
சென்னை: கடந்த 9 மாதத்தில் 8.64 லட்சம் வெளிநாட்டுசுற்றுலா பயணிகள் தமிழகம் வருகை தந்துள்ளனர்.
தமிழக சுற்றுலா துறையின் மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் திட்டப்பணிகள் குறித்த சுற்றுலா அலுவலர்களுக்கான ஆய்வுக் கூட்டம் சென்னை வாலாஜா சாலையில் உள்ளசுற்றுலாத் துறை அலுவலகத்தில் நேற்று நடந்தது. இந்த கூட்டத்துக்கு சுற்றுலாத் துறை அமைச்சர் கா.ராமசந்திரன் தலைமை தாங்கினார். அப்போது அவர் பேசியதாவது:
இந்தியாவிலேயே அதிகளவில் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் மாநிலமாக தமிழ்நாடு உருவாகி உள்ளது. அந்தவகையில், கடந்த 9 மாதத்தில் 8,64,133 வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் தமிழகம் வந்துள்ளனர். இதேபோல், 21,37,71,093 உள்நாட்டு சுற்றுலா பயணிகள் தமிழகத்துக்கு வருகை தந்துள்ளனர்.
கன்னியாகுமரி, பூம்புகார், பிச்சாவரம், ஒகேனக்கல், முட்டுக்காடு, மாமல்லபுரம், கொல்லி மலை, ஏலகிரி, திருப்பூர், குற்றாலம் உள்ளிட்ட பல்வேறு சுற்றுலா தலங்களில் வளர்ச்சி திட்ட பணிகள் பல கோடி ரூபாய் மதிப்பீட்டில் நடைபெற்று வருகிறது. அந்த பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.