National

“ஒரே நாடு, ஒரே தேர்தலை நாட்டின் நலன் கருதி அனைத்து கட்சிகளும் ஆதரிக்க வேண்டும்” – ராம்நாத் கோவிந்த் வலியுறுத்தல் | We are requesting all the parties for their constructive support to One Nation, One Election: Ramnath Kovind

“ஒரே நாடு, ஒரே தேர்தலை நாட்டின் நலன் கருதி அனைத்து கட்சிகளும் ஆதரிக்க வேண்டும்” – ராம்நாத் கோவிந்த் வலியுறுத்தல் | We are requesting all the parties for their constructive support to One Nation, One Election: Ramnath Kovind


ரேபரேலி (உத்தரப்பிரதேசம்): ஒரே நாடு, ஒரே தேர்தலை நாட்டின் நலன் கருதி அனைத்து அரசியல் கட்சிகளும் ஆதரிக்க வேண்டும் என்று முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வலியுறுத்தியுள்ளார்.

உத்தரப் பிரதேசத்தின் ரேபரேலியில் முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, ஒரே நாடு; ஒரே தேர்தல் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த அவர், “ஒரே நாடு, ஒரே தேர்தல் தொடர்பாக மத்திய அரசு ஓர் உயர்மட்ட குழுவை நியமித்தது. அதற்கு நான் தலைவராக நியமிக்கப்பட்டேன். ஒரே நாடு, ஒரே தேர்தல் என்பது ஏற்கெனவே இருந்தது. அந்த பாரம்பரியத்தை மீண்டும் கொண்டு வருவது தொடர்பாக உயர்மட்டக் குழு, பொதுமக்களுடன் இணைந்து அரசுக்கு தங்கள் ஆலோசனைகளை வழங்கும்.

நாட்டின் அனைத்து தேசிய கட்சிகளுடனும் நான் பேசினேன். அவர்களின் கருத்துகளைக் கேட்டேன். ஏதோ ஒரு கட்டத்தில் அனைவருமே இதற்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். அனைத்து அரசியல் கட்சிகளும் நாட்டின் நலன் கருதி இதனை உறுதியுடன் ஆதரிக்க வேண்டும் என்று நாங்கள் கேட்டுக்கொள்கிறோம். இந்த விவகாரம் முழுக்க முழுக்க நாட்டின் நலன் சார்ந்தது” என ராம்நாத் கோவிந்த் தெரிவித்தார்.

பின்னணி: ஒரே நாடு; ஒரே தேர்தல் தொடர்பாக மத்திய சட்ட அமைச்சகம் கடந்த செப்டம்பர் 2-ம் தேதி வெளியிட்ட அரசாணையில் கூறியிருப்பதாவது: 1951 முதல் 1967 வரை மக்களவை, சட்டப்பேரவைகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தப்பட்டது. பின்னர் இந்த நடைமுறை சீர்குலைந்தது. தற்போது ஒவ்வோர் ஆண்டும் ஏதாவது தேர்தல் நடத்தப்பட்டு வருவதால் செலவு அதிகரிப்பதுடன், அரசு ஊழியர்கள், பாதுகாப்புப் படை வீரர்களின் அலுவல்கள் பாதிக்கப்படுகின்றன. தேர்தல் நடத்தை விதிகள் அடிக்கடி அமல்படுத்தப்படுவதால், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படுகிறது.

எனவே, மத்திய சட்ட ஆணையம் இதுகுறித்து ஆய்வுசெய்து `ஒரே நாடு, ஒரே தேர்தல்’ திட்டத்தை மீண்டும் அமல்படுத்த பரிந்துரைத்தது. இந்நிலையில், இந்த திட்டத்தை ஆய்வுசெய்ய மத்திய அரசு சார்பில் உயர்நிலைக் குழு அமைக்கப்படுகிறது. `எச்எல்சி’ என்று அழைக்கப்படும் இக்குழுவின் தலைவராக முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் செயல்படுவார். மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, மக்களவையில் அதிக எம்.பி.க்களைக் கொண்ட எதிர்க்கட்சியின் (காங்கிரஸ்) தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, மாநிலங்களவை முன்னாள் தலைவர் குலாம் நபி ஆசாத், நிதி ஆணைய முன்னாள் தலைவர் என்.கே.சிங், மக்களவை முன்னாள் செயலர் சுபாஷ் கே காஷ்யப், மூத்த வழக்கறிஞர் ஹரிஷ் சால்வே, முன்னாள் ஊழல் கண்காணிப்பு ஆணையர் சஞ்சய் கோத்தாரி ஆகியோர் குழு உறுப்பினர்களாக செயல்படுவர்.

மத்திய சட்ட அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால், எச்எல்சி கூட்டங்களில் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்பார். மத்திய சட்டத் துறை செயலர் நிதின் சந்திரா, எச்எல்சி குழுச் செயலராகப் பணியாற்றுவார். மக்களவை, சட்டப்பேரவை, மாநகராட்சி, பஞ்சாயத்து அமைப்புகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது குறித்து எச்எல்சி குழு ஆய்வு செய்யும். இவ்வாறு அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பை அடுத்து, இந்தக் குழுவில் இடம்பெற ஆதிர் ரஞ்சன் சவுத்ரி மறுத்துவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.





Source link

W2L
About Author

W2L

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *