அகமதாபாத்: ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரின் இறுதி ஆட்டத்தில் இந்திய அணி 6 விக்கெட்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவிடம் தோல்வி அடைந்து பட்டம் வெல்லும் வாய்ப்பை இழந்தது. இந்நிலையில் இந்த தொடரின் சிறந்த அணியை தேர்வு செய்து ஐசிசி வெளியிட்டுள்ளது. இதில் ரோஹித் சர்மா, விராட் கோலி, கே.எல்.ராகுல், ரவீந்திர ஜடேஜா, ஜஸ்பிரீத் பும்ரா, முகமது ஷமி ஆகிய 6 இந்திய வீரர்கள் இடம் பெற்றுள்ளனர்.
தொடக்க வீரராக தென் ஆப்பிரிக்காவின் குயிண்டன் டி காக் தேர்வு செய்யப்பட்டுள்ளார். அவர், உலகக் கோப்பை தொடரில் 594ரன்கள் குவித்திருந்தார். மற்றொருதொடக்க வீரராகவும், கேப்டனாகவும், ரோஹித் சர்மா தேர்வு செய்யப்பட்டுள்ளார். அவர், உலகக் கோப்பை தொடரில் 11 ஆட்டங்களில் 54.27 சராசரியுடன் 597 ரன்கள் குவித்திருந்தார். இதில் ஒரு சதம், 3 அரை சதங்கள் அடங்கும்.
இவர்களை தொடர்ந்து பேட்டிங் வரிசையில் 3-வது வீரராக 765 ரன்கள் வேட்டையாடிய விராட் கோலி தேர்வாகி உள்ளார். அவருக்கு அடுத்த இடத்தில் நியூஸிலாந்தின் டேரில் மிட்செல் (552) இடம் பெற்றுள்ளார். விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக கே.எல்.ராகுல்தேர்வாகி உள்ளார். அவர், உலகக்கோப்பை தொடரில் 75.33 சராசரியுடன் 452 ரன்கள் எடுத்திருந்தார். ஆல்ரவுண்டர்களாக இந்தியாவின் ரவீந்திர ஜடேஜா, ஆஸ்திரேலியாவின் கிளென் மேக்ஸ்வெல் இடம் பெற்றுள்ளனர். ஜடேஜா பேட்டிங்கில் 120 ரன்களையும், பந்து வீச்சில் 16 விக்கெட்களையும் கைப்பற்றி இருந்தார். மேக்ஸ்வெல் பேட்டிங்கில் 400 ரன்களையும், பந்து வீச்சில் 6 விக்கெட்களையும் வீழ்த்தியிருந்தார்.
சுழற்பந்து வீச்சாளராக 23 விக்கெட்கள் கைப்பற்றிய ஆஸ்திரேலியாவின் ஆடம் ஸம்பா தேர்வாகி உள்ளார். வேகப்பந்து வீச்சாளர்களாக 20 விக்கெட்கள் வீழ்த்திய ஜஸ்பிரீத் பும்ரா, 21 விக்கெட்கள் கைப்பற்றிய இலங்கையின் தில்ஷான் மதுஷங்கா, 24 விக்கெட்கள் வேட்டையாடிய முகமது ஷமி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
அணி விவரம்: ரோஹித் சர்மா (கேப்டன்), குயிண்டன் டி காக், விராட் கோலி, டேரில் மிட்செல், கே.எல்.ராகுல், கிளென் மேக்ஸ்வெல், ரவீந்திர ஜடேஜா, ஜஸ்பிரீத் பும்ரா, தில்ஷான் மதுஷங்கா, ஆடம் ஸம்பா, முகமது ஷமி, ஜெரால்டு கோட்ஸி (12-வது வீரர்)