகொண்டு பேசிய நடிகர் மம்மூட்டி, “திரைப்படங்களை பார்த்து விமர்சனம் செய்யட்டும். ஒவ்வொரு தனிநபருக்கும் அவரது கருத்துகளை வெளிப்படுத்த உரிமை உண்டு. ஆனால், அது அவர்களின் சொந்தக் கருத்துக்களாக இருக்க வேண்டும். வெளிப்புற அழுத்தங்களாலோ, மற்றவர்களின் உந்துதல் காரணங்களாகவோ அந்த விமர்சனங்கள் இருக்கக் கூடாது. ஆன்லைன் விமர்சனங்களை தடை செய்வதால் திரையுலகை காப்பாற்றிவிட முடியும் என நான் நினைக்கவில்லை. அதேபோல, ஒரு படத்தின் முடிவு என்பது ஆன்லைன் விமர்சனங்களால் மட்டுமே தீர்மானிக்கப்படுகிறது என்பதிலும் எனக்கு நம்பிக்கையில்லை” என்று மம்மூட்டி பேசினார்.
அப்போது அருகிலிருந்த படத்தின் இயக்குநர் ஜியோ பேபி, “இன்றைக்கு பல ஆன்லைன் கன்டென்ட் கிரியேட்டர்கள் உருவாகிவிட்டனர். என்னை பொறுத்தவரை நான் ஆன்லைன் சினிமா விமர்சனங்களை பொருட்படுத்துவதில்லை” என பேசிக்கொண்டிருக்க, அவரிடம் குறுக்கிட்ட மம்மூட்டி, “அவர்கள் செய்துவிட்டு போகட்டும். என்ன பிரச்சினை?” என கூற, ஜியோ பேபி, “ஆனால், நான் அவர்களுக்கு மதிப்பளிப்பதில்லை” என்றார்.
ஜோதிகா பேசுகையில், “கண்ணூர் ஸ்குவாட் பார்த்தேன் சிறப்பாக இருந்தது. நிறைய நடிகர்களுடன் பணியாற்றியிருக்கிறேன். ஆனால், மம்மூட்டியுடன் பணியாற்றியது ஸ்பெஷல் அனுபவம். இங்கே இருக்கிறேன் என சொல்லவில்லை. நிஜமாகவே சொல்கிறேன். அவர் மிகவும் ரிலாக்ஸான நடிகர். நிறைய வித்தியாசமான முயற்சிகளை செய்து பார்ப்பவர். அவருடன் பணியாற்றியது பெருமையாக உள்ளது” என்றார்.