சென்னை: ஏ.ஆர்.ரஹ்மான் இசை நிகழ்ச்சி ஏற்பாட்டில் நடைபெற்ற குளறுபடியால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதையடுத்து ஐபிஎஸ் அதிகாரியான துணை ஆணையர் தீபா சத்யன் கட்டாய காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளார்.
இசை அமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான், சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள பனையூரில் உள்ள தனியாருக்கு சொந்தமான இடத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இசை நிகழ்ச்சி நடத்தினார். இங்கு ஏராளமான ரசிகர்கள் ஒரே நேரத்தில் திரண்டதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
ரூ.2 ஆயிரம் முதல் ரூ.15 ஆயிரம் வரை கொடுத்து டிக்கெட் வாங்கிய பல ரசிகர்களுக்கு இருக்கைகள் கிடைக்காமல் அலைக்கழிக்கப்பட்டனர். கூட்டத்துக்குள் சிக்கி வெளியே வர முடியாமல் பெண்கள், முதியவர்கள் என பல தரப்பினரும் திணறினர். வடநெம்மேலியில் நடைபெற்ற திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்று சென்னை திரும்பிக் கொண்டிருந்த முதல்வர் மு.க.ஸ்டாலினின் வாகனமும் நெரிசலில் சிக்கிக் கொண்டது.
ஒட்டுமொத்தத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் இசை நிகழ்ச்சி ஏற்பாட்டில் ஏற்பட்ட குளறுபடி காரணமாக இசிஆர் எனப்படும் கிழக்கு கடற்கரை சாலை, ஓஎம்ஆர் என்றுஅழைக்கப்படும் பழைய மகாபலிபுரம் சாலையில் போக்குவரத்து முற்றிலும் முடங்கியது. இதனால், வாகன ஓட்டிகளும், பொது மக்களும் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.
இதையடுத்து ஏ.ஆர்.ரஹ்மான் இசை நிகழ்ச்சியின்போது நெரிசல் மற்றும் அதிகமான கூட்டத்துக்கான காரணங்கள், வாகனங்கள் நிறுத்துமிடம், மருத்துவ வசதிகள், நியமிக்கப்பட்ட தன்னார்வலர்கள் மற்றும் இசை நிகழ்ச்சி தொடர்பாக செய்யப்பட்டிருந்த ஏற்பாடுகள் குறித்து முழுமையாக விசாரணை நடத்த டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவிட்டார். இதையடுத்து, தாம்பரம் காவல் ஆணையர் அமல்ராஜ் நேற்று முன்தினம் நேரில் சென்றுவிசாரணை மற்றும் ஆய்வு மேற்கொண்டார். அந்த அறிக்கையை டிஜிபிக்கும் அனுப்பி வைத்தார்.
இந்நிலையில் நிகழ்ச்சி நடைபெற்ற காவல் எல்லைக்கு உட்பட்ட பள்ளிக்கரணை காவல் மாவட்ட துணை ஆணையரான ஐபிஎஸ் அதிகாரி தீபா சத்யன் அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டு கட்டாய காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளார்.
போக்குவரத்து நெரிசல்: இதேபோல், சென்னை கிழக்குமண்டல காவல் இணை ஆணையரான ஐபிஎஸ் அதிகாரி திஷாமித்தலும் கட்டாய காத்திருப்பு பட்டியலில் வைக்கப்பட்டுள்ளார். வள்ளுவர் கோட்டத்தில் நேற்று முன்தினம் மாலை பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தலைமையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதே இதற்கு காரணம் என கூறப்படுகிறது.
இதுமட்டும் அல்லாமல் சென்னை அறிவுசார் சொத்துரிமை அமலாக்கப்பிரிவு ஐபிஎஸ் அதிகாரியான எஸ்.பி. ஆதர்ஸ் பச்சேரா, திருநெல்வேலி கிழக்கு துணை ஆணையராக மாற்றப்பட்டுள்ளார். இந்த 3 அதிகாரிகளின் மாற்றத்துக்கான உத்தரவை தமிழக உள்துறை செயலர் பி.அமுதா பிறப்பித்துள்ளார்.